உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 6

மக்கள் இணையம்… பல கோடி மக்களை இணைக்கின்ற, மக்களின் உள்ளீடுகளையே மூலமாகக்கொண்டு இயங்குகின்ற இணையத்தை வடிவமைக்கின்ற/நிர்வகிக்கின்ற அதிகாரமும் உரிமையும் மக்களின் கைகளிலே இருந்தால் தான் அது மக்கள் இணையமாக முடியும். ஆனால் இணையத்தின் அதிகாரம் தற்போது ஆளும் வர்க்கத்திடமும் பெருநிறுவனங்களிடமும் இருப்பதற்கான காரணம் இணைய சேவையை வழங்குகின்ற உட்கட்டமைப்புகள் (internet infrastructure) யாவும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதும், அவர்கள் அமைத்துக்கொடுக்கின்ற கட்டமைப்பின் மூலமாகத்தான் நாம் இணைய சேவையை பயன்படுத்துகிறோம் என்பதும் தான் தொழில்நுட்பரீதியாக அவர்களின் கைகளை ஓங்கவைக்கிறதுஇதைத்தான் ஆங்கிலத்தில் “Centralized Infrastructure” (மத்தியமயப்படுத்தப்பட்ட உள்கட்டுமானம்என்பார்கள். ஆனால் இந்த கட்டமைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

எதற்காக நான் என் நண்பருடன் பேசும் தகவல்கள் இன்னொரு நிறுவனத்தின் செர்வர்களில் சேமிக்கப்பட வேண்டும்? எதற்காக நான் என் நண்பருக்கு அனுப்புகின்ற தகவல்கள் இன்னொருவரால் படிக்கப்பட வேண்டும்? நான் அனுப்பும் தகவல்கள் என் நண்பருக்கு நேரடியாக செல்ல வழி இல்லையா/இருக்க முடியாதா? நான் அனுப்பும் தகவல்கள் இன்னொரு நிறுவனத்தின் செர்வர்களில் சேமிக்கப்பட்டால் தான் என் நண்பரால் பெற முடியுமா என்ன?

மக்கள் இணையம் என்பது இன்றைய இணையத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இன்றைய இணையத்திற்கான  மாற்றாக மக்கள் இணையத்தை உருவாக்குவது மக்களின் பங்களிப்பில்லாமல் சாத்தியமற்றது. இந்த மாற்று இணையத்தில் இடைத்தரகராக ISP (Internet Service Provider) என்பவர் இருக்க மாட்டார். மாறாக மக்கள் குழுக்களாக இணைந்துநமக்கு நாமே இணைய உள்கட்டுமானத்தை உருவாக்க வேண்டும்இப்படி ஆங்காங்கே உருவாக்கப்படும் கட்டுமானத்தை ஒன்றோடொன்று இணைத்து முதலில் ஒரு வட்டாரத்தைபிறகு ஒரு மாநிலத்தைபிறகு ஒரு நாடு முழுவதும் பரவச் செய்தால் மக்களின் மாற்று இணையம் சாத்தியமே.

