உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 2

முந்தையப் பதிவில் அரசாங்கங்கள் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தங்கள் நாட்டு மக்கள் மட்டுமன்றி, உலகம் முழுவதுமுள்ள முக்கியத் தலைவர்கள், நிறுவனங்கள் எனத் தங்களால் முடிந்தவரையில் அனைவரின் தகவல்களையும் திருடிக்கொண்டும் கண்காணித்துக்கொண்டும் இருப்பதை மேலோட்டமாகப் பார்த்தோம். நம்மைச்சுற்றி இவ்வாறான அத்துமீறல்கள் நடக்கின்ற வேளையில், நமக்கே தெரியாமல் நம் அனுமதிப் பெற்றத் தகவல் திருட்டுக்கு நாமும் எப்படி வழிவகுக்கிறோம் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் செயலிகள், இணையதளங்கள் யாவும் நம்மை லாவகமாக சிக்கவைக்கும் வகையிலேயே வடிவமைக்கப்படுகின்றன. இணைய சேவைகளில், கணக்குகளைத் துவக்கும் முன் Terms and Conditions எனும் விதிமுறைகள் வழங்கப்படுகின்றன. இது, நம் தகவல்களை அந்நிறுவனங்கள் எவ்வாறெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்கான ஒப்பந்தமாகும். அவைப் பெரும்பாலும் படிக்க சோர்வுறும் வகையில் குழப்பமானப் பெரியப் பத்திகளாக அமைக்கப்படுகின்றன. நாம் அவற்றிற்கு ‘I agree to the terms and conditions’ என்று ஒப்புதல் அளித்தால் மட்டுமே அக்கணக்கைத் தொடங்க முடியும். அவ்விதிமுறைகள் யாவும் எவ்வித முன்னறிவிப்புமின்றி, அந்நிறுவனங்கள் தங்களின் வசதிக்கேற்ப எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும் உரிமையையும் அவர்களுக்குத் தரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் மக்களின் தகவல்களைத் தங்கள் விருப்பத்திற்கேற்றார்போல் உபயோகிக்கத் தேவைப்படும் சட்ட அனுமதிகளையும் அந்நிறுவனங்கள் பெறுகின்றன.

ஒரு நிறுவனம், இணையச் சேவையை வழங்கும்பொழுது அச்சேவையை பயன்படுத்தும் அனைவரின் தகவல்களையும் சேகரிக்கிறது. நம் தகவல்களை Facebook, Google போன்ற நிறுவனங்கள் அதிகமாகத் திருடி வருவதாக நாம் கேள்விப்படிருப்போம். ‘அப்படி நம்மிடமிருந்து எதைத் திருடிவிட முடியும்?’ என்றுக் கேட்கலாம். எனினும் இதைத் தகவல் திருட்டு என்றே குறிப்பிட முடியாது என்பது தான் உண்மை. நாம் யாரிடம் பேசுகிறோம், என்னப் பேசுகிறோம், எங்கு செல்கிறோம், என்ன வாங்குகிறோம், என்ன உண்ணுகிறோம், எவருடன் பயணிக்கிறோம், நாம் இணையத்தில் எதைப் பார்க்கிறோம், எவ்வளவு நேரம் பார்க்கிறோம், எதைத் தேடுகிறோம், எதைப் படிக்கிறோம், நம் திட்டங்கள் என்ன என அனைத்தையும் இணைய நிறுவனங்கள் உளவு பார்த்துக்கொண்டும் திருடிக்கொண்டும் இருக்கின்றன. ஆனால் அதற்கான அனைத்து அனுமதிகளையும் நாம் தான் அந்நிறுவனங்களுக்கு வழங்கி இருக்கிறோம்.

