உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 5

கடந்த பதிவின் இறுதியில் அடுத்த பதிவு முழுதும் Google நிறுவனம் நம் வாழ்வை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதைப் பார்ப்போம் என்று கூறியிருந்தேன். இதற்கிடையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் என்ற தனியார் நிறுவனம் சுற்றுச்சூழல் மாசு மற்றும் உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்குவதாகக்கூறி அந்நிறுவனத்தின் செம்பு உருக்காலையின் விரிவாக்கத்தை எதிர்த்து நூறாவது நாளாக போராடி வந்தப் பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மேலும் வன்முறையைத் தூண்டும் வகையிலான செய்திகள் மற்றும் வதந்திகள் பரவுவதைத் தடுக்கவும் சமூக விரோதிகள் இந்த அசாதாரணச் சூழலைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்வதைத் தடுக்கவும் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணைய சேவையை ஐந்து நாட்களுக்கு முடக்கி வைப்பதாகக்கூறி தமிழக அரசு அரசாணை வெளிட்டது.

Google நிறுவனத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் அரசாங்கங்கள் உலகம் முழுவதும் தங்களுக்குச் சாதகமாக இணைய சேவையில் எவ்வாறு அத்துமீறல்களையும் சர்வாதிகாரப் போக்கையும் கடைப்பிடிக்கின்றன என்பதை இந்த வாரம் அலசினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

முதலில் இணைய சேவையை முடக்கி வைப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் நடவடிக்கையாகும். மேலும் ஐநா மனித உரிமைகள் ஆணையம் வரையறுத்துள்ள மனித உரிமைகளை ஒடுக்கும் செயலாகும்.

இதுபோன்ற அசாதாரண சூழல் நிலவும் போது இணையத்தை முடக்கி வைப்பது உண்மை நிலவரத்தையும் மக்கள் படும் இன்னல்களையும் வெளியே தெரிய விடாமல் மறைக்கவும், அரசாங்கங்கள் தங்கள் விருப்பப்படி எளிதாக உண்மை பிம்பத்தை மாற்றியமைத்து சென்சார் செய்து தங்கள் மக்களின் மீதே அத்துமீறல்களையும் வன்முறையையும் ஏவுவதற்கும் தான் வழிவகுக்கும்.

இணையம் நம் வாழ்விலும், பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாததாய் ஒன்றிவிட்ட இக்காலத்தில், இணைய சேவையை முடக்கிவைப்பது, மருத்துவமனைகள், அவசர சேவைகள், போக்குவரத்து, வங்கி சேவைகள் மற்றும் வர்த்தகத்தையும் கடுமையாக பாதிக்கும். ஐந்து நாட்கள் இணைய சேவைகளை முடக்கி வைத்து ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாத, கடைகளில் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்த முடியாத நிலையை உருவாக்கியது அந்தப் பகுதிகளின் இயல்பு வாழ்க்கையை அடியோடு நிறுத்தி வைத்துவிடும் நடவடிக்கையாகும்.

நான் முந்தைய பகுதிகளில் கூறியவாறு இணையம் என்பது மற்ற ஊடகங்களை விட மிகவும் வித்தியாசமானது, விசாலமானது. இது மக்களாலே இயங்குகிற ஓர் ஊடகம். மற்ற ஊடகங்கள் போல் மக்கள் வெறும் பார்க்கிற, கேட்கிற, படிக்கிற வேலையை மட்டும் இங்கு செய்யவில்லை. மக்களே நேரடியாக பங்குக்கொள்வதாலேயே இணையம் இவ்வாறு உயிர்ப்புடன் இயங்குகிறது. அதன் காரணமாகத்தான் நாம் நேரம், காலம் பார்க்காமல் மணிக்கணக்கில் இணையத்தில் மூழ்கி இருக்கிறோம். YouTube, Vimeo போன்ற வலைதள சேவைகள் மூலம் இன்று பலர் தங்கள் படைப்பாற்றல்களை காணொளிகளாகப் பதிவு செய்து, அவற்றை உலகில் உள்ள எவரும் காணும் வகையில் பதிவேற்றம் செய்ய முடிகிறது. வேர்ட்ப்ரெஸ் (WordPress) போன்ற இணைய சேவைகள் மூலம் தங்கள் கருத்துக்களை எழுத்து வடிவில் கட்டுரையாகவோ, கவிதையாகவோ மக்களிடம் கொண்டு சேர்க்க முடிகிறது. சமூக வலைதளங்களில் நண்பர்கள், உறவினர்கள், அன்பர்கள் என அனைவரோடும் நேரத்தைச் செலவிட முடிகிறது. இணையம் என்கிற ஊடகமே, வெறும் பார்வையாளராக இருந்த மக்களை பங்கேற்கவைத்தும், அவர்களுக்கு பிடித்தவற்றை உருவாக்கவைத்தும் மக்களையே ஊடகத்தின் ஒரு அங்கமாக மாற்றியிருக்கிறது.

