உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 3

முந்தைய பதிவுகளில் தகவல் திருட்டு நம்மைச்சுற்றி எவ்வாறு நடக்கிறது என்பதைப் பார்த்தோம். நம்மிடமிருந்து தகவல்களைத் திருடுதல்/சேகரித்தல் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும், அத்தகவல்களின் சக்தி, அத்தகைய தகவல் திருட்டு/சேகரிப்பு நம்மை எதை நோக்கி இட்டுச்செல்கின்றன, எதற்காகத் தகவல் திருட்டை/சேகரிப்பை அறவே ஒழிக்க வேண்டும் என்பனவற்றை இப்போது பார்ப்போம்.

அறிவியலும் தொழில்நுட்பமும் பன்மடங்கு வளர்ந்து, அதுவே பூமியையும் மனித இனத்தையும் அழியும் தருவாய்க்கு இட்டுச்செல்வதாக நாம் பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் தன்னிச்சையாக இயங்கும் வகையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அறிவேந்திரங்கள் (smart machines) மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச்சென்று, மனிதர்களுக்கே எதிராய் திரும்புவதாகப் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. உதாரணத்திற்கு Terminator, iRobot, எந்திரன், Matrix என பட்டியல் நீளும். உண்மையில் அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர முடியுமா? மனிதர்களின் கட்டுப்பாட்டைத்தாண்டி எந்திரங்கள் இவ்வுலகைத் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் அளவிற்கு மனிதர்களை விஞ்சும் அறிவாற்றலை எந்திரங்கள் பெற முடியுமா? மனிதர்களின் கண்டுபிடிப்புகளாலேயே மனித இனம் அழிக்கப்படுமா?

இதற்குக் காலம் தான் பதில் சொல்ல முடியும் என்றாலும், அறிவியல் வளர்ச்சி பல இடங்களில் நம்மை ஆபத்தை நோக்கி இட்டுச்சென்றிருக்கின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. பல லட்சம் உயிர்களைக் காவு வாங்கிய அணு ஆயுதங்கள் அதற்கு உதாரணம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் மனித இனம் அழிய வேண்டுமானால் அதற்குக் காரணமும் மனிதர்களாக இருக்க முடியுமே தவிர எந்திரங்களாக இருக்க முடியாது, நான் முன்னே கூறியது போல், அறிவியலும் தொழில்நுட்பமும் தன்னிடத்தே நல்லவை/கெட்டவை என்ற தன்மையற்றது. அதன் தன்மை யாரிடத்தில், யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பதைப்பொறுத்தே அமையும். உலக அழிவு என்ற எல்லைக்கு செல்லவில்லையென்றாலும், நம் மனித சமுதாயம் அத்தகைய சூழலை நோக்கி எவ்வாறு நகர்ந்துக் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

உலகம் முழுவதும் ஆங்கிலேயர்கள் தங்கள் காலணியாதிக்கத்தை நிறுவியதற்கு முக்கியக் காரணியாக அமைந்தது, புவியெங்கும் கொட்டிக்கிடந்த இயற்கை வளங்களை சுரண்டி, உற்பத்தியைப்பெருக்கி அதன் மூலம் செல்வம் கொழிக்கும் யுக்தியும், உலகையே தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற பேராசையுமே. அதன் காரணமாகத் தாங்கள் சென்ற இடமெல்லாம் அந்நாட்டு மக்களையே அடிமைப்படுத்தி, அவர்களின் உழைப்பையும் வியர்வையையும் சுரண்டி தங்கள் நாட்டிற்கு வளங்களை சேர்த்தனர். பின்னாளில் எந்திரங்களைப் பயன்படுத்தி, பெருநிறுவனங்களும், அரசாங்கங்களும் உற்பத்தியைப் பெருக்கி அதன் மூலம் செல்வம் கொழிக்கத்தொடங்கினர். அதனால் பல கோடி உழைப்பாளிகளின் வேலையும் பறிபோனது. எனினும் மனிதர்களின் வாழ்வை சுலபமாக்க, மனிதர்களின் வாழ்வை மேம்படுத்த, பல மனிதர்களின் திறன்களையும் உழைப்பையும் வெகுவிரைவாக செய்துமுடிக்கும் வல்லமை படைத்த எந்திரங்கள் யாவும், மனிதர்களாலேயே உருவாக்கப்பட்டு, மனிதர்களாலேயே கட்டுப்படுத்தப்பட்டன. அத்தகைய எந்திரங்களை இயக்குவது, பழுது பார்ப்பது என அவற்றைக் கட்டுப்படுத்துதலே தனி திறனாக மாறி, பல கோடி மனிதர்களுக்கு அதன் மூலம் வேலைவாய்ப்பு மேலும் பெருகியது.