தகவல் திருட்டு எனக்கூறுவதே சட்ட ரீதியாக தவறு தான், அதை சேகரிப்பு என்று மட்டுமே கூற முடியும் என்றாலும் நம்மிடமிருந்து சேகரிக்கப்படும்/திருடப்படும் தகவல்களுக்கு ஒரு சிறு உதாரணம். நாம் நம் ஸ்மார்ட்ஃபோனில் எண்ணற்ற புகைப்படங்களை எடுக்கிறோம். அவற்றை சமூக வலைதளங்களிலும் நண்பர்களிடமும் அதிகமாகப் பகிர்கிறோம். ஆனால் அந்த புகைப்படங்களே நம்முடையப் பல்வேறுத் தகவல்களைத் தன்னுடன் எடுத்துச்செல்கின்றன என்பது பெரும்பாலானோர் அறிவதில்லை. கேமரா லென்ஸ் கொண்ட ஒவ்வொரு சாதனமும் அவை எடுக்கும் புகைப்படங்களுடன் சில மெட்டாடேட்டா (metadata) எனப்படும் கூடுதல் தகவல்களையும் சேர்த்தே தான் புகைப்படங்களை எடுக்கின்றன. நம் ஸ்மார்ட்போனில் நாம் எடுக்கும் ஒவ்வொருப் புகைப்படமும் பல்வேறுக் கூடுதல் தகவல்களைச் சேமிக்கின்றன. எக்ஸ்இஃப் டேட்டா (Exif Data) என்று அழைக்கப்படும் இதைப்பற்றிச் சுலபமாக விவரிக்க நான் இப்போது என் ஸ்மார்ட்ஃபோனில் ஒரு புகைப்படம் எடுக்கிறேன். அதை ஈமெயில் செய்து என் மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்கிறேன். ஒரு புகைப்படத்தின் Exif Data எவற்றையெல்லாம் உள்ளடக்குகிறது என்பதைக் கண்டறிய என் நண்பர் பிரசன்னா உருவாக்கிய ஒரு சேவையைப் பயன்படுத்துகிறேன்.

IMG_20180429_190527.jpg

மேலே இருக்கும் புகைப்படத்தை http://prashere.gitlab.io/exifdata/ என்ற வலைதள முகவரியில் பதிவேற்றம் செய்கிறேன். என் புகைப்படத்தின் Exif தரவுகளின் உள்ளடக்கம் பின்வரும்  படங்களில்:

1.JPG

2.JPG

3.JPG

என்னுடைய அட்சரேகை & தீர்க்கரேகை (latitude & longitude) விவரங்கள் தொடங்கி, என்னுடைய ஸ்மார்ட்ஃபோன் விவரங்கள், ஒளி அளவு, கேமரா விவரங்கள் என ஒரு பெரும் பட்டியலே இருக்கிறது. நம்முடைய தகவல்கள் எண்ணற்ற வழிகளில் ஒவ்வொரு நொடியும் திருடப்பட்டு/சேகரிக்கப்பட்டுக் கொண்டேத் தான் இருக்கிறது.

இந்த புகைப்பட Exif Data பற்றி மேலும் அறியவும், நீங்களே ஏதேனும் ஓர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து எத்தகைய விவரங்கள் உடன் செல்கிறது என்பதை பார்க்கவும், நம்முடைய படங்களை பிற வலைதளங்களில் பகிருவதற்கு முன் அவற்றுள் பொதிந்துள்ள exif தகவல்களை நீக்கிவிட்டு பகிருவது எப்படி என்றுத் தெரிந்துக்கொள்ளவும் மேலேக் குறிப்பிட்டுள்ள முகவரியைப் பயன்படுத்தவும்.

நாம் பதிவேற்றம் செய்யும் படங்களை ஒரு வேளை, மீண்டும் நாம் பதிவிறக்கம் செய்துப் பார்த்தால் அந்த exif தகவல்களெல்லாம் நீக்கப்பட்டிருக்கும். இது தான் இணைய நிறுவனங்களின் யுக்தி. அப்புகைப்படத்தை பதிவிறக்கும் பிறர்க்கு அத்தகவல்கள் செல்லக்கூடாது என்ற பெயரில் அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். நம் படங்களைப் பிற வலைதளங்களில் பகிர்வதற்கு முன் நம் படங்களில் பொதிந்துள்ள exif தகவல்களை நீக்கிவிட்டு பகிர்தலே சிறந்தது.