படிப்பதற்கும், கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது, ஆனால் இது உண்மையில் சாத்தியம் தானா எனக்கேள்வி எழலாம். நிச்சயமாக சாத்தியம் தான். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘Meshnet’ (மெஷ்நெட்) என்று அழைப்பார்கள். இன்று மக்கள் கைகளில் மிகச்சாதாரணமாகப் புழங்கும் ஸ்மார்ட்ஃபோன்களையும், மடிக்கணினிகளையும், அவற்றில் உள்ள வை–ஃபை (Wi-Fi) வசதியையும் பயன்படுத்தி கம்பியற்ற (Wireless) மெஷ்நெட்வொர்க்குகளை உருவாக்கி, அவற்றை ஒன்றோடொன்று இணைக்க முடியும். சிந்தித்துப் பாருங்கள், புதிதாகச் சாதனங்கள் வாங்கத் தேவையில்லை, உள்கட்டுமானத்திற்காகச் சாலையைப் பிளந்து மண்ணை வாரி, வயர்கள் இடத்தேவையில்லை. வயர்லெஸ் மூலமே இவற்றைக் கட்டமுடியும். இவ்வாறு உலகெங்கும் இணைத்து உருவாக்கப்படும் ஒரு நெட்வொர்க்கிற்கு ‘Hyperboria‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. இணையத்தில் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘TCP/IP’ எனப்படும் வரைமுறைக்குப் பதிலாக, ‘cjdns‘ எனப்படும் வரைமுறை Hyperboria-வில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில்தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை (Free Software Foundation TamilNadu – FSFTN) என்ற அமைப்பு தவிரவேறு யாரும் இதைப் பற்றிப் பேசுவதாகத் தெரியவில்லைபேசுவதோடு மட்டும் நில்லாமல்இணைய ஆர்வலர்களின் உதவியோடு விரைவில் மெஷ்நெட்வொர்க்குகளை ஒரு சில இடங்களிலாவது உருவாக்க முயற்சிப்போம். உதாரணத்திற்கு தூத்துக்குடியில் இணைய சேவையை அரசாங்கம் முடக்கிய போது, மெஷ்நெட் பற்றிய விழிப்புணர்வு இருந்திருந்தால் தொலைத்தொடர்பிற்கு இணைய சேவை நிறுவனங்களையோ (ISP), அரசாங்கத்தையோ நம்பி இருந்திருக்க வேண்டியதில்லை. அங்குள்ள ஒவ்வொரு ஸ்மார்ட்ஃபோன்களும், ஒவ்வொரு மடிக்கணினியும் ஒரு சிறிய தொலைத்தொடர்பு கோபுரமாக (telecommunication tower) செயல்படுத்தப்பட்டிருக்க முடியும். எளிமையாக சொல்ல வேண்டுமானால் நாம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் புகைப்படங்களையும், பாடல்களையும், காணொளிகளையும் பகிர்ந்துக்கொள்ளப் பயன்படுத்தும் SHAREit, Jio Switch, Super Beam போன்ற செயலிகள் இணைய சேவை இல்லாமலேயே நம் ஸ்மார்ட்ஃபோன்களின் Wi-Fiஐ பயன்படுத்தி தகவல் பரிமாற்றத்திற்கு வித்திடும் அதே தொழில்நுட்பம் தான் மெஷ்நெட்’களிலும் பயன்படுத்தப்படும்.

பெரிய திரைப்படங்களையுமே எவ்வித இணைய சேவையுமின்றி எவ்வித கட்டணமுமின்றி நிமிடங்களில் பகிர்ந்துக்கொள்ள முடியுமென்றால் நம்முடைய செய்திகளையும் மின்னஞ்சல்களையும் மற்ற தகவல்களையும் பகிர்ந்துக்கொள்ள முடியாதா?

இன்னமும் உங்களுக்கு இது சாத்தியம் என்று தோன்றவில்லை என்றால் இதோ தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் இணைய வல்லுநர்கள்ஆர்வலர்கள்ஹேக்கர்கள் அனைவரும் இணைந்து மெஷ்நெட்வொர்க்குகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள், அவ்வாறு உலகம் முழுவதும் உள்ள மெஷ் நெட்வொர்க்குகளின் பட்டியல்.

Hyperboria வளர்ந்து தற்போதுள்ள பழைய இணையத்திற்கு மாற்றாக வருவது என்பது உடனடியாக நடைபெறும் செயல் அல்ல. எனினும், அதற்கான தொடர் முயற்சிகள் மூலமும், குழுக்களாக மக்கள் ஆங்காங்கே இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு முதலில் மெஷ்லோக்கல்ஸ் (Mesh Locals) அமைத்துச் செயல்படுத்துவதே தற்போதைய பணியாக இருக்கும். இவ்வாறு அமைத்துவிட்டால், இந்த புதிய இணையமானது ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி, அதிகாரமும், உரிமையும் மக்கள் கைகளுக்கு வரும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இதுவே மக்களால், மக்களுக்காக, மக்களே உருவாக்கிக்கொள்ளும் இணையமாகும்.

