இந்தியாவின் கிரிக்கெட் மோகம் – ஓர் அரசியல் பொருளாதாரப்பார்வை!

ஐபிஎல்! கிரிக்கெட்! பெரும்பாலான வீடுகளில் கடந்த சில வாரங்களாக அதிகம் ஒலித்துக்கொண்டிருக்கும் சொற்கள் இவை. எட்டு அணிகள். பல நாட்டு வீரர்கள். 120 பந்துகள். 60 ஆட்டங்கள். இவற்றைச் சுற்றி நடக்கும் நேரடி மற்றும் மறைமுக வர்த்தகங்கள். இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் குறித்து ஓர் அரசியல் பொருளாதாரப்பார்வை!

நம் இந்திய தேசத்தில் மற்ற அனைத்து விளையாட்டுகளையும் விட கிரிக்கெட்டிற்கு தனி மோகம் தான். காவஸ்கர், கபில் டேவ், கங்குலி, திராவிட், சச்சின், தோனி, கோஹ்லி என ஜாம்பவான்களாக மதிக்கப்படும் இதே நாட்டில் கிரிக்கெட்டை தவிர பிற விளையாட்டு வீரர்களுக்கு அவர்களுக்கான அங்கீகாரம் பெரும்பாலும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 1983ஆம் ஆண்டு, முதன்முறையாக இந்தியா கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்லும் வரை இந்தியாவில் கிரிக்கெட் அவ்வளவு பிரதானமாக பார்க்கப்படவில்லை. 1983ற்கு முன்வரை இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி தான் நம் நாட்டில் பிரதானமாகப் பார்க்கப்பட்டது.

ஹாக்கியைத் தாண்டி இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமானதற்கு சில முக்கியக் காரணிகள்:

 • ஹாக்கியைப் போல் கிரிக்கெட்டிற்கு எந்த சிறப்பு உபகரணங்களும் தேவையில்லை. தேங்காய்மட்டையும் மாங்காயும் கூட போதும்! வில்வித்தை, ஸ்குவாஷ், துப்பாக்கி சுடுதல் என பெரும்பாலான விளையாட்டுகள் சாமானியரின் கைக்கு எட்டாத வகையில் சிறப்பு உபகரணங்களைத் தேவையாகக் கொண்டவையாக இருந்தன.
 • ஹாக்கியைப்போல் கிரிக்கெட்டும் குழுவாக சேர்ந்து விளையாடும் விளையாட்டு தான் என்றாலும் ஆள் இல்லையென்றாலும் கிரிக்கெட் விளையாட வெறும் இரண்டு நபர் கூட போதுமானது. ஹாக்கியோ மற்ற குழு விளையாட்டோ அப்படியில்லை.
 • எல்லா விளையாட்டுகளையும் போல கிரிக்கெட்டிற்கும் அதற்கென்று விளையாட்டு மைதானம் தேவையென்றாலும் விரும்பிய இடத்திலெல்லாம் கூட சிறுவர்கள் கிரிக்கெட்டை விளையாட முடிந்தது. தெருமுனை, மொட்டைமாடி என எங்கு வேண்டுமானாலும் குச்சிகளை நட்டோ சுவற்றில் கோடுகள் போட்டோ கிரிக்கெட் சுலபமாக விளையாடலாம். டென்னிஸ், பேட்மிண்டன், நீச்சல் யாவற்றையும் தெருவிலோ வீட்டிலோ பெரும்பாலும் விளையாட இயலாத நிலையில், எளிமையாக சிறுவர்கள் விளையாடி பொழுதைப் போக்க கிரிக்கெட் தான் முதல் விருப்பமாக அமைந்தது.
 • இயற்கையான காரணிகள் தவிர்த்து, பிற சூழல்களும் கிரிக்கெட்டிற்கே சாதகமாய் அமைந்தது என்றே கூற வேண்டும். ஆங்கிலேயர்கள் அவர்களின் விருப்ப விளையாட்டாக கிரிக்கெட்டை விளையாடிய காரணத்தினால் அதற்கான உட்கட்டமைப்புகள் யாவும் ஆரம்ப காலத்திலேயே மற்ற விளையாட்டுகளை விடவும் மேம்படுத்தப்பட்டது. கிரிக்கெட் அகேடமிகளும், பயிற்சி மையங்களும், ஸ்போர்ட்ஸ் க்ளப்களும் மற்ற விளையாட்டுகளை விட அதிகமாக முளைத்தன.
 • எல்லாவற்றையும் விட, மற்ற விளையாட்டுகளைக்காட்டிலும் கிரிக்கெட்டிற்கு ஸ்பான்சர்களும், விளம்பரப்படுத்தல், ஊக்குவித்தல் மற்றும் சந்தைப்படுத்துதலும் சிறப்பாக இருந்தமையே இந்தியாவில் கிரிக்கெட் இவ்வளவு பிரபலமானதற்கு முக்கியக்காரணம். பெருநிறுவனங்கள் தங்களின் பொருட்களை பல கோடி மக்களிடம் எளிமையாக சந்தைப்படுத்த கிரிக்கெட் சிறந்த விளம்பரக்கருவியாக பயன்படுத்தப்பட்டது.
 • மேலும் அனைவருக்கும் தெரியாத ஓர் அதிர்ச்சிக் காரணமும் உண்டு!

