தவறான இந்திய பொருளாதார கொள்கை!

புதிதாக வருவாய் வழிகளை பெருக்காமல், அரசு செலவுகளுக்கு நிதி வேண்டி அரசு நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக தனியாருக்கு விற்று அந்த நிதியைக்கொண்டு திட்டங்களை போடும் பொருளாதாரக்கொள்கை மிகவும் ஆபத்தானது.

இப்படி விற்றுக்கொண்டே போனால் அரசின் வருமானமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக்கொண்டே வரும். அதனால், வருமானத்திற்கும் செலவீனத்திற்கும் இடையேயான இடைவெளியை சமாளிக்க மேலும் அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்க வேண்டி வருவது மட்டுமில்லாமல் நிதிச்சுமையை சமாளிக்க மக்களிடம் வசூலிக்கும் வரிகளை உயர்த்தவேண்டி இருக்கும். இது தொடர்ந்துகொண்டே போகும் ஒரு சுழற்சி.

ஒரு நாள், விற்பதற்கு என்று எதுவும் இல்லாமல், அரசிற்கு வருமானம் என்று தனியாக எதுவும் இல்லாமல் மக்கள் மீது வரி மேல் வரி விதித்து விலைவாசியை ஏற்றி, சாமானியனின் வயிற்றில் அடித்து அரசு இயங்க வேண்டி இருக்கும். மக்களுக்கு சோறு போட அரசு இருக்கலாம். மக்கள் தங்களின் உழைப்பால் ஒரு பிரயோஜனமும் இல்லாத அரசிற்கு உட்காரவைத்து சோறு போடும் நிலை வந்தால் அப்படிப்பட்ட அரசு இருந்தால் என்ன, இல்லாவிட்டால் தான் என்ன?

இருக்கும் வருமானவழிகளையும் தனியார்மயமாக்கிவிட்டு வரிச்சுமையை ஏற்றி ஏற்றி, அதன் மூலம் திட்டங்கள் போடுவது மட்டுமன்றி ஆயிரக்கணக்கான கோடிகளில் சிலை வைப்பது, கோடிக்கணக்கில் விளம்பரங்களுக்காக செலவிடுவது போன்ற மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல்கள் வேறு நடக்கின்றன.

உதாரணத்திற்கு பெட்ரோலை எடுத்துக்கொள்வோம். இன்றைய நிலவரப்படி உலக அரங்கில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 45 அமெரிக்க டாலர்கள். அதில் இறக்குமதிக்கான செலவு, பீப்பாய்க்கான விலை சேர்த்து மொத்த இறக்குமதி செலவு தோராயமாக 47 அமெரிக்க டாலர்கள் ஆகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.57 ரூபாய். அதை 65 ரூபாய் என்றே வைத்துக்கொள்வோம். ஆக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவையும் சேர்த்து 65*47 = 3055 ரூபாய் ஆகிறது. ஒரு பீப்பாய் என்பது தோராயமாக 159 லிட்டர்களைக்கொண்டது. ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்யின் விலை தோராயமாக 19.21 ரூபாய் ஆகிறது. அதை 20 ரூபாய் என்றே வைத்துக்கொள்வோம்.

கச்சா எண்ணெய்யின் சுத்திகரிப்பு செலவு, சுத்திகரிப்பு நிறுவனத்தின் லாபம் எல்லாம் சேர்த்து தோராயமாக ஒரு லிட்டர் எரிபொருளிற்கு 3.39 ரூபாய் ஆகிறது. போக்குவரத்து செலவு மற்றும் டீலர்களுக்கான லாபம் சுமார் 2.56 ரூபாய் (ஒரு லிட்டருக்கு). இச்செலவுகள் சேர்த்து வரிகள் விதிப்பிற்கு முன் ஒரு லிட்டரின் மொத்த விலை தோராயமாக 26 ரூபாய்.

