என்னுடைய தோழி ஸ்வேதா என்பவருக்குத் திருமணம் என்று இருவீட்டாரும் பேசி முடிவெடுத்திருந்தனர். நிச்சயதார்த்தத்திற்கு தேதி குறிக்கப்பட்டது. மணமக்கள் இன்னும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளத் தொடங்காத சூழலில் என் தோழி தன்னுடைய மாப்பிள்ளையை முகநூலில் கண்டுபிடிக்க அவர் பெயரில் தேடிப்பார்த்திருக்கிறார். கிடைக்கவில்லை. சில தினங்கள் கழித்து மாப்பிள்ளையின் சகோதரி, ஸ்வேதாவிடம் வாட்சாப்பில் உரையாடத் தொடங்கினார். மாப்பிள்ளையின் சகோதரியைக் கண்டுபிடித்துவிட்டால் மாப்பிள்ளையைக் கண்டுபிடித்துவிடலாம் என்றெண்ணி, மாப்பிள்ளையின் சகோதரியின் பெயரில் முகநூலில் தேடிப் பார்த்திருக்கிறார். கிடைக்கவில்லை. இரண்டு தினங்கள் கழித்து அந்தப் பெண்ணின் பெயரை ஸ்வேதா தன்னுடைய முகநூல் பரிந்துரைப்பட்டியலில் பார்த்திருக்கிறார்.
வாட்சாப்பில் யாரிடம் பேசுகிறோம் என்பதையும் அந்த நபரின் அலைபேசி எண்ணையும் வைத்து ஃபேஸ்புக் நிறுவனம் இதைக்கண்டறிந்து தனக்கு பரிந்துரைத்திருக்க வேண்டும் என்றெண்ணி அந்த நபருக்கு நட்புப் பட்டியலில் சேர்த்துக்கொள்வதற்கான அழைப்பை விடுத்துள்ளார். இரண்டு தினங்கள் கழித்து ஸ்வேதா எந்த மாப்பிள்ளையை முகநூலில் தேடினாரோ அவருடைய பெயரையே தன்னுடைய பரிந்துரைப்பட்டியலில் பார்த்து அதிர்ச்சியுடன் இதைப்பற்றி என்னிடம் தெரிவித்தார். இத்தனைக்கும் மாப்பிள்ளையின் சகோதரி ஸ்வேதாவை நட்புப் பட்டியலில் இன்னும் சேர்த்துக்கொள்ளவில்லை. ஸ்வேதாவிற்கும் அவளுடைய மாப்பிள்ளைக்கும் பொதுவான நண்பர் (mutual friends) யாருமில்லை. மாப்பிள்ளையின் செல்பேசி எண் கூட ஸ்வேதாவிடமில்லை. பிறகெப்படி ஃபேஸ்புக் நிறுவனம் சரியாக அவரைக் கண்டு பிடித்து இவரிடத்தில் பரிந்துரைத்தது? இதெப்படி சாத்தியம்?!?!?!
இவ்வளவு திறன் அவர்களுக்கு எப்படி வந்தது? இதை நிச்சயமாக மனிதர்களால் செய்திருக்க முடியாது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட அறிவேந்திரங்கள் நம்முடைய தகவல்களைத் திரட்டி நம் தகவல்களை ஒருங்கிணைத்து அதன்மூலம் நமக்குத் தேவையானவற்றைக் கணித்து நமக்கு வழங்குகின்றன. நம்மிடம் வழங்கப்படும் தகவல்களே இவ்வளவு ஆழமாய் துள்ளியமாய் கணக்கிட முடிகிறதென்றால் நம்மிடம் காட்டப்படாமல் அத்தகைய அறிவேந்திரங்கள் நம்மைப்பற்றி எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கும்? ஒவ்வொரு நொடியும் நம்மைக் கண்காணித்துக்கொண்டும் நம்மைப்பற்றிய தகவல்களை சேகரித்துக்கொண்டும் இயங்கும் இத்தகைய அறிவேந்திரங்களின் திறன் பிற்காலத்தில் கற்பனைக்கெட்டா வண்ணம் அதிகரிக்கும் என்பதை நாம் அறிந்துவைத்திருக்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இத்தகைய அறிவேந்திரங்களை உருவாக்குவதில் போட்டி போடும் இணைய நிறுவனங்கள் தற்போது நம் வாழ்வை மிகவும் ஆக்கிரமித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டன. Ola, Uber, Big Basket, Paytm, Tez, Amazon, Flipkart, Grofers, Swiggy, Zomato, BookMyShow, RedBus என நாம் அன்றாடம் பயன் படுத்தும் இணைய சேவைகள் நம் வாழ்வை மிகவும் எளிமைப்படுத்திவிட்டபோதிலும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்படும் நன்மைகளை விடுத்து அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்று யோசித்துப்பார்த்திருக்கிறீர்களா?