இந்திய கிரிக்கெட் அணி உண்மையில் இந்திய கிரிக்கெட் அணி கிடையாது!

இந்தியாவில் அனைத்து விளையாட்டுகளும் மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் தான் இயங்குகிறது. அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பெயரால் தான் இந்தியாவின் சார்பாக உலகில் நடக்கும் அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் வீரர்கள் அனுப்பப்படுகிறார்கள். அனைத்து விளையாட்டு போட்டித்தொடர்கள், பயிற்சிகள், உபகரணங்கள், உட்கட்டமைப்பு, மைதானங்கள் கட்டுமானம், மைதானத்திற்கான வாடகை, பாதுகாப்பு செலவுகள் என அனைத்திற்கும் அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகத்திடமிருந்து தான் நிதி வழங்கப்படுகிறது. அனைத்து விளையாட்டுத்துறை அதிகாரிகள், வீரர்கள் தேர்வுக்குழு என அனைவருக்குமான ஊதியமும், ஊக்கத்தொகைகளும் அரசிடமிருந்து தான் செல்கிறது. ஊதிய/ஊக்கத்தொகை நிர்ணயம் செய்யும் அதிகாரமும் விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் தான். இது இந்தியாவில் நடக்கும் அனைத்து விளையாட்டிற்கும் பொருந்தும், கிரிக்கெட் தவிர்த்து!

தற்போது இந்திய கிரிக்கெட் அணியாகக் கருதப்படும் அணி உண்மையில் இந்திய கிரிக்கெட் அணியே கிடையாது. அது BCCI எனப்படும் தனியார் கிரிக்கெட் கிளப்பிற்கு சொந்தமான அணி மட்டுமே. விராத் கோஹ்லி தலைமையிலான இந்தியாவின் அணியென்று பெயரைக்கொண்டு தற்போது விளையாடிவரும் அணி, மற்றும் இதர பிரிவு அணிகள், ரஞ்சி பிரிவு அணிகள் என அனைத்தும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) என்று பெயரைக்கொண்ட ஓர் தனியார் கிரிக்கெட் அமைப்பின் கட்டுப்பாட்டில் தான் விளையாடுகிறது. BCCI போல் ஒவ்வொரு மாநிலத்தில் இயங்கும் கிரிக்கெட் வாரியங்களும் தனியார் அமைப்புகளாகவே இயங்குகின்றன. அவ்வாறு இயங்கும் மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கான கூட்டமைப்பாக BCCI விளங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணிகளின் அனைத்து வருமானம், உட்கட்டுமானம், மைதானங்கள் கட்டுமானம், மைதானங்களுக்கான வாடகை, பயிற்சிகளுக்கான செலவீனம், போட்டிகள் நடத்துவதற்கான செலவீனம், ஏன் போட்டிகள் நடத்துவதற்கு அளிக்கப்படும் பாதுகாப்புச் செலவுகளுக்குக் கூட காவல்துறைக்கு BCCI தான் பணம் கட்டுகிறது, ஓர் தனியார் அமைப்பு என்கிற காரணத்தால். கிரிக்கெட் துறையில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள், தேர்வுக்குழு, கிரிக்கெட் வீரர்கள், மாநில கிரிக்கெட் வாரியங்கள், மாவட்ட கிரிக்கெட் கிளப்கள், அவற்றின் செயல்பாடுகள் என இந்தியாவில் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட அனைத்திற்குமான நிதி ஆதாரம் BCCI’இடமிருந்து தான் செல்கிறது. உலகில் மிகவும் பணக்கார மற்றும் அதிக லாபம் ஈட்டக்கூடிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான BCCI, இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகளால் மட்டும் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 12,000 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி சுமார் 3,500 கோடி ரூபாயை அரசிற்கு வருமான வரியாக கட்டி இருக்கிறது.

அரசிற்கு பெரும் வரி வருவாயை BCCI ஈட்டித்தருகிறது என்றாலும் அது எப்படி ஒரு தனியார் நிறுவனம் இந்தியா’வின் பெயரைப் பயன்படுத்தி இந்தியாவின் சார்பாக விளையாட முடிகிறது? இது சரியா தவறா?

பன்னாட்டு கிரிக்கெட் வாரியம் (ICC) என்ற அமைப்பு தான் உலகளவில் கிரிக்கெட் விளையாட்டுக்கான விதிமுறைகள் மற்றும் சட்டகளுக்கான காப்புரிமை பெற்ற அமைப்பு. எனவே ICC’இன் அனுமதியின்றி எவரும் கிரிக்கெட் போட்டிகளை சர்வதேச அளவில் நடத்த முடியாது. இந்திய நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை கட்டுப்படுத்தும் அமைப்பாக BCCI அமைப்பை ICC அங்கீகரித்த காரணத்தால் இந்தியாவில் BCCI முன்நிறுத்தும் அணி தான் இந்திய அணியாக ICC உலக அளவில் ஏற்றுக்கொள்ளும். எனவே இந்திய அரசு, தனது விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் மூலம் இந்திய அணி என்று தனி அணியை தேர்வு செய்து அனுப்பினாலும் பிற நாடுகள் ICC அங்கீகரிக்கும் அணியைத்தான் இந்திய அணி என்று ஏற்றுக்கொண்டு அந்த அணியுடன் தான் விளையாட ஒப்புக்கொள்ளும். இதன் மூலம், இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கான அனைத்து அதிகாரமும் அதிகாரப்பூர்வமாக BCCI நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் நிலை உண்டானது. வெறும் சர்வதேச போட்டிகளில் சென்று விளையாடுவதற்கான அனுமதிகளையும், உள்நாட்டில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான (பாதுகாப்பு வழிமுறைகளைக் கவனத்தில் கொண்டு) அனுமதிகளை மட்டுமே அரசு வழங்குகிறது.

அரசின் நிர்வாகத்திலிருந்திருந்தால் நிச்சயமாக இந்தியா கிரிக்கெட் விளையாட்டில் இந்தளவிற்கு முன்னேறி இருக்காது என்பது நிதர்சனம். அதிகார வர்க்கத்தின் பரிந்துரைகளின் பெயராலேயே பெரும்பாலான வீரர் சேர்ப்பு நடந்திருக்கும். மேலும் பல்வேறு நிதி கையாடல்களும் ஊழல் முறைகேடுகளும் நடந்திருக்கும். பதக்கப்பட்டியலில் நம் நாட்டின் பெயர் வந்துவிடாதா என்று ஒலிம்பிக் விளையாட்டுகளை வேடிக்கை பார்க்கும் நிலையே கிரிக்கெட் விளையாட்டிலும் இருந்திருக்கக்கூடும். இப்போது இருக்கும் வகையில் மாநில மற்றும் மாவட்ட வாரியாக கிரிக்கெட் கிளப்கள், தேர்வுகள், பயிற்சிகள் என்று அனைத்து உட்கட்டமைப்புகளும் மற்ற விளையாட்டிற்கு இருக்கும் நிலையிலேயே இருந்திருக்கக்கூடும்.