அதன் விலையில் மத்திய கலால் வரி மற்றும் சிறப்பு கூடுதல் கலால் வரி சேர்த்து லிட்டருக்கு 21.48 ரூபாய் மத்திய அரசின் தரப்பிலிருந்து வரியாக விதிக்கப்படுகிறது. (வரி விகிதம் 16 ஜூன் 2016).

டீலர்களின் லாபம் (அல்லது கமிஷன்) 2.3 ரூபாய் லிட்டருக்கு. ஆக டீலர்களுக்கு விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரிக்கு முன் வரை ஒரு லிட்டர் எரிபொருளின் விலை தோராயமாக 50 ரூபாய் ஆகும்.

இதில் டீலர்களுக்கு மதிப்பு கூட்டு வரியாக பெட்ரோலுக்கு 27% மற்றும் டீசலுக்கு 18% விதிக்கப்படுகிறது (மாநிலத்திற்கு மாநிலம் மதிப்பு கூட்டு வரி மாறுபடும்). மேலும் சுற்றுச்சூழல் மாசுக்காக 25பைசா கூடுதல் வரியும் விதிக்கப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மொத்த மதிப்புக்கூட்டு வரி 13.96 ரூபாய்.
எல்லா வரியும் சேர்த்து தோராயமாக ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 64 ரூபாய் ஆகிறது. ஆகிறது என்பதை விட ஆக்கப்படுகிறது என்பதே சரி. இன்றைய (29 ஜூன் 2017) நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 65.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உண்மையில் அதன் மதிப்பை விட வரியே அதிகம். மக்கள் வாங்காமலா இருந்துவிடுவார்கள் என்ற எண்ணமே இத்தகைய அநியாய வரிவிதிப்பு முறை அமலில் உள்ளதற்கு காரணம். உலக அரங்கில் எவ்வளவு தான் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததற்கு இதுவே காரணம். விலை குறைத்தால் அரசு இயங்கவே பணம் இல்லாமல் போகும். இப்படித்தான் ஒவ்வொரு பொருளுக்கும் வரி மேல் வரி விதித்து விலைவாசி கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றப்படுகிறது.

நான் ஒரு நிறுவனத்தை நடத்துகிறேன் என்றால் என் நிறுவனத்தின் லாபத்தில் 25% (என் நிறுவனத்தின் வருவாய் ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால் 30%) அரசிற்கு நிறுவன வரியாக செலுத்த வேண்டும். அது இல்லாமல் 3% கல்வி வரி செலுத்த வேண்டும். அதன் பின் என் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒவ்வொரு ஊழியனும் அவரவர் வருமானத்திற்கு ஏற்றாற்போல் 5% முதல், வருமானம் பத்து லட்சத்திற்கு மேல் இருந்தால் 30% வரை, வருமான வரியாக செலுத்த வேண்டும். மீதமுள்ள பணம் தான் அந்த ஊழியனின் செலவுக்கு. அந்த மீதமுள்ள பணத்திலிருந்து அவன் செய்யும் ஒவ்வொரு செலவுகளுக்கும் கணக்கில்லா வரிகள்: கலால் வரி (Excise Duty), மதிப்பு கூட்டு வரி (Value Added Tax or VAT), சுங்க வரி (Customs Tax), மூலதன ஆதாய வரி (Capital Gains Tax), பங்குகள் வாங்கி விற்பதற்கான Security Transactions Tax (STT), விற்பனை வரி (Sales Tax), சேவை வரி (Services Tax), பத்திரப்பதிவு வரி, சாலை வரி என பட்டியல் முடிவில்லாமல் நீள்கிறது. போதாததற்கு ஸ்வச் பாரத் வரி 0.5% மற்றும் க்ரிஷி கல்யாண வரி 0.5% என்று புதிதாக வேறு வரிகளை கொண்டுவருகின்றனர். இப்படி எந்தெந்த நிலைகளிலெல்லாம் வரிகளை கொண்டு வர முடியுமோ அவ்வளவு வழிகளிலும் வரிகள் விதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

மேலும் அனைத்து தனித்தனி வரியையும் இணைத்து இப்போது ஜிஎஸ்டி வரி என கொண்டுவரும் மத்திய அரசு பெட்ரோலுக்கும் டீசலுக்கும் ஜிஎஸ்டி வரி கிடையாது என்று அறிவித்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்று தெரியுமா?