உதாரணத்திற்கு நாம் நண்பர்களுடன் கடற்கரைக்குச் செல்கிறோம். அங்கு அலைகளை ரசித்துக்கொண்டிருக்கையில் அருகில் உள்ள பஜ்ஜி கடையிலோ சுண்டல் வியாபாரியிடமோ ஐஸ்க்ரீம் வியாபாரியிடமோ சென்று தின்பண்டம் வாங்கி சாப்பிடுவோம். அப்பொழுது யாரேனும் நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா, இன்னும் சில காலம் கழித்து நம் ஸ்மார்ட்ஃபோனில் ஒரு செயலி (app) இருக்கும். நாம் நம் ஃபோனை எடுத்து எத்தனை பஜ்ஜி, எத்தனை ஐஸ்க்ரீம், எத்தனை பஞ்சு மிட்டாய், என்ன கலர், என்ன ப்ளேவர் என கொடுத்து ஆர்டர் செய்வோம். அந்த செயலி நாம் இருக்கும் இடத்தைச் சரியாக ஒரு தனியார் நிறுவனத்தின் கிளைக்கு அனுப்பி, அவர்கள் சில மணித்துளிகளில் ருசிகரமானத் தின்பண்டங்களை நம்மிடம் கொடுத்துவிட்டுப் பணத்தை ரொக்கமாகவோ டிஜிட்டல் மணியாகவோ பெற்றுக்கொண்டு சென்றுவிடுவர். அட செம்ம ஐடியாவா இருக்கே! சீக்கிரம் இந்த தொழில்நுட்பம் வர வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு நாள் அந்த தொழில்நுட்பம் வரத்தான் போகிறது. அதிலொன்றும் சந்தேகமில்லை. ஆனால் அதனால் எத்தனை சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் நம்மால் அழியப்போகிறது என்பதை நாம் யோசிக்க மறுக்கிறோம்.
என் அலுவலகத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் ஏதோ மருந்து வாங்க வேண்டும் என்று பேச்சு வரும்பொழுது என்னுடன் இருந்த இரு நண்பர்களுமே உடனே ஒரு வெப்சைட்டை கூறி அதில் வாங்கு, அதில் விலை கம்மியாக இருக்கும் என்று கோரசாக கூறினார்கள். அவர்களிடம் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டேன். தொழில்நுட்பம் வளரலாம், ஆனால் அதற்காக எல்லாவற்றையுமே பெருநிறுவனங்களிடமிருந்து தான் வாங்க வேண்டுமா? அவ்வாறு வாங்கினால் சிறு வியாபாரிகள் என்ன ஆவார்கள்? அவர்களெல்லாம் கூண்டோடு தற்கொலை செய்துக்கொள்ள வேண்டுமா? பெருநிறுவனங்களால் மிகவும் மலிவாகக் கொடுக்க முடிகிறதென்றால் அவர்கள் நம்மை அந்த நிறுவனத்திற்கு வாடிக்கையாளராக ஆக்கவேண்டி அச்சலுகையை கொடுக்கிறார்கள். அதிலென்ன தவறு, எனக்கு எங்கே மலிவாகக் கிடைக்கிறதோ அங்கே தானே வாங்க முடியும் என்று நீங்கள் கூறினால் நிச்சயமாக அதில் தவறொன்றுமில்லை. ஆனால் அதனுடன் ஒரு ஐந்து ரூபாய் அதிகமாகக் கொடுத்து நம் தெருவிலிருக்கும் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வாங்கினால் நம் சொத்து ஒன்றும் அழிந்துவிடப்போவதுமில்லை, அதில் கிடைக்கும் லாபத்தில் அந்த மெடிக்கல் ஷாப்காரரும் பணக்காரராகிவிடப்போவதுமில்லை. ஆனால் நாம் தனி நபராக செய்யும் ஒவ்வொரு விஷயமும், பிறருக்கு பரிந்துரைக்கும் ஒவ்வொரு விஷயமும் அதோடு நின்றுவிடப்போவதில்லை. இவ்வுலகில் நாம் ஒரு கருவி தான். நம்மால் ஏதோ ஒன்று நம் சமூகத்திற்கு நடந்தே தீரும்.