தற்போது இந்தியா, கிரிக்கெட் விளையாட்டில் உலகளவில் சிறந்து விளங்கும் நிலை இருக்கிறது என்றாலும் இப்போதும் ஊழல்களோ முறைகேடுகளோ பகுபாடுகளோ பிரிவினைகளோ இல்லாமலில்லை. மேலும் எவ்வளவு தான் சிறந்து விளங்கினாலும் ஓர் தனியார் அமைப்பைச் சார்ந்த, தனியார் அமைப்பிடம் கூலி வாங்கிக்கொண்டு விளையாடும் விளையாட்டு வீரர்கள் இந்திய அணி என்ற பெயரைப் பயன்படுத்துவதும், இந்திய தேசிய கொடியைப் பயன்படுத்துவதும், இந்திய அணி என்ற பெயரில் இந்திய தேசிய கீதத்தை ஏற்று விளையாடுவதும் தார்மீக அடிப்படையில் மிகவும் தவறே! நியாயமாக இந்திய அரசு BCCI அமைப்பை நாட்டுடைமை ஆக்கியிருக்க வேண்டும். அல்லது, இந்திய அணி என்கிற பெயரையும் இந்திய தேசிய கொடியையும், இந்திய தேசிய கீதத்தையும் அவர்கள் பயன்படுத்துவதைத் தடை செய்திருக்க வேண்டும். இந்திய அணி என்று பல கோடி ரசிகர்கள் பித்துப்பிடித்தாற்போல் கிரிக்கெட்டில் மூழ்கி இருக்கும் நிலையில் அத்தகைய ரசிகர்களின் ஆதரவு யாவும் எம் நாட்டின் அணி, எம் நாடு என்பதற்காகவே அன்றி வேறில்லை. அப்படி இருக்கையில் ஓர் தனியார் அமைப்பு எப்படி பல கோடி ரசிகர்களின் பாசம் மற்றும் ஆதரவைத் தவறாக அனுபவித்துக்கொள்வது சரியாக இருக்க முடியும்?

எதற்காக BCCI அணி உலகக்கோப்பையை வென்றால் மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் அந்த அணி வீரர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் பரிசுத்தொகை அளிக்க வேண்டும்? எதற்காக அந்த தனியார் அணிக்கு சிறப்பாக விளையாடியதற்காக மத்திய அரசு அர்ஜுனா தொடங்கி, பத்மஸ்ரீ, பத்ம விபூஷன், பாரத ரத்னா வரை வழங்க வேண்டும்? இந்தியா என்ற பெயரைத் தவறாக பயன்படுத்தி வென்றதால் அவர்கள் இந்திய நாட்டிற்கு உலக அளவில் பெருமை சேர்த்துத்தந்துவிட்டதாக அர்த்தமா? உண்மையில் பிற நாடுகளைப்பொருத்தவரையில் BCCI அணி வென்றால் அது இந்தியா வென்றதாகத்தான் கருதப்படும். ஆனால் அதன் மூலம் வரும் வருமானமோ, சலுகையோ இந்திய நாட்டையோ மக்களையோ சாராது எனில் எப்படி அது இந்திய நாட்டின் அணியாக ஆக முடியும்? தனியார் குத்துச்சண்டைப் போட்டிகளில் கலந்துக் கொண்டு பதக்கம் வெல்வது எப்படியோ அப்படித்தான் இந்திய அணி கோப்பை வாங்குவதும் என்று ஏன் அனைவருக்கும் தெரியவில்லை?

IPL போட்டிகளில் விளையாடும் Chennai Super Kings, Mumbai Indians போன்ற தனியார் அணிகளுக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? ஒன்றுமில்லை. எப்படி சென்னை சூப்பர் கிங்க்ஸ் என்று பெயர் வைத்தால் மட்டுமே அது சென்னை மக்களின் அணியாக ஆகிவிட முடியாதோ, எப்படி சென்னை சில்க்ஸ் என்ற தனியார் துணிக்கடை சென்னையின் பெயரைப் பயன்படுத்துவதாலேயே சென்னையின் கடையாக ஆகிவிட முடியாதோ, அதே போல் தான் இந்திய அணியும். சென்னையின் பெயரைப்பயன்படுத்தும் ஓர் தனியார் அணியாகச் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை எப்படிப் பார்க்க வேண்டுமோ, அதே போல் தான் இந்திய கிரிக்கெட் அணியும்!