ஆனால் முந்தைய தொழில்நுட்பங்களைவிட கணிமை, இணையம், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் சற்றே வித்தியாசமானவை மற்றும் விசாலமானவை. சக்கரம், நீராவி எஞ்சின், மின்சாரம், தொலைபேசி ஆகிய கண்டுபிடிப்புகள் ஏற்படுத்திய தாக்கத்தைவிட இணையம், செயற்கை நுண்ணறிவு ஆகியவை ஏற்படுத்தப்போகும் தாக்கம் மிக அதிகம். முந்தைய கண்டுபிடிப்புகள் மனிதர்களால் மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டு மனிதர்களாலேயே கட்டுப்படுத்தப்பட்டவை.

//ஆனால் நாளைய இயந்திரங்கள் மனிதர்களால் கண்காணிக்கப்பட்டு, நிறுவப்பட்டு, இயக்கப்படும் dump machines’களாக இருக்கப்போவதில்லை. அவைகள் கொஞ்சம் கொஞ்சமாய் மனிதர்களின் திறமை என்று சொல்லப்பட்ட அறிவாற்றலை (intelligence) தங்களுக்குள் கிரகித்துக் கொள்ளும் சக்தியுடைய அறிவேந்திரங்கள் (Smart Machines). பல சமயங்களில் நாம் இதுநாள் வரை ‘இயந்திரங்கள்’ என்று நம்பிய பெரிய, கண் முன்னே தெரியும் மெக்கானிகல், எலக்ட்ரிக்கல் பொருட்கள் அல்ல இவை. கண்ணுக்கே தெரியாத மென்பொருள் வரிகளில் இயங்குபவை. இவற்றை ‘அவை’ என அஃறிணையாக எதிர்காலத்தில் சொல்ல மாட்டார்கள்.

திறன் / திறமை என்பது தான் இதுநாள் வரை மனிதர்களின் ஆதார ”வேலையாக” இருந்தது. இந்த திறமைகளை பகுப்பாய்தல் (analytical), படைபாற்றல் (creative), உழைப்பு சார் வேலைகள் என்று முப்பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம். மருத்துவம், கணக்காய்தல், பொறியியல் இவை பகுப்பாய்தலின் கீழ் வரும். இதற்கு நீங்கள் துறை சார்ந்து படித்தல் அவசியம். அவற்றை மனனம் செய்தும், அதை தகுந்த இடத்தில், தகுந்த தரவுகளின் வழியே ஆய்ந்து முடிவெடுத்தல் அவசியம். கலை, இலக்கியம், ஊடகம் இவை படைப்பாற்றலின் கீழ் வரும். மனித குல ஆதாரத் தொழிலான வேளாண்மை, ஆடு மாடு மேய்தல், மீன் பிடித்தல் உழைப்பு சார் தொழில்கள், இவை ஜீன்களால் கடத்தப்படும் native intelligence-ன் கீழ் வரும். துறை சார்ந்து படித்தல் இருந்தாலுமே கூட புதிது புதியதாய் உருவாக்கம் இங்கே அவசியம். கண்டுபிடிப்புகள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர்கள் இன்ன பிற இந்த இரண்டும் கலந்த கலவையாக உருவாவார்கள்.

இந்த ‘திறமைகள்’ இருப்பதனால் தான் மனிதர்கள் ‘வேலைப்’ பார்த்தார்கள். இந்த ‘திறமைகளை’ கற்றுக் கொள்ள முடியும். படித்தல், அனுபவம், பார்வைகள், முன்னோர்களின் அனுபவங்களின் விளைவுகளை கற்றுத் தேர்தல் என நாம் “திறமைகளைக்’ “கற்றுக் கொள்கிறோம்”. கற்றுக் கொண்டவற்றை துறை சார்ந்து பயன்படுத்துதல் ‘வேலை’ என்றழைக்கப் பட்டது. இந்த ‘வேலைகளுக்கு’ சன்மானமாக ‘ஊதியமோ / கூலியோ / சம்பளமாக’ ஒன்று வழங்கப்பட்டது. இது பணமாக இருந்தது. பணத்தை வைத்துக் கொண்டு மனிதர்கள் தங்களுக்கு தேவையானதை அதற்கு ஈடான ‘மதிப்பைக்’ கொடுத்துப் பெற்றுக் கொண்டார்கள். இதை எழுதுகின்ற இந்த நொடி வரை உலகம் இப்படி தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அறிவேந்திரங்கள் இந்த அடிப்படையை தான் மாற்றப் போகின்றன. பொருள் என்பது சேவையாகவும், அந்த சேவை என்பது பைனரி எண்களாகவும் மாறி விட்டால் என்ன செய்வோம்?