உதாரணத்திற்கு ஓலா, ஊபர் எடுத்துக்கொள்வோம். அனைவரும் ஓலாவையும் ஊபரையும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம், நம் தெருவோரம் ஆட்டோ/கார் வைத்திருக்கும் ஒருவர் அந்நிறுவனங்களுடன் சேராமல் தனியாக இருக்க விரும்புகிறார். ஆனால் நாம் தான் தொடர்ந்து ஓலா மற்றும் ஊபர் நிறுவன சேவையையே பயன்படுத்துவது மூலம், அவரை ஒன்று ஓலா/ஊபரிடம் சேர், அல்லது தொழிலை விட்டு வெளியே செல் என்று மறைமுகமாக நிர்பந்திக்கிறோம். விளைவு – ஒன்று, அனைவரும் அந்த மாதிரி பெருநிறுவனங்களில் சேர்ந்து, இறுதியில் அந்தத் துறையே பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்று விடும், அதன் பின் அந்நிறுவனங்களை நம்பியே அத்துறை இருக்கும் நிலை வந்து அவர்கள் அத்துறையை தாங்கள் விரும்பியவாறு மாற்றியமைக்க முடியும். அப்பொழுது அந்நிறுவனங்களின் கீழ் சேராமல் சுதந்திரமாகத் தனியாக ஆட்டோ/கார் வைத்திருந்த நமக்குத் தெரிந்த கடைசி ஒருவரும் அந்த நிறுவனங்களின் கீழ் வந்திருப்பார், அல்லது தொழிலை விட்டே நம்மால் துறத்தியடிக்கப்பட்டிருப்பார்.
நமக்கேத் தெரியாமல் நம்மைச் சுற்றி சமூகத்தில் எவ்வாறான அழுத்தங்களை நாம் நிர்ப்பந்திக்கிறோம், அதனால் எவ்வளவு பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உங்களை ஓலா, ஊபரை பயன்படுத்தக்கூடாதென்றோ ஆன்லைனில் எதுவுமே வாங்கக்கூடாதென்றோ நான் கூறவில்லை. ஆனால் அவசியப்பட்டாலொழிய எல்லாவற்றையும் பெருநிறுவனங்களுக்கு தாரை வார்க்க வேண்டாம் என்று தான் கூறுகிறேன். இன்று நீங்கள் Zomatoவிலும் Swiggyயிலும் உணவு வாங்கிப் பழகினால், நாளை நம் தெருவோரத்திலிருந்த தள்ளுவண்டிக்கடை காணாமல் போகும். காரணம் சிறு சிறு கடைகளையும் உணவு விடுதிகளையும் நாம் பெருநிறுவனங்களின் கீழ் வரச்சொல்லி நிர்ப்பந்திக்கிறோம். அவர்கள் அந்நிறுவனங்களின் கீழ் வரவேண்டுமென்றால் அதற்கு ஒரு விலைக் கொடுக்க வேண்டி வரும், அவர்கள் அதைப் தாக்குப் பிடிக்க முடியாமல் போகலாம்!! எனவே தேவைப்பட்டாலொழிய ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கலாம். ஏற்கெனவே செல்போனும் டிவியும் ஆன்லைனில் வாங்க ஆரம்பித்துவிட்டோம். நாளைய சமூகத்தில் வியாபாரத்திற்கு செல்போன் கடையையும் எலக்ட்ரானிக்ஸ் கடையையும் வைக்கும் வாய்ப்பைப் பறிக்க ஆரம்பித்து விட்டோம். இன்னும் ஒவ்வொரு துறையாக சிறுவியாபாரிகளை நாம் அழித்துக்கொண்டே வருகிறோம்.