 • 2008 வரை BCCI நிறுவனம் இந்தியாவில் கிரிக்கெட் வளர்ச்சிக்காக இயங்கும் ஓர் லாப நோக்கற்ற இயக்கம் என்றுக் கூறி வருமான வரியைத்தவிர்த்து வந்தது. IPL போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதும் அது முழுக்க முழுக்க வர்த்தக நோக்கில் நடத்தப்படும் போட்டி என்று கூறி BCCIஇன் லாப நோக்கற்ற அமைப்பு என்ற நிலையை நிராகரித்து BCCI வரிகள் கட்ட வேண்டிய ஓர் தனியார் விளையாட்டு அமைப்பு என்று வருமான வரித்துறைக் கூறிவிட்டது. எனினும் டி20 வேறு, பன்னாட்டு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் வேறு என்று கூறி தங்களை லாப நோக்கற்ற பொது அமைப்பாக அறிவித்து வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று BCCI தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
 • உண்மையில் இந்தியாவின் அதிக லாபம் கொழிக்கும் விளையாட்டு அமைப்பும், உலகின் அதிக லாபம் கொழிக்கும் கிரிக்கெட் அமைப்பும் BCCI தான்!
 • BCCI, இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கிரிக்கெட் பயிற்சி, உட்கட்டமைப்பை ஏற்படுத்துதல் என அனைத்து மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கும் நிதிப் பங்கீடு அளித்து கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஊக்குவித்துவரும் அமைப்பு என்பதை மறுக்க முடியாது. ஆயினும், குறிப்பிட்ட சாதிப்பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு, BCCIஇன் கீழ் இயங்கும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் மேல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குவதென்றால் இத்தகைய பிரிவினைகள் நிச்சயம் குறையும்.
 • ஓர் குறிப்பிட்ட சாதிப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கிறார்கள் என்றாலும், விளையாட செல்பவர்கள் திறமைமிக்கவர்களாகத் தானே இருக்கிறார்கள், பிறகு ஏன் எதிர்க்கிறீர்கள் என்ற வாதமும் எழுகிறது. நன்றாக விளையாடுகிறார்கள் என்பதற்காக அவர்கள் தான் விளையாட முடியும் என்றும், பிற மக்கள் யாவரும் அந்த அளவிற்கு விளையாடவில்லை என்று கூறுவதும் நியாயமற்ற முட்டாள்தனமான மற்றும் தீண்டாமை எண்ணம் கொண்ட வாதமே அன்றி வேறில்லை.
 • மேலும், BCCI பல ஆயிரம் கோடிகள் புழங்கும் ஓர் வர்த்தக அமைப்பு. இந்தியாவின் பெயரையும் கொடியையும் கீதத்தையும் பயன்படுத்தி குறிப்பிட்ட சிலர் பணம் கொழிப்பது முறையல்ல.
 • இவற்றை முறைப்படுத்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான விசாரணை ஆணையம் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன. எனினும் லோதா ஆணைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த BCCI மறுத்து வந்த நிலையில் சென்ற வருடம் முன்னாள் தலைமை தணிக்கை வாரிய தலைவர் (Comptroller and Auditor General of India/CAG) வினோத் ராய் தலைமையிலான 4 நபர் குழு, BCCI லோதா ஆணைய பரிந்துரைகளை நிறைவேற்றும் வரை, BCCIயின் முழு நிர்வாகப்பொறுப்பை ஏற்று நடத்தவும், லோதா ஆணைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாததற்காக BCCIயின் அப்போதைய தலைவர் அனுராக் தாகூர் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவியை நீக்கியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 • எனினும் BCCI முழுமையாக நாட்டுடைமையாக்க யாவரும் முயற்சிக்காமலிருக்கக் காரணம், பணம் கொழிக்கும் BCCIயின் முக்கிய நிர்வாகிகளாக இருப்பவர்கள்/இருந்தவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளே. இதில் நம் பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் அடக்கம். எப்படி அவர்கள் மீது கருத்து வேற்றுமையை (Conflict of interest) உருவாக்கியதற்காக துறை ரீதியான நடவடிக்கையேதும் எடுக்கப்படாமலிருக்கிறது என்பதும் கேள்விக்குறி தான்!
 • இந்தியாவில் கால்பந்து, இறகுப்பந்து, சதுரங்கம் என அனைத்து விளையாட்டுகளுக்கும் தனித்தனி தன்னாட்சி அமைப்புகள் (autonomous bodies) கட்டுப்பாட்டு வாரியங்களாக இயங்குகின்றன என்றாலும், அவை அனைத்தும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் கீழ் தான் வருகின்றன. எனவே இந்தியாவின் சார்பாக பன்னாட்டு விளையாட்டுகளில், எந்த விளையாட்டிலும்,  எவர் விளையாட வேண்டும் என்பது மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய ஒலிம்பிக் சங்கம் தான் தீர்மானிக்கிறது. ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் அப்படியில்லை. BCCI – இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் கட்டுபாட்டில் வரவில்லை.
 • 2018-2022 வரையிலான ஐந்தாண்டுகளுக்கான ஐபிஎல் தொலைகாட்சி மற்றும் இணைய ஒளிபரப்பு உரிமங்கள் மட்டும் 16,347 கோடி ரூபாய்க்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. மேலும் Title sponsorshipக்காக Vivo நிறுவனம் 2018-2022 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு 2,199 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 • தொலைக்காட்சி மற்றும் இணைய உரிமங்கள், ஸ்பான்சர்கள், அணிகள் மற்றும் வீரர்களுக்கான ஏலங்கள், டிக்கெட் வருமானங்கள் என இந்த வருட ஐபிஎல் போட்டிகளால் மட்டும், BCCIக்கு செலவுகள் போக இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் லாபம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவ்வளவு லாபமும், இந்தியாவின் பிற விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு செல்வதே நியாயம். ஆனால் நடப்பது வெறும் வியாபாரம் என்பதால் அத்தொகை யாவும் எங்கு செல்கிறது என்பதற்கு முழுமையான கணக்குவழக்குகள் பொதுவெளியில் இல்லை.
 • முழுக்க முழுக்க வர்த்தகமயமாக்கப்பட்ட கிரிக்கெட் வடிவமாக ஐபிஎல்லை பார்த்தாலும், இந்திய கிரிக்கெட் அணியுமே கூட அப்படிப்பட்ட ஓர் வர்த்தக நோக்கில் இயங்கும் தனியார் நிறுவனம் சார்ந்த தனியார் அணி தான் என்பதை யாவரும் மறுக்கமுடியாது!