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம், இந்த மாற்று செயல்பாட்டினை நம் நண்பர்களிடம், உறவினர்களிடம் எடுத்துரைப்பதுதான். ஒருவேளை நீங்கள் ஒரு கணினித்துறை வல்லுநராகவோ, ‘Computer Networks’-இல் விருப்பமுள்ளவராகவோ இருந்தால் FSFTN நண்பர்களை தொடர்புக் கொள்ளவும். அனைவரும் இணைந்து செயல்பட்டால் தான் ஒரு மாற்று சாத்தியமாகும். இந்த மாற்று இணையம் முழுக்க முழுக்க பரவலாக்கப்பட்ட (decentralized) வலைப்பின்னலாகும். இதன் மூலம் அதிகாரம் ஓரிடத்தில் குவிவதைத் தடுக்க முடியும்.

இன்று நாம் பயன்படுத்தும் இணைய வலைப்பின்னலை முதன்முதலில் உருவாக்கிய டிம் பெர்னர்ஸ்லீ அவர்கள் இன்றைய இணையம், தான் உருவாக்க நினைத்தது இல்லை, இன்றைய இணையம் மிகவும் ஆபத்தான ‘ஒரு சில நிறுவனங்களின் கட்டுபாட்டில் இயங்கும்’ நிலையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது என்று கவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இன்று நாம் ஓர் முக்கிய மைல்கல்லை எட்டியிருக்கிறோம். இன்று, உலகில் ஏறக்குறைய சரிபாதி மக்கள் இணையத்தை பயன்படுத்துவோராக இணையத்தில் இணைந்துள்ளனர். ஆனால் நம் முன் இரண்டு சவால்கள் இருக்கின்றன:

  1. மீதமுள்ள பாதி மக்களை எவ்வாறு நாம் இணையத்தில் இணைக்கப் போகிறோம்?
  2. இணையத்தைத் தற்போது பயன்படுத்தி வருவோர் உண்மையில் பயன்படுத்த விரும்பும் இணையம் இது தானா?

Digital Divide:

இணைய சேவையை பயன்படுத்துவோருக்கும் இணையம் சென்றடையாதோருக்கும் இடையிலான இடைவெளி, தற்போது சமூகத்திலிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை மேலும் வேகமாக விரிவடையச் செய்கிறது. பின்தங்கிய பகுதிகளிலோ, வருமானம் குறைந்த நாடுகளிலோ, ஏழையாகவோ, சில நேரங்களில் பெண்களாகவோ இருக்கும் காரணங்களினால் மக்கள் இணையத்திலிருந்து விடுபட்டுப்போகின்றனர். இணையத்திலிருந்து விடுபட்டுப்போவது அவர்களுக்கான வாய்ப்புகளிலிருந்தும் வருமானத்திலிருந்தும் அவர்கள் வாழ்வில் முன்னேற்றதிலிருந்தும் விலகிப்போவதற்கு ஈடானது என்றே கூற வேண்டும். மேலும் சமூகப்பொருளாதார பிரச்சனைகள், அரசியல் கொள்கைகள் உள்ளிட்ட சமூகத்தின் அடிப்படை அங்கத்திற்கானவற்றில் அவர்கள் பங்கெடுப்பதற்கும் குரல்கொடுப்பதற்கும் வாய்ப்புகள் இல்லாமலே போகிறது.

முற்காலத்தில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கேற்ற சூழல் தற்போதைய சூழலை விட மிகவும் கடினமாக இருந்தது. காலப்போக்கில் இணைய சேவை, தகவல்களை நொடிப்பொழுதில் கண்டறியவும், உரிய நபர்களிடம் தொடர்புக்கொண்டு கேட்டறியவும் உதவியது. ஆனால் இன்றும் அத்தகைய பலன்களைப் பெறாமல் இந்தியாவில் 75% மக்கள் போதுமான அடிப்படை இணைய சேவையைப் பயன்படுத்தவில்லை என்று அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. உலகில் இன்னும் இரண்டில் ஒருவருக்கு இணைய சேவை சென்றடையா நிலையே நிலவுகிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய பகுதியில் இணையக் கட்டமைப்புகளை உருவாக்க முதலீடு செய்தால் லாபம் வருமா என்ற கேள்விக்குறியில் பெரும்பாலான ஆப்ரிக்க மக்களுக்கு இன்னும் இணையம் சென்றடையவில்லை என்பதே உண்மை.