இன்று ஓலா, ஊபரில் பயணிப்பதை நாம் பெருமையாகக் கொள்கிறோம். நாளை தானாக இயங்கும் கார்கள் சந்தைக்கு வரும். ஓலாவும், ஊபரும் கூகிள் நிறுவனத்திடமோ ஆப்பிள் நிறுவனத்திடமோ அந்தத் தொழில்நுட்பத்தை வாங்கும், இரண்டு பெருநிறுவனங்களும் சேர்ந்து ஓலா ஊபரில் சேர்ந்திருக்கும் அனைத்துக் கார்களையும் விடுத்து வெறும் தானியங்கி கார்களை மட்டும் இயக்க முடிவு செய்யும். நாடு முழுவதுமுள்ள வாகன ஓட்டுனர்களின் அடிப்படை வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு இறுதியில் அவர்கள் தற்கொலையை நோக்கிச்செல்லும் நிலையே உருவாக நேரிடும். அதற்கு மறைமுகமாக நாமும் ஒரு காரணமாகிவிடுவோம். அதுவே ஓலாவையும் ஊபரையும் நாம் ஆதரித்ததில் கொஞ்சமாவது நம் உள்ளூர் சிறுவியாபாரிகளையும், ஒன்றிரண்டு கார்களை வைத்து சுதந்திரமாக பிழைப்பு நடத்தியவரையும் நாம் கண்டுக்கொண்டிருந்தால் அப்பெருநிறுவனங்களின் மோனோபோலி அத்துறையில் வந்திருக்காது!
நிச்சயமாக நான் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிரானவனல்ல. ஒரு தொழில்நுட்பம் வளர்ந்தால் அது எந்தளவிற்கு வேலைவாய்ப்பை நீக்குகிறதோ அந்தளவிற்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவும் செய்யும். முதலில் நீராவி எஞ்சின், பிறகு மின்சாரம், கணிப்பொறி மற்றும் இணையம். இந்த மூன்று தொழிற்புரட்சியிலும் எந்தளவிற்கு வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டதோ அதை விட அதிகமாக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது. உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. ஆனால் அடுத்து வரும் தொழில்நுட்பப்புரட்சியை இவ்வுலகம் எப்படி தாக்குபிடிக்கப்போகிறதென்றுத் தெரியவில்லை. பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்காக நம் உள்ளூர் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் முன் நாம் செய்யும் ஒவ்வொரு அசையும் எந்தளவிற்கு நம்மைச் சுற்றி அழுத்தங்களை ஏற்படுத்தும் என்பதை சற்றே சிந்தித்துப்பார்த்தால் நன்று!
நம் உள்ளூர் மெடிக்கல் ஷாப் கடைக்காரரையும், மளிகைக்கடைக்காரரையும் உள்ளூர் வாகன ஓட்டுனரையும் அவர்கள் தொழிலை ஒழிக்க நிர்பந்திக்கும் வகையிலும், முதலில் சந்தையில் இடம்பிடிக்க அதிக சலுகைகளை வழங்கி நம்மை வாடிக்கையாளர்களாக மாற்றவும் பெருநிறுவனங்கள் பெருமளவில் செலவு செய்கிறார்கள். எப்படி ஜியோ நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தை விரட்டியடித்ததோ அதே போல் தான் இணைய பெருநிறுவனங்கள் நம் வாழ்வை ஆக்கிரமித்துக்கொள்ள நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு சிறு மற்றும் சாதாரண வியாபாரிகளை விரட்டியடிக்கக் காய் நகர்த்தி வருகிறார்கள்.
2017ஆம் நிதியாண்டில் மட்டும் Ola நிறுவனம் 4,898 கோடி ரூபாயும், Flipkart நிறுவனம் 8,771 ரூபாயும், Paytm நிறுவனம் 899.6 கோடி ரூபாயும், Big Basket நிறுவனம் 312 கோடி ரூபாயும் நஷ்டமடைந்திருக்கிறார்கள். இவ்வளவு நஷ்டத்தில் ஓடினாலும் நமக்கு சலுகைகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார்களென்றால் அது ஏன் என்று நாம் சிந்தித்திப் பார்க்க வேண்டாமா?
சமீபத்தில் Google நிறுவனம் Tez என்ற கட்டண சேவையை அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் நாம் நம் நண்பர்களுக்கு பணம் அனுப்புதல், பெறுதல், இணையத்தில் பல சேவைகளுக்கு பணம் செலுத்துதல் போன்ற சேவைகளைப் பெற முடியும். அந்த செயலியில் இணைவதற்கு நம் நண்பர்களை நாம் சேர்த்து விட்டதால் நமக்கும் அந்த நபருக்கும் தலா 51 ரூபாய் வழங்கியது.. அதன் மூலமே தான் Tez செயலி அனைவரிடத்திலும் பிரபலமானது. மேலும் cashback எனப்படும் சலுகை மூலம் ஆயிரக்கணக்கில் பணத்தை வாடிக்கையாளருக்கு வாரி வழங்கிருக்கிறது. தற்போது WhatsAppஇலும் இதே சேவையை அறிமுகப்படுத்த Facebook நிறுவனம் தீவிரமான முயற்சி எடுத்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் நம் WhatsAppஇல் நம் நண்பரிடம் பேசுவது போலவே பணம் அனுப்புவதும் அவ்வளவு சுலபமாகிவிடும். ஏற்கெனவே Paytm, Mobikwik, Freecharge, Amazon Pay என wallet businessஇல் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் சூழலில் Google மற்றும் Facebook நிறுவனம் இந்தியாவில் இந்த சேவையை சந்தைப்படுத்த எதற்காக இவ்வளவு மெனக்கெட வேண்டும்?