என் நண்பர்களுடன் இது குறித்து விவாதிக்கையில், பெரும்பாலானோர் அரசின் கீழ் வந்திருந்தால் நிச்சயம் இந்தியா கிரிக்கெட்டில் முன்னேறி இருக்காது, சரி வராது, இது தான் சரி, என பெரும்பாலும் தற்போது இருக்கும் நிலையிலே இருப்பது தான் சரி என்பது போல் கருத்துக்களைக்கொண்டிருந்தனர். ஆனால், அரசு நடத்தினால் சரியாக இயங்காது என்பதற்காக பாராளுமன்றத்தையே தனியாருக்கு அடகு வைப்பது எப்படியோ அப்படித்தான் இதுவும் என்பது ஏன் பலருக்குப் புரியவில்லை என்பது எனக்கு புரியவில்லை. இதுக்குறித்து உங்கள் கருத்து என்ன? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கீழே பதிவிடவும். மேலும் இங்கு கூறியவை சரி தான் என்று உங்களுக்குத் தோன்றினால் உங்கள் கிரிக்கெட் நண்பர்களுக்கு இதைப் பகிரவும். நன்றி.

முகப்புப்படம்: ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானம், கொல்கத்தா (விக்கிப்பீடியா)

இக்கட்டுரை, தீக்கதிர் நாளிதழின் வேண்டுகோளுக்கு இணங்க தீக்கதிர் வலைதளத்திலும் என் அனுமதி பெற்று மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன் முகவரி இங்கே!

One Comment Add yours

 1. Anonymous says:

  Good one..!

  Liked by 1 person

What do you feel about this?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s