மக்களால் இயங்குகின்ற இணையம், மக்கள் இணையமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் நாம் பயன்படுத்தும் இணையம் மக்கள் இணையமாக இயங்கவில்லை. இணையத்தின் அடிப்படைக் கட்டமைப்பிலேயே (basic architecture) பிழை இருக்கிறது. இணைய இணையம் இயங்கும் வழிமுறையில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானவற்றை இப்போது பார்ப்போம்.

வெகுஜன உளவு/கண்காணிப்பு (Mass Surveillance):

நான் முந்தைய பதிவுகளில் சொன்னது போல் பெருநிறுவனங்கள், அரசாங்கங்கள் தங்கள் மக்களையே தொடர்ந்து கண்காணிக்க இணையத்தைப் பயன்படுத்தி வருகிறது. இவற்றைப் பலமுறை விக்கிலீக்ஸின் ஜூலியன் அசாஞ்சேமுன்னாள் அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரியான எட்வேர்ட் ஸ்னோடன் ஆகியோர் அம்பலப்படுத்தியுள்ளனர். இணையத்தில் கருத்துச் சுதந்திரம் உண்டு என்றாலும்கூட, தொடர்ந்து யார் யார் என்ன செய்கிறார்கள்பேசுகிறார்கள் என்பதை அரசாங்கங்கள், இணைய நிறுவனங்கள் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன என்பது எவ்வகையிலும் சுதந்திரமாகாதல்லவா? இப்படி கண்காணிக்கப்படுவதுத் தெரிந்தாலே மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படும்பிறகு எப்படிக் கருத்துக்களை சமூகத்தில் தைரியமாக ஒருவரால் சொல்ல முடியும்?

ஆனால் இங்கு இருவேறு முக்கியக் கோணங்கள் இருக்கின்றன. ஒரு புறம், கண்காணிப்பது, உளவு பார்ப்பது – தவறு என்று நாம் கூறுகிறோம். இன்னொரு புறம் அரசாங்கங்கள், காவல்துறை, புலனாய்வு நிறுவனங்கள் ஆகியவை குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் இவ்வாறான திறன் அரசின் சார்பில் அவசியமாகிறது என்ற கோணமும் முக்கியமாகக் கருதவேண்டி இருக்கிறது. முழுவதும் தனியுரிமைப்படுத்தப்பட்டுவிட்டால் சமூக விரோதிகளின் குற்றங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகிவிடும் என்ற கருத்தை யாவரும் மறுக்க முடியாது. ஒரு குற்றவாளியைக் கண்டுபிடித்து பின்தொடர்ந்து பிடிப்பதற்கு அவர் யாரிடம் பேசுகிறார், என்ன பேசுகிறார், எங்கு இருக்கிறார் போன்ற பல விஷயங்களைக் கண்காணிக்கவேண்டி இருக்கிறது. இவை இன்றியமையாதவை என்றாலுமே அதற்காக உலகிலுள்ள அனைவரின் அனைத்து செயல்பாடுகளையும் அவர்களுக்கே தெரியாமல் கண்காணிப்பது, ஒவ்வொருவரையும் profiling செய்து அவர்களை வகைப்படுத்தி அவர்களின் தகவல்களை விற்று பணம் சம்பாதிக்கும் வகையில் அமைந்துள்ள இணையம் எப்படி மக்களுக்கான இணையமாக இருக்க முடியும்?

