இந்திய அரசியலமைப்பில் உள்ள பெரும்பிழை!

உபி தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில்,

பாரதிய ஜனதா (BJP) 39.7%,

பகுஜன் சமாஜ் கட்சி (BSP) 22.2%,

சமாஜ்வாடி கட்சி (SP) 21.8%,

காங்கிரஸ் 6.2%

வாக்குகளை பெற்றுள்ளன. ஆக இந்திய தேர்தல் முறைப்படி அனைத்து வியூகங்களும் வகுத்து, இப்போது பாஜக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மோடி அலை மோடி அலை என்று கூறுவதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் 39.7% மக்கள் மட்டுமே பாஜகவை வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். மீதமுள்ள 60.3% சதவீதம் (பாதிக்கு மேல்) மக்கள் பாஜக வேண்டாம் என்றே வாக்களித்துள்ளனர். ஆக, பெரும்பான்மை மக்கள் வேண்டாம் என்று கூறிய கட்சியைத்தான் இந்திய தேர்தல் ஆணையம் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது.

இதற்குக் காரணம் நம் தேர்தல் முறையிலுள்ள ஒரு மிகப்பெரும் பிழை. உதாரணத்திற்கு 1000 வாக்காளர்கள் உள்ள ஒரு தொகுதியில் பத்து வேட்பாளர்கள் நிற்பதாக வைத்துக்கொள்வோம். அதில் ஒவ்வொரு வேட்பாளரும் 91, 93, 95, 97, 99, 101, 103, 105, 107, 109 என வாக்குகளை பெற்றுள்ளதாக வைத்துக்கொள்வோம். ஆக இந்திய தேர்தல் முறைப்படி அந்த 109 வாக்குகளை பெற்ற வேட்பாளரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். ஆனால் உண்மையில் சுமார் 89 சதவீத மக்கள் வேண்டாம் என்று நிராகரித்த ஒரு வேட்பாளரே அந்த தொகுதிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் பிரதிநிதி என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? மேலும், வெற்றி பெற்ற அந்த வேட்பாளர் 89% மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்று நன்கறிந்த பிறகும் அந்த பிரதிநிதி எப்படி அந்த தொகுதி மக்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் சேவை செய்வார் என்று எதிர்பார்க்க முடியும்? பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை நசுக்கி குறைவான வாக்குகள் பெற்றவரை ஆட்சியில் அமரவைப்பது சரியானதல்ல. இப்படிப்பட்ட பிழையுள்ள அரசியலமைப்பு சட்டத்தில் தான் நம் நாட்டில் அனைத்து தேர்தல்களும் நடக்கின்றன.

இதைக்கேட்ட உடன், இவன் இந்திய அரசியலமைப்பு பற்றியே குறை கூறுகிறான், இவன் தேசதுரோகி டா என்று ஒரு கூட்டம் கிளம்பும். மக்களுக்காக தான் அரசும் அரசியலமைப்புமே அன்றி அரசியலமைப்பிற்காக மக்கள் இல்லை. தேவைப்படும்போது மற்றும் மக்கள் விரும்பும்போது மாற்றியமைக்க முடியாத அரசியலமைப்பு நிச்சயமாக சிறந்த அரசியலமைப்பாக இருக்க முடியாது.

இதற்கு என்ன முடிவு? அப்போது அந்த பத்து நபர்களில் யார் தான் வெற்றிபெற்றவர் என்ற கேள்வி எழலாம். அதற்கு நம் அரசியலமைப்பு முறையில் பெரும் மாறுதலை கொண்டுவர வேண்டும். விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை (proportional representation) பற்றி படியுங்கள். இங்கு முழுதாக விவரிப்பது கடினம். முடிந்தவரை சுருக்கமாக விளக்குகிறேன்.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் அந்த பத்து நபருமே வெற்றியாளர் தான். அவரவர் எவ்வளவு சதவீதம் வாக்குகளை பெற்றார்களோ அவரவருக்கு ஆட்சியில் அவ்வளவு சதவீதம் பங்கு இருக்கும். ஆனால் அந்த முறையை அமல்படுத்துவதில் பல்வேறு வகைகள் உள்ளன. இப்போது நான் ஜெர்மனி நாட்டில் நடைமுறையில் இருக்கும் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை பற்றி மட்டும் விளக்குகிறேன்.