இயந்திர உலகில் ஒரு கூடுதல் பொருளை உருவாக்க அதற்கான உட்பொருட்களும், உழைப்பும், மனிதர்களின் திறமையும் தேவைப்பட்டது. அறிவேந்திர உலகில் ஒரு கூடுதல் சேவையை உருவாக்கும் எல்லா காரணிகளும் (திறன், திறமை, உழைப்பு, ஈடுபொருள்) டிஜிட்டலாகி சன்மானம் தேவை இல்லை என்றானால் என்ன செய்வது? The marginal cost of creating something is either near zero or zero and What if the cost of “delivering work” also is Zero? மேலும் இந்த அறிவேந்திரங்கள் தொடர்ச்சியாக தங்களை upgrade செய்துக் கொள்ள முடியும்.

சிம்பிளாய் நாம் ‘இன்னொரு’ மருத்துவரை உருவாக்க வேண்டுமெனில் உலகில் ஒரு குழந்தை பிறக்க வேண்டும். அந்த குழந்தை +2-வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும். ஐந்து வருடங்கள் மருத்துவம் பயில வேண்டும். ஹவுஸ் சர்ஜனாக இருக்க வேண்டும். ஐந்தாறு வருடங்கள் பயிற்சி செய்ய வேண்டும். இதெல்லாம் சரியாக நடந்தால் 30-32 ஆண்டுகளில் நமக்கு ஒரு மருத்துவர் கிடைப்பார். அதாவது ஒரு நல்ல மருத்துவரை நாம் உருவாக்க நமக்கு 30 – 32 ஆண்டுகள் தேவை.

அறிவேந்திரங்களுக்கு அது ஒரே ஒரு file transfer.

One Single / Simple File Transfer ~ 32 Years of Human Development. Game Over.

எவை தேவை, எவை எரிதங்கள் (spam) என்பதை நாம் முடிவு செய்வதில்லை; அறிவேந்திரங்களே முடிவு செய்து ஒரங்கட்டி விடுகின்றன. எவ்வளவு தூரம் நடந்தால் / ஒடினால் எவ்வளவு கலோரிகள் குறையும், என்ன உண்ண வேண்டும், எதை ஈடு கட்ட வேண்டும் என்பதை மருத்துவர்களிடம் போகாமலே உங்கள் கைக்கடிகாரம் சொல்லும். என்ன தேடினீர்கள், எதை உண்டீர்கள், எங்கேப் போனீர்கள், யாரோடு பேசினீர்கள் என்பதைப் பொறுத்து சாய்ஸ்கள் மாறும்.

இவையனைத்தையும் இதற்கு முன்னால் ‘இந்தந்த திறமைகளோடு’ இருந்த மனிதர்கள் ‘ஊதியம்’ பெற்றுக் கொண்டு வழிக் காட்டினார்கள். இப்போது ‘அவர்கள்’ தேவையில்லை. அவர்களை விட சிறப்பாக இந்த அறிவேந்திரங்கள் இயங்கும். இவற்றை நாம் இப்போதே பயன்படுத்துகிறோம், இவை முழுமையான அறிவேந்திர பயன்பாட்டில் 1% கூட இல்லை. இது தான் நான் மேலே சொன்ன ஆரம்பம்.//

இதற்கும் தகவல் திருட்டிற்கும் என்ன சம்மந்தம்? //இதற்கு நாம் எப்படி மாய்ந்து மாய்ந்து வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று கொஞ்சம் தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்போம் ?