இணைய தணிக்கை (Internet Censorship):

ஒருவரின் கருத்துரிமை தொடர்ந்து மற்றோரால் கண்காணிக்கப்படுவது உண்மையில் சுதந்திரமான சூழலாக இருக்க முடியாது. அரசு நம்மைக் கண்காணிக்கிறது என்றால் எப்படி அரசின் தவறுகளை எதிர்த்து அனைவரும் கருத்து தெரிவிக்க முன்வருவார்கள்? அப்படியே முன்வந்து கருத்து தெரிவித்தாலும் அதைத் தடுக்க internet censorship என்ற வழிமுறையை அதிகார வர்க்கம் கையில் எடுக்கிறது. குறிப்பிட்ட தளங்களைத் தடை செய்வதுஅவற்றை இணையத்தில் கிடைக்கவிடாமல் செய்வது போன்று, மக்கள் இணையத்தில் எதைப் பார்க்க வேண்டும்எதைப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் சுதந்திரம் மக்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. தூத்துக்குடி இணையசேவைக்கான தடையும் அப்படியான ஓர் அடக்குமுறையே ஆகும். அரசிற்கெதிராக கருத்து தெரிவிப்போரை அரசு இவ்வாறு எளிதாக ஓரங்கட்ட முடியும்.

மேலும் நாம் பயன்படுத்தும் Facebook, Google போன்ற நிறுவனங்கள் மக்கள் எதைப்பார்க்கிறார்கள் என்பதைத் தங்கள் விருப்பம் போல் எளிதாக மாற்றி அமைக்க முடியும் என்பதை நாம் பெரும்பாலும் உணர மறுக்கிறோம். உதாரணத்திற்கு Google/Facebook/Twitter ஆகிய நிறுவனங்கள் அமெரிக்க அதிபர் தாங்கள் ஆதரிக்கும் ஓர் கட்சி வெற்றிபெற எவருக்குமே தெரியாமல் தங்கள் வலைத்தளங்களை சுலபமாக மாற்றி அமைக்க முடியும். Trump வெற்றிபெற வேண்டும் என்று அந்நிறுவனங்கள் நினைத்தால் Trump புகழ் பாடும் செய்திகளை Google தேடல்களில் நாம் முதலில் பார்க்கும் வகையில் Google நிறுவனம் மாற்றி அமைக்க முடியும். Trump புகழ் பாடும் பதிவுகளை அதிக மக்கள் காணும் வகையில் Facebook/Twitter பக்கங்கள் மீண்டும் மீண்டும் அவற்றை அதிக மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும். Trumpஐப் பற்றிய தவறான செய்திகள், பதிவுகள் மக்கள் கண்ணில் அவ்வளவாகத் தென்படாதவாறு Google தேடல்களிலும் Facebook/Twitter பக்கங்களிலும் மறைத்துவைக்க முடியும். இது சாதாரண விஷயமாகத் தோன்றலாம், ஆனால் இதன் தாக்கம், திறன் கற்பனைக்கெட்டாதவை. ஓர் கட்சியோ தனிநபரோ அந்நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து அவர்களுக்கு சாதகமாக அந்நிறுவனத்தில் வலைத்தளங்களை மாற்றியமைத்து அதன் மூலம் பெரும் லாபமடைய முடியும். அக்கட்சி வெற்றி பெற்றதும் அந்நிறுவனத்திற்கு கைமாறாக அந்நிறுவனத்திற்கு சாதகமான அரசியல் சூழலையோ, வர்த்தக முடிவுகளையோ அக்கட்சியோ தனிநபரோ ஏற்படுத்த முடியும். இது யாவும் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வது மிக எளிது. மேலும் அரசாங்கங்கள் சமூக ஊடகங்களில் தங்களுக்கெதிரான செய்திகள் பரவுவதைத் தடுப்பது, நீக்குவது மிகவும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. நாம் இயற்கையாய் நடக்கிறது என்று நினைக்கும் பல நிகழ்வுகள் இணையத்தில் செயற்கையாய் தான் உருவாக்கப்படுகிறது என்பது எப்பொழுதும் அறியாமலேயே நாம் காணும் செய்திகளை அப்படியே நம்பிவிடுகிறோம்.

இணைய நடுநிலைமை (Net Neutrality):

Facebook நிறுவனம் சில வருடங்களுக்கு முன் Free Basics என்ற திட்டத்தை இந்தியாவில் கொண்டுவர முயற்சித்தது. அதன் மூலம் ஒரு சில வலைத்தளங்களை மட்டும் எந்நேரமும் இலவசமாக மக்கள் பயன்படுத்த முடியும் என்ற ஓர் திட்டத்தைக் கொண்டுவந்தது. Google, Wikipedia, Facebook போன்ற அதிகம் பயன்படுத்தும் அடிப்படை சேவைகளைக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் இலவசமாக மக்களுக்கு வழங்குவது நல்லது தானே என்று நினைத்திருக்கலாம். ஆனால் இதன் பின்னே ஓர் பெரும் அரசியல் பொருளாதார சூழ்ச்சி இருப்பதைப் பலரும் அறிந்திருக்கவில்லை.