இன்னமும் நாம் இதைப்பற்றிக் கவலைக் கொள்ளாமலே இருந்தால் கடைசி நூறு கோடி மக்களுக்கு இணையம் சென்று சேர 2042ஆம் ஆண்டு வரை ஆகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஓர் முழு தலைமுறையையே நாம் பின்தங்கும் நிலையில் விட்டுச்செல்கிறோம்.

2016ஆம் ஆண்டு இணைய சேவையை (access to internet) சுத்தமான தண்ணீர், காற்று, இருப்பிடம் மற்றும் மின்சாரத்திற்கு இணையான அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. ஆனால் பாதி மக்கள் தொகைக்கு இன்னும் இந்த அடிப்படை உரிமை சென்றடையவில்லை அல்லது மறுக்கப்படுகிறது. இது மிகச்சிறிய பிரச்சனையாக அல்லது பிரச்சனையாகவே கூட நமக்கு தோன்றாமல் போகலாம். ஆனால் நமக்கு இணையம், மின்சாரம், மருத்துவம் என ஒவ்வொரு அடிப்படை சேவைகளும், அறிவியலின் மாபெரும் கண்டுபிடிப்புகளும் பல தலைமுறைகளைக்கடந்தும் பல தலைமுறைகளின் மொத்த அறிவியலும் அனுபவமும் சேர்ந்து நமக்கு வந்தடைந்ததன் விளைவாகத் தான் நாம் இன்று நம் வாழ்வை இவ்வாறு வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இத்தகைய அறிவியல் பயன்பாடு நாளைய சமூகத்திற்கு நாம் விட்டுச்செல்லுதல் எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு இத்தகைய அறிவியல் பயன்பாட்டை அனைத்து மக்களுக்கும் கிடைக்கப்பெறுதல் அவசியம்.

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? மூலை முடுக்கிற்கும் இணையம் சென்றடையும் வகையிலான கொள்கைகளைக் கொண்டுவர அரசிற்கு அழுத்தம் தர வேண்டும். மேலும் இணையத்தில் அரசின் குறுக்கீடுகளைத் தடுக்க வேண்டும். சமூக நீதிக்குக் குரல்கொடுத்தல் எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு சமூகத்தில் அனைவருக்கும் அனைத்து விதமான அணுகலும் (access to information) கிடைக்கவும் குரல் கொடுக்க வேண்டும். பல லட்சங்களும் கோடிகளும் செலவு செய்து, தரம் வாய்ந்த பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்று ஒருவர் சாதிப்பது எளிது. ஆனால் பணம் இருந்தால் தான் அத்தகைய அணுகல் கிடைக்கும் என்றால் நம்முடைய அடிப்படைக் கட்டமைப்பிலேயே பிழை இருக்கிறது என்று தான் அர்த்தம். இணையத்தைப் பற்றிப் பேசுகையில் இவ்வாறான கொள்கை முடிவுகளையும் பேச வேண்டி இருக்கிறது.