Exif dataவிற்கு நிறையப் பயன்பாடுகள் இருக்கலாம். ஆனால் எத்தகையத் தகவல்கள் ஒருவரிடமிருந்து வெளியேச் செல்ல வேண்டும் என்பதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதே இங்கு மையக்கருத்து. தன்னிடமிருந்து வெளிய செல்லும் தகவல்கள் எவை என்பது ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோன்கள் நம் வாழ்வை மிகவும் எளிமைப்படுத்திவிட்டபோதிலும் அவை நம்மை 24 மணி நேரமும் கண்காணிக்கும் கண்காணிப்பு சாதனமாக மாறிவிட்டன. நம் ஸ்மார்ட்ஃபோன்கள் புகைப்படங்கள் மட்டுமன்றி, நம்மைப்பற்றி எண்ணற்ற தரவுகளைத்திரட்டி பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் அனுப்பிக்கொண்டிருக்கின்றன. அதற்கு ஓர் சிறிய உதாரணம் மட்டுமே இது.

நாம் பதிவேற்றம் செய்யும் படங்களும் காணொளிகளும், நாம் பிறருக்கு அனுப்பும் செய்திகளும் சம்மந்தப்பட்ட நிறுவனங்களால் சேகரிக்கப்பட்டு நம் தகவல்கள் பிற நிறுவனங்களுக்கு (பெரும்பாலும் விளம்பரதாரர்கள்) விற்கப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நாம் பதிவேற்றம் செய்யாமலே நம் ஸ்மார்ட்ஃபோனிலிருந்து நம்மை அறியாமல் தகவல்கள் திருடப்படுவது/சேகரிக்கப்படுவதுப் பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை.

உதாரணத்திற்கு, நாம் நம் ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தும் WhatsApp, Facebook, Facebook Messenger, Instagram போன்ற செயலிகள் நேரடியாக நாம் விரும்பும்போதெல்லாம் உடனடியாக நம் கேமராவில் புகைப்படமெடுத்து பதிவேற்றம் செய்ய வசதியாக, அதற்கான அனுமதிகளை நாம் நம் ஸ்மார்ட்ஃபோனில் வழங்கி இருக்கிறோம். WhatsApp’இல் நம் உரையாடல்களின் பட்டியல் அமைந்திருக்கும் பக்கத்திலிருந்து இடது புறம் ஸ்வைப் செய்தால் நேரடியாகக் கேமராவில் நாம் படமெடுக்கும் வகையிலானப் பக்கம் தோன்றும். ஆனால் அவ்வாறு ஸ்வைப் செய்வதற்கு முன்னும் சரி, WhatsApp செயலியையே நாம் திறக்காமலிருக்கும் போதும் சரி, நம் ஸ்மார்ட்ஃபோனில் எந்நேரமும் நம் கேமராவைப் பயன்படுத்தி நம்மையும் நம்மைச்சுற்றியும் படம்பிடித்துக்கொண்டே இருப்பதற்கு நாம் WhatsApp நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறோம் என்பதை நாம் யோசிக்கவில்லை.

WhatsApp, Facebook, Facebook Messenger, Instagram (இவை நான்குமே ஒரே நிறுவனமான Facebook’கு தான் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது), என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலானச் செயலிகள் நம்மை 24 மணிநேரமும் நம்மை அறியாமலே நாம் தூங்கும்போதும், உடை மாற்றும்போதும், பிறரிடம் பேசும்போதும் என நாம் என்ன செய்தாலும் நம்மைப் படம்பிடித்து நமக்கேத் தெரியாமல் நம் ஸ்மார்ட்ஃபோனிலிருந்து நம்முடைய டேட்டா இணைப்பைப் பயன்படுத்தியே அந்நிறுவனங்களின் செர்வர்களுக்கு நம்முடைய தரவுகளை தரவேற்றம் செய்யும் திறன் கொண்டவை என்பதே உண்மை!

உண்மையில் அவ்வளவுத் தகவல்களைப் படம்பிடித்து வெளியே அனுப்ப வேண்டுமெனில் அவ்வளவு டேட்டா பயன்பாடு இருக்க வேண்டுமே என யோசிக்கலாம். நாம் பயன்படுத்தும் செயலிகள் யாவும் அவ்வாறுத் தகவல்களை திருட/சேகரிக்க முடியும் என்பதே மையக்கருத்து. அவ்வாறு எந்தெந்த நிறுவனங்கள் தகவல்களைத் திருடுவது/சேகரிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அதற்கான ஆதாரங்கள், ஆவணங்களையும் சேகரித்து வருகிறேன். அவற்றைப்பற்றி விரிவாக வரும் வாரங்களில் தனியாக எழுதுகிறேன்.