அரசு அதிகாரத்தையெல்லாம் தாண்டி வந்தால், முதலாளிகளும், தனியார் நிறுவனங்களும் இணையம் மூலம் மக்களின் நேரத்தைத் திருடி, தகவல்களை விற்று பணமாக்கி சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். நாம் இணையத்தை பயன்படுத்துகிறோமென்றால், அதற்கான உள்கட்டுமான வசதிகளை வழங்குபவர்களைத்தான் (BSNL, Airtel, Jio, Vodafone,  Idea) நாம் இணைய சேவை வழங்கும் ஐ.எஸ்.பி. (Internet Service Provider – ISP) என்று அழைக்கிறோம். இவர்களிடம் உள்ள இந்த உள்கட்டுமான அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் எந்தெந்த தளங்களைப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பார்க்கிறார்கள். சில தளங்களை இலவசமாகவும், சிலவற்றை அதிக கட்டணம் செலுத்தி பெறுமாரும், இணையத்தின் ஆணிவேரையே அசைக்கப்பார்க்கிறார்கள். அதன் மூலம் தங்கள் இலாபத்தைப் பெருக்கவும் திட்டமிடுகின்றனர். இதைத்தான் சமீபத்தில் ‘நெட் நியூட்ராலிடி (Net Neutrality) மீறுதல்’ என்று சமூக வலைதளங்களில் பலரும் பேசியதை நீங்கள் தொடர்ந்து பார்த்திருக்கக்கூடும். சமச்சீரான இணையத்தை உடைக்கும் முயற்சி இது.

Facebook வலைதளத்தை இலவசமாக வழங்குவது, அதை மக்கள் மீது மறைமுகமாக திணித்து பின்னாளில் அதன் மூலம் கொள்ளை லாபம் பெறுவதற்கான முதலடி மட்டுமே அது. இது மக்கள் எதைப் பார்க்க வேண்டும் என்ற அதிகாரத்தை ஓர் தனியார் நிறுவனம் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வழிவகுத்திருக்கும். ஆனால் பல்வேறு இணைய போராளிகளின் தொடர் போராட்டங்கள் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டு இந்தியாவில் அவ்வாறு இணைய நடுநிலைமையைக் குலைக்கும் வகையிலான திட்டங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தடை விதித்தது.

எனினும் பிற்காலத்தில் இந்த ஆயுதத்தைத் தனியார் நிறுவனங்கள் கையிலெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். உதாரணத்திற்கு Jio நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் நிறுவனத்தின் செயலிகளை மட்டுமே இலவசமாகவோ அல்லது தினமும் ஓர் குறிப்பிட்ட அளவிற்கோ அந்நிறுவனத்தின் சேவையை மட்டுமே பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கும் திட்டத்தைக் கொண்டுவரலாம். அதன் மூலம் மற்ற சேவைகளைக்காட்டிலும் அந்நிறுவனத்தின் சேவையை தங்கள் வாடிக்கையாளர்கள் மீது திணித்து அதன் மூலம் லாபம் பெரும் வழிமுறையைக் கையாளலாம். இதுவும் ஓர் வகையிலான இணைய நடுநிலைமையைக் குலைக்கும் செயலே ஆகும்.

Targeted Advertising:

இணையத்தில் நம்முடைய தகவல்களைத் திருடுவது/சேகரிப்பது, அதன் மூலம் ஒவ்வொருவரைப்பற்றியும் அவருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, அவரின் அன்றாட செயல்பாடுகள் என்ன, எங்கு இருக்கிறார், எங்கே செல்வார், என்ன உண்பார், எதை விரும்பிப் பார்ப்பார், எதை வாங்குவார், அவர் யாருக்கு வாக்களிப்பார், எவருடன் எங்கு செல்வார் என அனைத்துத் தகவல்களையும் ஒருங்கிணைத்து நம் ஒவ்வொருவரையும் profiling செய்து நம்மிடம் எதை எப்படி விற்க முடியும் என்று நமக்கே தெரியாமல் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு யுக்தியை எந்திரங்களே வகுக்கும் வகையிலான இந்த இணையம் மிகவும் ஆபத்தானது.