எல்லா பொருட்களுக்கும் செய்தது போல் எல்லா வரிகளையும் இணைத்து ஜிஎஸ்டி வரியை பெட்ரோலுக்கும் டீசலுக்கும் விதிக்க வேண்டுமென்றால் அதிகபட்ச ஜிஎஸ்டி வரி விகிதமான 28% விதித்தால் கூட ஒரு லிட்டர் பெட்ரோல் 35 ரூபாயை தாண்டாது. இப்பொழுது இருக்கும் விலைக்கு நிகராக ஜிஎஸ்டி வரி விதிக்கவேண்டுமெனில் ஜிஎஸ்டி வரிவிகிதம் 100%கு மேல் விதிக்க வேண்டி இருக்கும். மக்களின் கடும் எதிர்ப்பை சந்திக்கவேண்டி இருக்கும். அதற்கு பதில் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் ஜிஎஸ்டி கிடையாது என்று அறிவிப்பது சிறந்தது என்றே மத்திய அரசு இவ்வாறு செய்துள்ளது.

ஆங்கிலேயன் உப்பிற்கு வரி விதித்ததற்காக காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்ட நம் நாட்டில் ஆங்கிலேயனை வெளியேற்ற நம் முன்னோர்கள் பட்ட பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல. எனினும் நம் முன்னோர்கள் ஆங்கிலேயனுக்கேதிராக போராடியதற்கு முக்கிய காரணங்கள்:

  1. நம் மீது நிறைய வரிகள் விதிக்கப்பட்டன.
  2. வெளிநாட்டு பொருட்களெல்லாம் நம் நாட்டில் சந்தைப்படுத்தப்பட்டன.
  3. நம் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டன.
  4. அடுத்த தலைமுறை பிள்ளைகள் மீது ஆங்கிலம் திணிக்கப்பட்டு தாய்மொழிக்கல்வியை அழிக்க முற்பட்டனர்.
  5. உள்ளூர் தொழில் மற்றும் விவசாயத்தை அழிக்க முயன்றனர்.
  6. வெளிநாட்டு மோகத்தை பரப்ப நினைத்தனர்.
  7. நம் இயற்கை வைத்தியத்தை அழித்து மேல்நாட்டு மருத்துவத்தை கொண்டு வரும் முயற்சிகள் நடந்தன.
  8. நாம் எதை உடுத்த வேண்டும், நாம் எதை உண்ண வேண்டும் என்று அவர்கள் தீர்மானிக்க முயன்றார்கள்.

ஆனால் அவை அனைத்துமே நம் நாட்டில் ஒவ்வொன்றாக இன்று அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