ஆக இவ்வளவுத் தகவல்களைத் திருடி/சேகரித்து அவற்றால் அந்நிறுவனங்களுக்கு என்னப் பயன்? அத்தகவல்களைப் பயன்படுத்தி அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

நீங்கள் என்றாவது Amazon இணையதளத்திலோ செயலி மூலமாகவோ உங்களுக்கு தேவையான ஏதேனும் பொருளைப்பற்றித் தேடி, சில நிமிடங்களில் ஏதேனும் செய்தி வலைதளங்களிலோ Facebook, Twitter போன்றச் சமூக வலைதளங்களிலோ உலாவும்பொழுது, நீங்கள் முன்னதாக Amazon’இல் தேடிய அப்பொருளைப்பற்றி விளம்பரம் வருவதைக் கவனித்துள்ளீர்களா? எப்படி Amazon’இல் தேடியது Facebook நிறுவனத்திற்குத் தெரிந்தது, அதுவும் சில நிமிடங்களில், எனச் சிந்தித்துள்ளீர்களா?

இணையத்திற்கு முன்னான செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களுக்கும் இணையத்திற்குமான முக்கியமான வித்தியாசம்,  முந்தைய ஊடகங்கள் வெறும் ஒருவழித் தகவல் பரிமாற்றத்தைத் (one way communication) தான் அங்கமாகக்கொண்டவை. ஊடக நிறுவனத்திடமிருந்து பயனாளர்களுக்கு செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பரிமாறும். ஆனால் பயனாளர்களிடமிருந்து ஊடக நிறுவனங்களுக்கு எந்தத் தகவலும் பரிமாறாது. மக்கள் யாவரும் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்து வந்தார்கள். எனவே விளம்பரங்கள் பொதுவாக அனைவருக்கும், அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் தான் என்று தனியாகக் குறிவைத்து விளம்பரம் கொடுக்க முடிந்தது. ஆனால் இணையம் என்பதுப் பன்முனைத் தகவல் பரிமாற்றத்தை (many-to-many communication) அங்கமாகக்கொண்ட ஓர் மாபெரும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு. இணையத்தை மென்மேலும் வளர்ப்பது நாம் அனைவருமே தான். ஒவ்வொரு பயனாளரும், அவரிடமிருந்து வரும் தகவல்களும், என பல கோடி மனிதர்களும், எந்திரங்களும், அவர்களிடமிருந்து வரும் தகவல்களும், என அனைத்தும் இணைந்து இயங்கும் ஒரு மாபெரும் வலைப்பின்னல் தான் இணையம்!

அதனால் இணையத்தில் மற்ற ஊடகங்களைப் போல் இல்லாமல் தனி ஒருவரைக் குறி வைத்து அவருக்கு என்ன தேவை என்பதை நேரடியாகக் கண்டுபிடித்து அவருக்குத் தேவையானதை அவரிடம் விற்க முடியும். அதற்காக தான் இத்துணை தகவல் திருட்டும்/சேகரிப்பும் தற்போது பயன்பட்டு வருகிறது. (பிற்காலத்தில் இத்தகவல்கள் மேலும் ஆபத்தான அத்துமீறல்களுக்கும் வழிவகுக்கலாம்). உண்மையில் விளம்பரங்கள் தான் இணையத்தின் முதுகெலும்பு என்றால் அது மிகையாகாது. நம்மைப் பற்றியத் தகவல்கள் இணைய நிறுவனங்களால் சேகரிக்கப்பட்டு நம்மைப்பற்றி profiling செய்து நமக்கு எது தேவை உள்ளிட்டத் தகவல்களைப் பிற விளம்பர நிறுவனங்களுக்கு விற்கிறார்கள். மேலும், அரசிற்கெதிராக எவர் செயல்படுகிறார்கள் என்றத் தகவல்களைக்கண்டறிய அரசாங்கங்களுக்கே நம்மைப்பற்றியத் தகவல்கள் விற்கப்படுவதும் நடக்கிறது.