நம்மிடம் விற்க முடியும் என்பது பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உதாரணத்திற்கு ஒரு நபர் ஒரு கட்சியின் எதிர்ப்பாளராக இருக்கிறார், ஆனால் அவருக்கு வேறு எந்த கட்சியின் மீதும் அவ்வளவு ஈடுபாடு இல்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்ற ஒரே காரணத்திற்காக மற்றொரு கட்சிக்கு வாக்களிக்கும் நிலைப்பாட்டில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது. நாம் தான் அனைத்தையும் சமூக ஊடகங்களில் வழங்குகிறோமே! நாம் எதை like செய்கிறோம், என்ன comment செய்கிறோம், எதைப் பகிர்கிறோம் என்று அனைத்தையும் அரசியல் கட்சிகளின் தகவல் தொழில்நுட்பப்பிரிவு கண்காணிக்கிறது. எங்கு எப்போது தேர்தல் வருகிறது என்பதைப்பொருத்து இடம், பொருள், ஏவல் மாறலாம். இப்போது அந்நபரின் அத்தகைய நிலைப்பாட்டைக் கண்டறிந்து அவரை மட்டுமே குறிவைத்து அவர் கண்ணில் ஏதோ அவர் வாக்களிக்க நினைக்கும் கட்சியைப்பற்றிய ஓர் பதிவை போலியாக வேண்டுமென்றே வழங்கி அதைப் படிக்க வைத்து விட்டால் போதும், அவர் அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக் கூடும். இது தான் profiling and targeted advertising என்பதாகும். இங்கே நம்மிடம் விளம்பரம் செய்து விற்பது பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு கருத்தை விதைப்பது கூட விற்பனை தான். அத்தகைய கருத்தை விதைப்பது இங்கே வாடிக்கையாகிவிட்டது. நாம் காணும் பல்வேறு தகவல்கள் இயற்கையாய் நமக்கு வருவதில்லை, பல சமயங்களில் அவை இவ்வாறு வேண்டுமென்றே குறிவைத்து ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சியின் பின்னணி தான். சமூக ஊடகங்களில் நம்முடைய பதிவுகளை கண்காணிப்பதாலேயே மட்டும் இவ்வளவு செய்ய முடியுமெனில், இணைய நிறுவனங்கள் நமக்கே தெரியாமல் நம்முடைய தகவல்களைத் திருடுவது/சேகரிப்பது மூலம் எவ்வளவு விஷயங்களை செய்ய முடியும்?

இவ்வாறு பல்வேறு அரசியல் பொருளாதார சதிகளுக்கு வழிவகுக்கும் வகையிலான இன்றைய இணையம் எப்படி மக்கள் இணையமாக இருக்க முடியும்? இத்தகைய அடிப்படைக் கட்டமைப்பிலேயே பிழையைக்கொண்டுள்ள இணையத்திற்கு என்ன தான் தீர்வு? மக்கள் இணையம் என்றால் என்ன? அது சாத்தியமா? அதை எப்படி நிறுவுவது? இணையத்தை முதன்முதலில் உருவாக்கிய டிம் பெர்னர்ஸ்லீ இன்றைய இணையம், தான் உருவாக்க நினைத்தது இல்லை, இன்றைய இணையம் மிகவும் ஆபத்தான ‘ஒரு சில நிறுவனத்தின் கட்டுபாட்டில் இயங்கும்’ நிலையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது என்று ஏன் பதறுகிறார்? Digital Divide என்றால் என்ன?

இணைந்திருங்கள் அடுத்த பதிவுகளில்…

நன்றி: பிரசன்னா வெங்கடேஷ்

இக்கட்டுரை உங்களுக்குப் பயனுள்ளதாய் அமைந்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும். மேலும் உங்கள் கருத்துக்களைக் கீழே பதிவிடவும். நன்றி.

முகப்புப் படம்: pixabay.com

இக்கட்டுரைத்தொடரின் முந்தைய/அடுத்த பகுதிகளைப் படிக்க:

உன்னைப் பணயம் கொள்ளும் இணையம்!

What do you feel about this?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s