மேலும் ஜிஎஸ்டி வரி என்பது மாநிலங்களின் வரி வருமானத்தை பிடுங்கி அனைத்து வருமானமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழே கொண்டு வரப்பட்டு, ஒவ்வொரு மாநிலமும் நிதி தேவைக்கு மத்திய அரசையே கையேந்த வேண்டிய நிலையை உருவாக்குகின்றனர். மேலும் இது மத்தியில் ஆளும் கட்சியின் ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை தீர்மானிப்பதில் தொடங்கி, மாநிலங்களில் தேர்தல் வந்தால் மத்தியில் எந்த அரசு இருக்கிறது, அந்த கட்சிக்கே மாநில தேர்தலிலும் வாக்களித்தால் நிதி பங்கீடு சரியாக வரும் என்றெண்ணி மக்களின் வாக்களிப்பு மனப்பான்மை வரை எதிரொலிக்கும் அபாயத்தை கொண்ட ஒரு வலை பின்னப்பட்டு நாளை மறுநாள் (ஜூலை 1, 2017) நடைமுறைக்கு வருகிறது. உண்மையில் இந்த திட்டத்தை சென்ற ஆட்சியில் காங்கிரஸ் அரசு கொண்டு வர முற்பட்ட போது இதே பாஜக அதை கடுமையாக எதிர்த்து நாடாளுமன்றத்தை முடக்கியதும், அதை முன் நின்று எதிர்த்தவர் முன்னாள் குஜராத் முதல்வர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசு தன்னுடைய நிதி பற்றாக்குறையை சமாளிக்க நெடுநாள் திட்டங்களை போட்டு வரி அல்லாத வருமான வழிகளை பெருக்க வேண்டும். அப்படி செய்வதால் மக்கள் மீதி வரி குறையும், விலைவாசி குறையும், பணப்புழக்கம் அதிகரிக்கும், பொருளாதாரம் வளர்ச்சி பெரும். இதுவே மக்களுக்காக இயங்கும் அரசு செய்யவேண்டியது. இதுவே சரியான பொருளாதார கொள்கையாக இருக்க முடியும். மேலும் Make in India என்று வெளிநாட்டு நிறுவங்களை அழைத்து நம் நாட்டிலுள்ள மனிதவளத்தையும் பொருளாதார முன்னேற்ற சாத்தியக்கூறுகளையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பது தானே தவிர நம் நாட்டிற்கு எந்த வகையிலும் அது நன்மை பயக்காது. நம்மை வெறும் சந்தையாக மட்டும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து இங்கு தொழிற்சாலைகள் அமைக்க வழிவகை செய்வது ஒரு முற்போக்கான திட்டமன்று. உள்ளூர் வியாபாரிகளை முன்னேறச்செய்வதே ஒரு நல்ல அரசின் குறிக்கோளாக இருக்க முடியும்.

அந்நிய நேரடி முதலீட்டை காங்கிரஸ் அரசு கொண்டுவர முனைந்தபோது பாஜக நாடாளுமன்றத்தில் செய்தவைகளையெல்லாம் யோசித்து பார்த்தால் நகைச்சுவையாக இருக்கிறது. ஆதார், எஃப்.டி.ஐ., ஜி.எஸ்.டி., மன்ரேகா என அன்று அவர்கள் கொண்டுவர முனைந்த அனைத்தையும் எதிர்த்து, நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கி வைத்து அவை அனைத்தும் ஒவ்வொன்றாக இன்று இவர்கள் கொண்டுவருகிறார்கள். பெறும் பொருளாதார சரிவை உலகமே சந்தித்த போதிலும், 2004-2014 இந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் சராசரியாக ஆண்டிற்கு 7.7% வளர்ந்தது. காங்கிரஸ் ஆண்ட அந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ஜி.டி.பி. இரண்டு மடங்கானது. கடந்த மூன்றாண்டுகளில் ஒருமுறை கூட அந்த 7.7% வளர்ச்சியை இவர்களால் கொண்டுவர முடியவில்லை. அவர்கள் பத்தாண்டுகளுக்கு அந்த வளர்ச்சி விகிதத்தை சாத்தியப்படுத்தினர். காங்கிரஸ் அரசிற்கு வக்காலத்து வாங்க வேண்டும் என்பதல்ல. அன்று அவர்கள் கொண்டு வரும் திட்டங்களை எதிர்த்தவர்களே இன்று அவற்றை ஒவ்வொன்றாக கொண்டு வருவது வேடிக்கையாக உள்ளது.

மேலும் மத்திய அரசு இதற்கு முன் இருந்த திட்டங்களின் பெயர்களை மாற்றி புது திட்டங்கள் போல் மார்தட்டிக்கொண்டிருப்பதையும் எந்தெந்த திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன என்ற தகவல்களை அறிய இந்த பக்கத்திற்கு செல்லவும்: Programs Renamed by Modi Government

இங்கே குறிப்பிட இன்னும் நிறைய கருத்துக்கள் ஞாபகத்திற்கு வருகிறது. ஆனால் பொருளாதாரம் பற்றிய இந்த பதிவை அரசியல் பற்றியதாக மாற்ற விரும்பவில்லை.

One Comment Add yours

What do you feel about this?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s