கடந்த 25 ஆண்டுகளில் நாம் ஏராளமானவற்றினைத் தேடியிருக்கிறோம், போர்னோ உட்பட. பில்லியன்கள் கணக்கில் மின்னஞ்சல்கள் அனுப்பியிருக்கிறோம். மணிக்கணக்கில் முன்பு யாஹு மெஸஞரிலும், பின்னாளில் கூகிள் சாட்டிலும், இப்போது வாட்ஸாப், டெலிகிராம், லைன், ஹைக்கிலும் உரையாடி இருக்கிறோம். ஏகப்பட்ட ஃபோரம்களில் ஒரு விஷயத்தை விவாதித்து இருக்கிறோம். ட்வீட்டரில் 140 சொற்களுக்குள் ஒரு வாக்கியத்தை, விஷயத்தை எப்படி சொல்ல வேண்டுமென்று மெனக்கெட்டு இருக்கிறோம். பேஸ்புக்கில் எந்த கவர்ச்சிப் படம் போட்டால் லைக் தேத்த முடியுமென்று கூகுள் இமேஜில் தேடுகிறோம். அமேசான், ப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல், பேடிஎம் என்று யார் கம்மியாக பொருட்கள் கொடுக்கிறார்கள் என்று பத்து Tabகளில் இந்த மாடலா அந்த மாடலா என்று  கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கண்காணிக்கிறோம். யூட்யூப்பில் மோர்க்கிளி செய்வது எப்படி, என்னப் பொருட்கள் தேவை, எப்படி செய்ய வேண்டும் என்று படம் வரைந்து, செய்து, பாகங்கள் குறித்துக் கொடுத்திருக்கிறோம். வாட்ஸாப்பில் எந்த சொல்லைப் போட்டால் குழுமத்தில் கை உயர்த்துவார்கள் என்று சிந்திக்கிறோம். நண்பர்களுக்கிடையேயான குழுமங்களில் யார் என்ன சொல்வார், எப்படி மடக்கலாம், முஷ்டி உயர்த்தலாம் என்று subconscious-ஆக யோசிக்கிறோம். இது தான் நாம் இன்றைக்கு வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடிய உலகம். இதை இப்படி தான் நாம் இயக்கிக் கொண்டிருக்கிறோம்.

கூகுள் மேப்ஸில் உலகின் எந்த சந்துக்கும் வழியிருக்கிறது. என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவை விட அதிகமான தகவல்கள் இன்றைக்கு விக்கிப்பீடியாவில் இருக்கிறது.  ஒரு நாளைக்கு வாட்ஸாப்பிலும், பேஸ்புக் மெஸஞரிலும் மட்டுமே 60 பில்லியன் (60,000,000,000) செய்திகள் பரிமாறப் படுகின்றன. இது உலகின் அத்தனை டெல்கோ நிறுவனங்களில் பரிமாறப்படும் குறுஞ்செய்திகளை விட மூன்று மடங்கு அதிகம். இவை அத்தனையும் சொல்லும் செய்தி ஒன்றே ஒன்று தான்.

20 – 25 வருடங்களாக வெவ்வேறு வலைப்பின்னல்களில் நாம் நம்முடைய ‘மனிதத் தன்மைகளை’ நமக்கேத் தெரியாமல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். வேறுவிதமாக சொன்னால், மனிதர்களாகிய நாம் எப்படி கோவப்படுவோம், சிரிப்போம், சிந்திப்போம், நக்கலடிப்போம், கண்ணீர் விடுவோம், திட்டம் தீட்டுவோம் என்பதை கடந்த 25 வருடங்களில் இயந்திரங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறோம். இதை சாதி, இன, மத, நிற பேதங்களில்லாமல் தொடர்ச்சியாக ஆர்வத்தோடு செய்திருக்கிறோம். நாகரீக மனிதர்கள் என்று நாம் சொல்லிக் கொள்ளும் 5,000 (or 10,000 / 25,000) வருடங்களின் மொத்த அடிப்படைகளை வெறும் இருப்பதியந்தே வருடங்களில் ஒரு மகத்தான மானுட டேட்டாபேஸாக மாற்றி வைத்து விட்டோம். 

இதில் We are, What We are is now merely an Data Point. நம்முடைய கோவங்கள், துக்கங்கள், மகிழ்ச்சிகள், காதல், சென்டிமெண்ட், பயங்கள், ஏக்கங்கள், தாபங்கள், விரகங்கள், ஆதங்கங்கள் என எல்லாமே பெருமளவிற்கு codify செய்யப்பட்டு விட்டது.

இந்த டேட்டாபேஸை தான் எதிர்காலத்தில் வரும் அறிவேந்திரங்கள் பயன்படுத்தப் போகின்றன. மனிதம் எப்படி இயங்கும் என்கிற பிட்டுப் பேப்பரை ஏற்கனவே நாம் அறிவேந்திரங்களுக்கு அவுட் செய்துவிட்டோம். இனி அவைகள் இதிலிருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு நமக்கு எதிரே நிற்கும். நம்மால் அதன் வேகம், திறமை, துரிதத்துக்கு முன்பு நிற்க முடியாது. நமக்கான குழியை நாம் தான் தோண்டி இருக்கிறோம். இது நாளைக்கு காலையிலோ, நவம்பரிலோ கண்டிப்பாக நடக்கப் போவதில்லை. ஆனால் இது தான் நம்முடைய எதிர்காலம்.