இன்றைய இணையம் – மக்களுக்கு அறிவியலின் மாபெரும் பொக்கிஷமாகும். ஆனால் வெகுசில நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே பெரும்பாலும் இணையம் இயங்குவது மிகவும் ஆபத்தான நிலையாகும். ஆரம்பத்தில் பல்வேறு இணையதளங்கள் மூலம் மக்களை இணைத்து வந்த இணையம் இன்று அப்படியே இல்லை. சில மேலாதிக்க நிறுவனங்களே இணையத்தில் நாம் எதை பேச வேண்டும், எத்தகைய விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று முடிவெடுக்கின்றன. அவர்களால் தங்களுக்கு ஈடான போட்டியாளர்கள் உருவாவதைத் தடுக்க முடிகிறது. அவர்களால் உலகெங்குமுள்ள சிறந்த, திறமையாளர்களை சிறந்த பல்கலைக்கழகங்களிடமிருந்து விலைக்கு வாங்க முடிகிறது. புதுமையான யோசனைகளின் மூலம் புதிதாக ஆங்காங்கே முளைக்கும் சிறு நிறுவனங்களை பெரும் தொகை கொடுத்து அவர்கள் கையகப்படுத்தவும் முடிகிறது. பெரும் தொகையை முதலீடு செய்து தங்களுக்கு போட்டியாளர்கள் வருவதைத்தடுத்தும், அதையும் மீறி புதுமையாக நிறுவனங்கள் தலைத்தூக்கினாலும் அதைப் போட்டிப் போட்டுக்கொண்டு பங்கிட்டும் கொள்கின்றன. மேலும் அவர்களிடமிருக்கும் பயன்பாட்டாளர்களின் தரவுகள் அவர்களே பிற்காலத்தில் உலகையே கட்டுப்படுத்தப்போகும் வெகுசில கைகளாக, மேலாதிக்கவாதிகளாக மாற்றி வருகின்றன. இந்நிலை எதற்கு வித்திடப்போகிறது? நாளைய உலகில் அனைத்துமே Google, Facebook, Apple போன்ற வெகுசில நிறுவனங்களே அனைத்தையும் தீர்மானிக்குமென்றால் அதெப்படி சரியாக இருக்கும்?

என்றைக்குமே அதிகாரம் ஓரிடத்தில் குவிவது ஆபத்தான சூழலைத்தான் உருவாக்கும். Centralized power always kills! இதை நாம் எப்படி சமாளிக்கப் போகிறோம்?

இணையத்தின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு சில நபர்கள் கூடித் தீர்மானிப்பது சரியன்று. மேலும், அதை இன்று இணையத்தில் இணைந்திருக்கும் அனைவரும் சேர்ந்து தான் தீர்மானிக்க வேண்டும் என்பதை விட, இன்று வரை இணையத்தில் இணையாதோரும் சேர்ந்து தான் தீர்மானிக்க வேண்டுமென்பதே சரி!

The future of the web isn’t just about those of us who are online today, but also those yet to connect.

– Tim Berners Lee

நான் பெருநிறுவனங்களை எதிர்க்கவில்லை. ஆனால் பெருநிறுவனங்கள் இணையத்தையும் இணைய பயன்பாட்டாளர்களின் தரவுகளையும் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதைத்தான் முன்னரே சற்றே எச்சரிக்க விரும்புகிறேன். பெருநிறுவனங்கள் தங்களின் லாபத்தை அதிகரிப்பதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள், செய்யப்போகிறார்கள், செய்ய முடியும் என்பதற்கான சாத்தியக்கூறுகளையும் WhatsApp, Facebook, Twitter, Swiggy, Zomato, Ola, Uber, Tez என நாம் பயன்படுத்தும் இணைய சேவைகளின் பின்னாலுள்ள ஆபத்தையும், அதிகாரம் ஓரிடத்தில் குவிவதால் ஏற்படப்போகும் பேரழிவுகளையும் வரும் வாரம் விரிவாகப் பார்ப்போம்.

குறிப்பு: இப்பதிவில் குறிப்பிட்டுள்ள பெரும்பாலான கருத்துக்கள் இன்று நாம் பயன்படுத்தும் இணையத்தின் தந்தையான டிம் பெர்னர்ஸ் லீ அவர்களின் வாக்குமூலங்களிலிருந்து எடுக்கப்பெற்றது.

நன்றி: theguardian.comபிரசன்னா வெங்கடேஷ், முகப்புப்படம்: pixabay.com

இக்கட்டுரைத்தொடரின் முந்தைய/அடுத்த பகுதிகளைப் படிக்க:

உன்னைப் பணயம் கொள்ளும் இணையம்!

What do you feel about this?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s