தகவல்களைத் தேட நாம் பயன்படுத்தும் Google, Bing, Yahoo தொடங்கி, காணொளிகளை கண்டு மகிழ பயன்படுத்தும் Youtube, Hotstar, Amazon Prime, Netflix முதல், நண்பர்களுடன் தரவுகளைப் பகிர்ந்துக்கொள்ளப் பயன்படுத்தும் சமூக வலைதளங்களான Facebook, Twitter, LinkedIn வரை அனைத்தும் இணைய நிறுவனங்கள் என்பதை விட இணையம் மூலம் இயங்கும் விளம்பர நிறுவனங்கள் எனக் கூறுவதே மிகச்சரியாக இருக்கும்! அந்த விளம்பரங்களை வெறுமென எவரும் வந்து பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்பதற்காக அளிக்கப்படும் சேவை தான் நாம் இணையத்தில் இலவசமாகப் பயன்படுத்தும் அனைத்துச் சேவைகளுமே! உண்மையில் அவை இலவசம் தானா? இல்லை! இல்லவே இல்லை என்பதே உண்மை. நாம் பெரும் சேவைகளுக்கு நாம் தரும் விலை, நம் தனியுரிமை (privacy)! நம் தகவல்கள்!! நம் அந்தரங்கங்கள்!!!

if-its-free-you-are-the-product.png
படம்: webdevelopersnotes.com
  • அன்றாடம் நாம் பயன்படுத்தும் Facebook, Instagram, WhatsApp, Google Search, Google Maps, GMail, Android, Google Translate என நீண்டுக்கொண்டிருக்கும் பட்டியலில் பெரும்பாலானச் சேவைகளை நாம் இலவசமாகத் தானேப் பயன்படுத்துகிறோம்? நாம் எவ்விதக்கட்டணமும் செலுத்தவில்லையெனில் இவ்வளவுச் சேவைகளுக்குமானக் கட்டமைப்புச் செலவு, பராமரிப்புச் செலவு என அனைத்து செலவீனங்களுக்கும் அந்நிறுவனங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது?
  • 46 நாடுகளில் சுமார் 4 லட்சம் ஊழியர்களைக்கொண்டு இயங்கும் இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனமான TCS, சந்தைமதிப்பில் இந்தியாவின் முதல் நூறு பில்லியன் டாலர் (100 billion USD) நிறுவனமாக ஆனதாகச் சென்ற வாரச் செய்திகளில் நாம் படித்தோம். ஆனால் வெறும் 50 ஊழியர்களை மட்டுமே கொண்ட WhatsApp நிறுவனத்தை Facebook நிறுவனம் 19 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய்) கொடுத்து வாங்கியது எதற்காக?
  • வெறும் 12,000 ஊழியர்களைக்கொண்ட ஊபர் நிறுவனத்தின் சந்தை மதிப்பு எப்படி 72 பில்லியன் டாலராக இருக்கிறது? SoftBank, சவூதி அரேபிய அரசு என பலரும் போட்டி போட்டுக்கொண்டுக் கோடிக்கணக்கில் ஊபரில் மென்மேலும் முதலீடு செய்வது எதற்காக?
  • ஒன்னரை லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவின் பெரும்பணக்காரரான முக்கேஷ் அம்பானி, ஜியோ என்ற நிறுவனத்தைத் தொடக்கி, மாதக்கணக்கில் அனைவருக்கும் இலவச அதிவேக இணையச் சேவை வழங்கியது எதற்காக?
  • இவற்றிற்கெல்லாம் என்ன தொடர்பு?

இவற்றிற்கான பதில்களையும், மேலும் அலசல்களையும் வரும் வாரங்களில் பார்ப்போம். இக்கட்டுரை உங்களுக்குப் பயனுள்ளதாய் அமைந்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும். மேலும் உங்கள் கருத்துக்களைக் கீழே பதிவிடவும். நன்றி.

முகப்புப் படம்: pixabay.com

இக்கட்டுரைத்தொடரின் முந்தைய/அடுத்த பகுதிகளைப் படிக்க:

உன்னைப் பணயம் கொள்ளும் இணையம்!

 

What do you feel about this?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s