இதை எழுதுவதால் இது This is the end of humanity as we know it என்றுப் பயப்படத் தேவையில்லை. ஒவ்வொரு பேரலையும் அது நிகழ்ந்த காலத்தில் சாத்தானாக, மனித குலத்தின் முடிவாக தான் பார்க்கப்பட்டது. ஆனால் அவற்றினைத் தாண்டி நாம் இதைப் படிக்கின்ற இந்த நொடி வரைக்கும் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

“The Next Big Thing always starts out being dismissed as a “toy.” – Chris Dixon /General Partner a26z (A Multi-billion dollar Investment firm)

20 வருடங்களுக்கு முன்பு குடிநீரை விலைக்கு வாங்கிக் குடிப்போம் என்று சொன்ன போது சிரித்தோம். நீரையாவது, விலைக்கு வாங்குவதாவது என்று நிராகரித்தோம். ஆனால் இன்றைக்கு அது தான் யதார்த்தம். பேரலைகளின் தாக்கமென்பதும் அப்படிதான். அது ஆரம்பிக்கும் போது விளையாட்டாக, புறக்கணிக்கக் கூடியதாக தான் இருக்கும். நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிறங்கி, வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக ஆக்கிரமிக்கும்.

உலக பொருளாதார குழுமம் (World Economic Forum) இதுவரை வந்த பேரலைகளிலேயே நான்காவது (அறிவேந்திரங்களின்) பேரலை தான் அதிவேகமாகவும், துரிதமாகவும் பரவிக் கொண்டிருக்கும் பேரலை என்று வர்ணிக்கிறார்கள்.//

இவ்வளவுத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய இணைய மற்றும் செயற்கை நுண்ணறிவுப்பேரலை எவ்வாறு நம் வாழ்வை முற்றிலும் மாற்றக்கூடும் என்பதற்கும், ‘அட இவ்வளவு வளர்ச்சி நமக்கு நல்லது தானே!’ என்பவர்களுக்கான பதில்கள், அலசல்கள் மற்றும் மேலும் பல தகவல்கள், வரும் பகுதிகளில்…

குறிப்பு:

  • இக்கட்டுரையில் காப்பி நிறத்தில் அமைந்திருக்கும் பத்திகள் யாவும் பொருளாதார வல்லுநர், எழுத்தாளர், நண்பர் நரேன் ராஜகோபாலன் அவர்களின் அலைகள் ஓய்வதில்லை என்ற கட்டுரைத்தொடரிலிருந்து அவரின் அனுமதிப் பெற்று எடுக்கப்பெற்றது. இப்பத்திகளில் விளக்கியுள்ளவற்றை நானாக விவரிப்பதைவிட அவற்றை அப்படியே பகிருதல் சிறந்தது என்று தோன்றியதால் அப்படியே இங்கு வழங்கியிருக்கிறேன்.
  • தொழில்நுட்பத்தினால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சமூகப் பொருளாதாரப் பார்வைக் கோணத்தில் அவர் எழுதிவரும் அலைகள் ஓய்வதில்லை கட்டுரைத்தொடரைத் தவறாமல் படிக்க அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.
  • மேலும் சமூக ஊடகங்கள் மற்றும் நாம் ஒருவருக்கொருவர் தொடர்புக்கொள்ளப் பயன்படுத்தும் Messenger applications யாவும் நம்மைப்பற்றி நாமே எந்திரங்களுக்கு பயிற்சிக் கொடுக்கும் பயிற்சிக்கூடமே அன்றி வேறில்லை என்பதை ஆழமாகப் பதிவு செய்கிறேன்!

நன்றி: நரேன் ராஜகோபாலன்

இக்கட்டுரை உங்களுக்குப் பயனுள்ளதாய் அமைந்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும். மேலும் உங்கள் கருத்துக்களைக் கீழே பதிவிடவும். நன்றி.

முகப்புப் படம்: pixabay.com

இக்கட்டுரைத்தொடரின் முந்தைய/அடுத்த பகுதிகளைப் படிக்க:

உன்னைப் பணயம் கொள்ளும் இணையம்!

What do you feel about this?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s