நம் நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பது போல் ஜெர்மனியில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். மேலும் நம் நாட்டில் உள்ளது போல் அங்கும் இரண்டு அவைகள் உள்ளன (நம் நாட்டில் ராஜ்ய சபா மற்றும் லோக் சபா போல்). ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு வாக்காளரும் இரண்டு வாக்குகளை செலுத்தவேண்டும் (இரண்டு அவைக்கும் ஒன்றொன்று). ஒரு அவையில் ஒவ்வொரு தொகுதிக்கும் யார் தங்கள் தொகுதிக்கு பிரதிநிதியாக வரவேண்டும் என்று ஒரு வாக்கு செலுத்த வேண்டும். இன்னொரு வாக்கு யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்காக செலுத்தவேண்டும். உதாரணத்திற்கு மேலவை, கீழவை என்று வைத்துக்கொள்வோம். மேலவையில் ஒவ்வொரு தொகுதிக்கும் நம் நாட்டில் உள்ளது போல் தங்கள் வேட்பாளரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். கீழவையில் மக்கள் தங்கள் வேட்பாளருக்கு பதில் தாங்கள் விரும்பும் கட்சியை தேர்தெடுக்க வேண்டும். இந்த அவை தான் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கட்சிகள் மட்டுமே அந்த அவைக்கு போட்டியிட முடியும். மக்கள் ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு வாக்குகளை செலுத்தி இருக்கிறார்கள் என்பதை பொருத்து அந்தந்த கட்சிக்கு அவ்வளவு சீட்டுகள் ஒதுக்கப்படும். அந்த சீட்டுகளை அந்த கட்சிகள் தாங்கள் விரும்பும் பிரதிநிதிகளை நிரப்பிக்கொள்ளலாம்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அந்த இரண்டு அவைகளும் தான் ஆட்சி நடத்தும். எனவே ஒரு கட்சி வெறும் ஒரு சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தால் ஆட்சியில் அவர்களுக்கு ஒரு சதவீத பங்கு இருக்கும். முக்கிய முடிவுகள் அனைத்தும் அந்த பிரதிநிதிகள் வாக்களித்து தான் முடிவு செய்வார்கள். ஒரு கட்சிக்கு நான்கு பிரதிநிதிகளை அந்த அவைக்கு அனுப்பும் அளவு பலம் பெற்றிருந்தால் அவர்கள் நான்கு பிரதிநிதிகளை அனுப்புவார்கள். அவர்களுள் ஒருவர் ஊழல் செய்தோ, இறந்துபோனாலோ அக்கட்சி அவருக்கு பதில் வேறு பிரதிநிதி அனுப்பிக்கொள்ளலாம். ஆக அந்த நான்கு ஆண்டுகளுக்கு அந்த கட்சிக்கு நான்கு உறுப்பினர் என்பது மட்டுமே தேர்தலில் உறுதி செய்யப்படுகிறது. இது தவிர அந்த தொகுதிக்கு பிரதிநிதி என்று தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பிய மேலவை உறுப்பினர்கள் அந்த தொகுதி பிரச்சனைகள் பற்றிய முடிவுகளை மட்டுமே எடுக்கும் முடியும். ஆட்சியில் முக்கிய முடிவுகளை எடுப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை பார்த்துக்கொள்ளும். ஒரு சதவீத வாக்குகளை பெற்று நம் நாட்டில் தோல்வியுற்றதாக அறிவிக்கப்படும் கட்சிகள் ஏராளம். ஆனால் அவர்களுக்கு ஒட்டுமொத்த மக்கள்தொகையில் ஒரு சதவீத மக்கள் ஆதரவு தரும் வாக்குகள் வீண் மட்டுமே. அவர்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. (உண்மையில் இப்படி நசுக்கப்படும் வாக்குகள் தான் வெற்றிபெற்ற வாக்காளரின் வாக்குகளை விட அதிகம்). ஆனால் விகிதாசார தேர்தல் முறையில் யாருடைய வாக்குகளும் வீணாகாது.

இது போல் நம் அரசியலமைப்பு முறையில் பல்வேறு குறைகள் இருக்கின்றன. எந்தவொரு முறையும் முழுவதும் சிறந்ததாக இருந்துவிட முடியாது. படிப்படியாக பல்வேறு சீர்த்திருங்களின் முடிவில் தான் ஒரு நல்ல முறை என்பது சாத்தியம்.

ஒரு அரசியல் வாதியால் இரண்டு இடங்களில் தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால் நாம் இரு இடங்களில் இருந்து வாக்களிக்க முடியாது. நீங்கள் சிறையில் இருந்தால் உங்களுக்கு ஓட்டுரிமை இல்லை. ஆனால், அரசியல் வாதி சிறையில் இருந்து கொண்டே தேர்ல்தலில் போட்டி இடலாம். நீங்கள் ஒரு முறை சிறை வாசம் அனுபவித்து விட்டால் அரசாங்க வேலையை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. அதே நேரம் அரசியல்வாதி பல முறை சிறை சென்றிருந்தாலும் பிரதம மந்திரியாகவோ ஏன் ஜனாதிபதி கூட ஆகலாம். ஒரு வங்கியில் சாதாரண வேலைக்கு பட்டதாரியாக இருக்க வேண்டும். ஆனால் கல்வி அறிவே இல்லை என்றாலும் அரசியல்வாதியால் இந்தியாவின் நிதி அமைச்சர் கூட ஆக முடியும். அரசியல்வாதி கைகளில் சட்டம் கொடுத்தால் அவர்களுக்கு சாதகமாகவே அனைத்து சட்டங்களும் அமைத்துக்கொள்கின்றனர். ஒரு நிறுவனத்தின் தலைவர் சரியாக பணி புரியவில்லை என்றால் அவரை நீக்கும் அதிகாரம் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு உண்டு. ஒரு நாட்டின் தலைவர் சரி இல்லை என்றால் அவரை நீக்கும் உரிமை மற்றும் அதிகாரம் மக்களுக்கு வேண்டும்.

மோடி அலையும் இல்லை. மண்ணாங்கட்டி அலையும் இல்லை. எதிர்க்கட்சிகளின் பலவீனங்களையும் தேர்தல் முறையில் உள்ள இந்த பெரும் ஓட்டையையும் நன்கறிந்து வியூகங்கள் வகுத்தமையாலும் தான் இந்த தேர்தல் என்னும் சதுரங்கத்தில் அவர்களால் வெற்றி பெற முடிந்தது. அறுபது சதவீத மக்கள் வேண்டாம் என்று நிராகரித்த நிலையில் எப்படி இது மோடி அலையாக இருக்க முடியும்?

Suppressing the voices of majority of people and then telling that it’s a democracy cannot be a good democracy. Till then, Jai Demockrazy!

உங்கள் கருத்துகளை கீழே பகிரவும். மேலும் இதற்கு நீங்கள் உடன்பட்டால் நண்பர்களுடன் பகிரவும். நன்றி.

One Comment Add yours

What do you feel about this?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s