சுமார் ஒரு வருடம் கழித்து நம் நாட்டின் ஒட்டுமொத்த செலவிடும் நடத்தை (spending behaviour) விவரங்களை Google/Facebook என்ற தனிப்பெரும் நிறுவனங்கள் பெற்றிருக்கும். இடம், மாநிலம், மொழி வாரியாக, ஒவ்வொருவருக்கும் எந்த தேதியில் பணம் வரும், ஒவ்வொருவரும் எவற்றிற்கெல்லாம் எவ்வளவு செலவு செய்கிறார்கள், யார் யாருக்கு பணம் அனுப்புகிறார்கள், எந்த நேரத்தில் என்ன தேவைப்படும், இவனுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, இவனிடம் எந்த நேரத்தில் எதைக்கொடுத்தால் எதை விற்க முடியும் என அனைத்தையும் Google/Facebook நிறுவனங்களின் அறிவேந்திரங்கள் துல்லியமாகக் கணிக்கும்! அடுத்து நடப்பது என்னவாக இருக்குமென்று நமக்கே தெரியும். நம்மைப்பற்றி நமக்குத் தெரிந்தவற்றை விட Google மற்றும் Facebook நிறுவனங்களுக்குத் தெரியும். நம் தகவல்களைப் பிற தனியார் நிறுவனங்களுக்கு விற்று நம்மை நமக்கேத் தெரியாமல் சந்தைப்படுத்தப் பார்க்கிறார்கள்.
அட நாம் பணம் செலுத்தும்/பெரும் சேவைகளுக்கு எப்படியானாலும் ஏதேனும் நிறுவனத்தின் சேவையைத்தானேப் பயன்படுத்தியாக வேண்டும், Paytm, Freecharge ஆகிய நிறுவனங்கள் இதே தகவல்களை ஆராய்ந்து நம் தகவல்களை விற்க முடியாதா என்றால் முடியும். அவ்வளவு ஏன், Paytm, Freecharge ஆகிய சேவைகளைப் பயன்படுத்தாமல் வெறும் நம் வங்கிக் கணக்குகளில் செய்யும் பணப் பரிவர்த்தனைகளை வைத்தே இப்படிப்பட்ட தகவல்களை வெளியே விற்று அந்நிறுவனங்கள் சம்பாதிக்க முடியுமே! Tez’ஐ மட்டும் தவறென்று எப்படிக் குறிப்பிட முடியும்?! ICICI, SBI, Paytm, Freecharge என நம் வங்கிகளுக்கும் உள்ளூர் wallet நிறுவனங்களுக்கும் நம் தகவல்களைப் பிறருக்கு விற்கின்ற அதே வாய்ப்புகள் இருக்கும்போதும், எதைப்பற்றி வேண்டுமானாலும் எவ்வளவு செலவு வேண்டுமானாலும் செய்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான ஆற்றலும் திறனும், அதற்கான இதர உள்ளீடுகளும் தகவல்களும், கிடைக்கும் தகவல்களை ஒன்றோடொன்று ஒருசேர ஒருங்கிணைத்துப் பல்வேறு விஷயங்களை வெளிக்கொணரும் திறனும் அவ்விரு நிறுவனங்களுக்கு மிக அதிகமாக இருக்கிறது என்பதே நிதர்சனம்.
தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் மட்டுமில்லாமல், அரசு சட்டங்களும் மக்களை விட தனியார் நிறுவனங்களுக்கே சாதகமாகச் செயல்படுகின்றன. இணைந்திருங்கள், வரும் வாரங்களில் அலசுவோம்!!!
முகப்புப்படம்: pixabay.com
இக்கட்டுரைத்தொடரின் முந்தைய/அடுத்த பகுதிகளைப் படிக்க: