உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 1

இணையம்! சக்கரம் தொடங்கி, நீராவி எஞ்சின், மின்சாரம், தொலைபேசி என்ற வரிசையில் இவ்வுலகில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பு. இன்று இணையம் இல்லாமல் ஏதுமில்லை என்றாகிவிட்டது. கிராமத்து பிசிஓ’வில் ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசிய காலம் போய் வீடியோகாலில் இன்று முகம் பார்த்துப் பேசுகிறோம். தினம் காலை செய்தித்தாளில் முழித்ததுப் போய் முகநூலில் விழிக்கிறோம். சமையல் குறிப்புப் புத்தகம் புரட்டி சமைத்தது போய் இன்று நாம் உண்ணும் உணவு, உண்ணுமிடம், பயணம் தொடங்கி வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதில் கூட இணையத்தின் தாக்கம் மிக அதிகம். குடும்பத்தில் விவாதித்து குழந்தைக்குப் பெயரைத் தேர்ந்தேடுப்பது போய் வாட்சாப்பிலும் பேஸ்புக்கிலும் தேடுகிறோம். மனைவி/கணவன்/பெற்றோர்/பிள்ளைகளை விட ஸ்மார்ட்ஃபோனுடன் தான் அதிகம் பேசுகிறோம்.

இவ்வளவு மாற்றங்களுக்குக் காரணமான இணையம், நம் வாழ்வை மிகவும் எளிமைப்படுத்திவிட்டது என்பதை எவரும் மறுக்கவியலாது. நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக ஒன்றிவிட்டபோதிலும், இணையத்தின் பாதகங்களை பெரும்பாலும் நாம் அறிந்துவைத்திருக்கவில்லை என்பதே உண்மை. அறிவியலின் மாபெரும் கண்டுபிடிப்பு நிகழும்போதெல்லாம் மிகப்பெரிய அளவில் வேலையிழப்பு நிகழும் என்று ஒவ்வொரு முறை ஆருடம் தெரிவித்தவர்களையெல்லாம் பொய்யாக்கி அறிவியல் மென்மேலும் வளர்ந்து கொண்டும் புதிய துறைகளையும், புதிய வேலைவாய்ப்பு சாத்தியக்கூறுகளையும் உருவாக்கிக்கொண்டே தான் வந்திருக்கிறது. இணையத்தையும் மனித சமுதாயம் அவ்வாறு கடந்துவருமா என்பதில் இருவேறு கருத்துகள் இருந்தாலும் தற்போது அது குறித்து முன்முடிவுக்கு வராமல் பிற்காலத்தில் இணையம் எவ்வாறு மனிதசமுதாயத்தை மாற்றியமைத்தாலும், இந்நாளிலே இணையம் மனித சமுதாயத்தை எவ்வாறு தவறாக பணயம் கொண்டுள்ளது என்பதையும், மேகக்கணிமை, செயற்கை அறிவாற்றல், தானியங்கு எந்திரங்கள் என அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வரும் இணையத்தின் இன்னொரு இருண்ட முகத்தையும் பற்றிய இந்த வலைப்பதிவுத்தொடர் – எத்தனை பதிவுகள் தொடரும், எவ்வளவு நாட்களுக்கொருமுறை பதிவு வரும் என்பதெல்லாம் முடிவு செய்யவில்லை. எனினும் அதிகபட்சம் வாரமொருமுறையும் குறைந்தபட்சம் பத்து தினங்களுக்கொரு முறையேனும் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். இணையம் என்பதும் கணிப்பொறி அறிவியல் என்பதும் சற்றே வெவ்வேறு துறையென்றாலும் இத்தொடரில் இணையம், கணிப்பொறி அறிவியல் மற்றும் இவை ஏற்படுத்தும் தாக்கம், அவை சார்ந்த வர்த்தகம், சமூகச்சூழல் குறித்தும் சாமானியனுக்கும் புரியும் வகையில் எழுதுகிறேன்.

எந்த அறிவியல் கண்டுபிடிப்பையோ தொழில்நுட்பத்தையோ நல்லவை, கெட்டவை என வரையறுக்க முடியாது. எந்தத் தொழில்நுட்பமென்றாலும் அது நன்மை பயப்பதும், தீமை பயப்பதும் அத்தொழில்நுட்பம் யாரின் கட்டுப்பாட்டிலுள்ளது என்பதைப்பொறுத்தே தவிர, தன்னிடத்தே நல்லது/கெட்டது என எவ்வித பாகுபாடுமற்றது. இணையமும் அப்படியே. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நொடிப்பொழுதில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் இணைய தொழில்நுட்பம் பெரும்பாலும் அமெரிக்க பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது. இணையத்திற்கு முதன்முதலில் வித்திட்டதும் அமெரிக்கா தான். இன்றைக்கு நாம் அனுபவிக்கும் இணையமானது முதன்முதலில் அமெரிக்க பாதுகாப்புத்துறையில் அவர்களின் தேவைக்காக தயாரிக்கப்பட்ட ஓர் திட்டமாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இன்று நாம் பயன்படுத்தும் Google Maps உள்ளிட்ட இதர மேப் சேவைகளில் நாம் எங்கிருக்கிறோம் எனக்கண்டறிய உதவும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) சேவையும் அமெரிக்க அரசாங்கத்திற்கு சொந்தமான திட்டமே. அமெரிக்க ராணுவ தேவைகளுக்காக செயற்கைக்கோள்கள் மூலம் துவங்கப்பட்ட அத்திட்டம் பின்னாளில் உலகம் முழுதும் பொதுமக்கள் யாவரும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் அமெரிக்க நிறுவனங்கள் இணைய தொழில்நுட்பத்தில் கோலோச்சுவதற்கும் அடிப்படையாக அமைந்தது.

பின்னாளில் அமெரிக்க அரசு அச்சேவைகளை மக்களை உளவு பார்க்கும் ஒரு கருவியாக உபயோகிக்கத்தொடங்கியது. அமெரிக்க அரசு தொடங்கி உலகின் பல்வேறு அரசாங்கங்கள் எந்தளவிற்கு அத்துமீறல்களை மேற்கொண்டுள்ளன என இவ்வுலகிற்கு அம்பலப்படுத்தியவர்களில் இரண்டு முக்கியமானவர்களைப்பற்றி நான் இங்கே குறிப்பிட வேண்டும். ஒருவர், உலகின் பல்வேறு அரசுகளின் பல்வேறு அரச வன்முறைகளையும் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தி பல நாட்டு அரசுகளால் தேடப்பட்டு வரும் விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜூலியன் அச்சாஞ்சே.

RUEDA_DE_PRENSA_CONJUNTA_ENTRE_CANCILLER_RICARDO_PATIÑO_Y_JULIAN_ASSANGE_-_14953880621.jpg
ஜூலியன் அஸ்ஸாஞ்சே (படம்: விக்கிப்பீடியா)

உலகம் முழுவதுமிருந்து பல இணைய போராளிகள் (Whisteblowers)இன் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களை பொதுவெளியில் பாதுகாப்பாக அம்பலப்படுத்தும் வகையில் விக்கிலீக்ஸ் எனும் நிறுவனத்தை தொடங்கிய அஸ்ஸாஞ்சே, தனது விக்கிலீக்ஸ் மூலம் அம்பலப்படுத்தியவற்றில் சில:

 • 2010ஆம் ஆண்டு ஈராக் போரில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் ஆயுதமற்ற ஈராக் பொதுமக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுத்தள்ளும் காணொளியை முதன்முதலில் விக்கிலீக்ஸ் வெளியிட்டு அமெரிக்க ராணுவத்தின் முகத்திரையை கிழித்தது.
 • சாம்சங் ஸ்மார்ட் டிவிக்களை ஹேக் செய்து அவற்றை மைக்ரோபோனாக மாற்றி, உலகம் முழுதும் சாம்சங் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை ஒலிப்பதிவு செய்யும் ரகசிய உளவு எந்திரங்களாக மாற்ற அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை (Central Intelligence Agency) – CIAவிற்கு பிரிட்டிஷ் அரசு உதவியது குறித்த ஆவணங்கள்.
 • ஒரு சிஸ்டம்/நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்டாலும் ஹேக் செய்யப்பட்டதற்கான அடையாளம் கூட இல்லாதவாறு, ஹேக் செய்யப்பட்ட சிஸ்டம் தொடர்ச்சியாக எந்த தடயமுமின்றி CIAவிற்கு தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கும் வகையில் அமெரிக்காவின் CIA பொறியாளர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதையும், உலகம் முழுதுமிருக்கும் கணிப்பொறிகளையும், ஆண்ட்ராய்டு, ஐபோன் ஸ்மார்ட்ஃபோன்களையும், சர்வர்களையும், ஸ்மார்ட் தொலைக்காட்சிகளையும் CIA ஹேக் செய்யப் பயன்படுத்தும் அதிநவீன மென்பொருள்களின் மூல நிரல் (source code)களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.
 • இன்று உலகையே உலுக்கும் தீவிரவாத அமைப்பான ISIS/ISIL உருவாக மூலக்காரணமாக அமெரிக்காவின் CIA இருந்ததற்கான ஆதாரங்கள், ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர் அத்துமீறல்கள் என 1979 தொடங்கி அமெரிக்கா, உலகம் முழுதும் நடத்திய அரசியல் சூழ்ச்சிகள், பொருளாதார அழுத்தங்கள் என இதுவரை விக்கிலீக்ஸ் 40 லட்சத்திற்கும் மேலான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. (ISIS தீவிரவாத அமைப்பை அமேரிக்கா தான் உருவாக்கியது என்பதற்கான ஆதாரங்களை Anonymous உள்ளிட்ட பல ஹேக்கிங் குழுக்களும் அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது).

தற்போது ஈக்குவடார் நாட்டின் குடியுரிமைப் பெற்று லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் பெற்றுள்ள அஸ்ஸாஞ்சே அந்த தூதரகத்தை விட்டு வெளியே வந்தால் கைது நடவடிக்கைக்குள்ளாவார் எனும் சூழல் நிலவுகிறது.

அஸ்ஸாஞ்சேவிற்கு அடுத்ததாக முக்கிய இணையப்போராளியாக கருதப்படுபவர் அமெரிக்காவின் CIAவில் வேலை செய்து, மக்களின் தரவுகளை எந்த அளவிற்கு அமெரிக்க அரசு உளவு பார்க்கிறது என்பதை உணர்ந்து அதற்கான ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தி அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளியாகவும் தேசத்துரோகியாகவும், பலரால் ஹீரோவாகவும் கருப்படும் முன்னாள் CIA உளவாளி எட்வர்ட் ஸ்நோடன்.

எட்வர்ட் ஸ்நோடன் (படம்: விக்கிபீடியா)

பல கோடி அமெரிக்கர்களின் அன்றாட தொலைபேசி உரையாடல்களை வேரிசான் (Verizon) உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அமெரிக்க புலனாய்வு நிறுவனத்திற்கு அன்றாடம் தந்தாக வேண்டும் என்ற ரகசிய நீதிமன்றத் தீர்ப்பு பற்றியும், பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட், யாஹூ உட்பட ஒன்பது பெரிய இணைய நிறுவனங்களினுடைய பல கோடி பயனாளர்களின் இணையப்பயன்பாட்டை கண்காணிக்கும் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு முகமை (National Security Agency)இன் ப்ரிசம் (PRISM) எனப்படும் வெகுஜன கண்காணிப்புத் திட்டம் பற்றியும் ஆதார ஆவணங்களுடன் பொதுவெளியில் அம்பலப்படுத்தியவர் ஸ்நோடன்.

NSAவின் PRISM என்பது இவ்வுலகில் எந்த மூலையிலிருந்து எவர் எவருக்கு எந்தத் தகவல்களை அனுப்பினாலும் அதை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA) உளவு பார்க்கும் அதிகாரத்தையும் அதற்கான உட்கட்டமைப்பையும் NSAவிற்கு வழங்கிய ஒரு திட்டம். அமெரிக்க இணைய நிறுவனங்கள் தங்களின் பயன்பாட்டாளர்களின் அனைத்து விவரங்களையும் அன்றாடம் NSAவிற்கு வழங்கியே ஆக வேண்டும். இதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேஸ்புக், வாட்சாப், ட்விட்டர், கூகுள், ஆப்பிள் ஆகிய நிறுவங்களின் தரவுகளும் அடக்கம். ஒரு வேளை ஏதேனும் நிறுவனம் தகவல்களை தர மறுத்தால் அந்நிறுவனத்தின் சர்வர்களை NSA பொறியாளர்கள் அமெரிக்க சட்டத்திற்குட்பட்டே ஹேக் செய்வார்கள். சட்டங்களை மீறினாலும் அது நீதிமன்றத்திற்கோ பொதுவெளிக்கோ வாராது.

2

ஸ்நோடன் அம்பலப்படுத்திய சில திடுக்கிடும் முறைகேடுகள்:

 • அமெரிக்காவின் ப்ரிசம் போலவே ஐக்கிய ராஜ்ஜியம் (United Kingdom)இன் GCHQ எனப்படும் புலனாய்வு நிறுவனம் தங்கள் நாட்டு மக்களின் இணைய பயன்பாட்டை கண்காணிக்க டெம்போரா எனப்படும் திட்டத்தை 18 மாதங்களுக்கும் மேல் UK அரசு செயல்படுத்திக்கொண்டிருக்கிறது என்றும், அவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள் அமெரிக்காவின் NSAவுடனும் பகிரப்பட்டு வருகிறது என்பதையும், 200 ஃபைபர் ஆப்டிக் கேபிள் நெட்வொர்க்குகளை ஹேக் செய்து, நாளொன்றுக்கு 60 கோடி தொலைத்தொடர்புகளை கண்காணிக்கும் திறனையும் கொண்டது என்பதையும் அம்பலப்படுத்தினார்.
 • NSAவும் GCHQவும் சேர்ந்து இத்தாலி நாட்டின் தொலைப்பேசி அழைப்புகளையும் இணைய பயன்பாட்டையும் உளவு பார்க்கிறது என்று ஸ்நோடன் வெளியிட்ட ஆவணங்களை உறுதிப்படுத்தும் விதமாக இத்தாலி பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன.
 • உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களையும், தூதரகங்களையும், பல நாட்டு உயர் அதிகாரிகளையும், பன்னாட்டு நிறுவனங்களையும், பல நாட்டு பிரதமர்களையும், அதிபர்களையும் குறிவைத்து உலகம் முழுதும் இதுவரை 61,000 ஹேக்கிங் செயல்பாடுகள் NSAவின் பொறியாளர்களால் அரங்கேறியுள்ளன.
 • 2014ஆம் ஆண்டு உலகம் முழுதும் நாளொன்றுக்கு பரிமாறிய 20 கோடி குறுஞ்செய்திகளை (SMS) NSA சேகரித்து வந்ததை ஸ்நோடன் அம்பலப்படுத்தினார்.

ஸ்நோடன் தற்போது ரஷ்யாவின் உதவியுடன் அந்நாட்டில் அடைக்கலம் பெற்றுள்ளார். இவ்வாறு பல அரசு ஆவணங்களும், ரகசிய ஒப்பந்தங்களும் என பல்வேறு முக்கிய தரவுகள் யாவும் ஹேக் செய்யப்பட்டு பொதுவெளியில் அம்பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தனிமனித தரவுகளும், தனிமனிதனாக நம் அன்பிற்குரியோருடன் நடக்கும் உரையாடல்கள் தொடங்கி, நாம் பேசுவது, கேட்பது, பார்ப்பது முதற்கொண்டு, நாம் என்ன உண்ணுகிறோம், எங்கு செல்கிறோம், அன்றாடம் என்னென்ன செய்கிறோம் என்பது வரை நம்மைச்சுற்றி நடக்கும் அனைத்தையும் எங்கோ இருக்கும் அரசுகளும், பெருநிறுவனங்களும் வேவு பார்த்துக்கொண்டும் கண்காணித்துக்கொண்டும் இருக்கும் இவ்வுலகம் எப்படிப்பட்டது? இதற்கெல்லாம் வித்திட்ட இணையம் எப்படிப்பட்டது?!

ஆதார் தொடங்கி, கூகுள், ஆண்டிராய்டு, ஐபோன் ஸ்மார்ட்ஃபோன்கள், சமூக ஊடகங்களான பேஸ்புக், ட்விட்டர் முதற்கொண்டு, இணையத்தில் நாம் கட்டணம் செலுத்தப் பயன்படுத்தும் பேடிஎம், ப்ரீச்சார்ஜ், டெஸ் (Google Tez) வரை எப்படி நம்மை கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பவற்றையும் அவற்றிலிருந்து எப்படி தப்பிப்பது என்பவற்றையும் இணையத்தால் சமூகத்தில் ஏற்பட்ட இடைவெளி (Digital Divide), இணைய நடுநிலைமை (Net Neutrality) பக்கசார்பற்ற திறந்த இணையத்தின் அவசியம் ஆகியவற்றையும் வரும் வாரங்களில் பார்க்கலாம்.

இக்கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாய் அமைந்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும். மேலும் உங்கள் கருத்துகளை கீழே பதிவிடவும். நன்றி.

இக்கட்டுரைத்தொடரின் அடுத்த பகுதிகளைப் படிக்க:

உன்னைப் பணயம் கொள்ளும் இணையம்!

 

One Comment Add yours

 1. Anonymous says:

  Good work….Long way to go…

  Liked by 1 person

What do you feel about this?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s