உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 8

கடந்த சில வாரங்களாக செய்திகளிலும் சமூக வலைதளங்களிலும் அதிகமாகப் பேசப்பட்டுவரும் தலைப்பு ‘Momo Challenge’. மோமோ என்றால் என்ன? யார் அந்த மோமோ? அவர்களின் பின்புலம் என்ன? அலசுவோம், இந்த ‘உன்னைப் பணயம் கொள்ளும் இணையம்’ பகுதியில். இரண்டு வருடங்களுக்கு முன் Blue Whale என்னும் விளையாட்டு தற்கொலைக்குத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டு சிறுவர்களைக் குறிவைத்து வெளியிடப்பட்டுப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஐம்பது நாட்களுக்கான இலக்குகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வகையிலான வடிவமைப்பைக் கொண்ட Blue Whale விளையாட்டு, முதலில் ரயில் தண்டவாளங்களில் தங்களை புகைப்படமெடுத்து அனுப்ப வேண்டும் என்பது போன்ற சாதாரண இலக்குகளில் தொடங்கி, நாளடைவில் தங்களையே வருத்திக் கொள்ளும் வகையில் கத்தியால் கையில் கிழித்து சில எழுத்துக்களை எழுதுவது போன்ற இலக்குகளை வழங்கியும், தற்கொலையைத் தூண்டும் வகையிலான இசை, திரைப்படங்களைப் பார்ப்பதையே இலக்குகளாக வழங்கியும் இறுதியில் தங்களையே மாய்த்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற இலக்குகளை வழங்கி சிறார்களின் வாழ்வைக் குலைக்கும் அந்த விளையாட்டு தற்போது முற்றிலும் அழிக்கப்பட்டதாய் நம்பப்படுகிறது. அந்த விளையாட்டு தொடர்பாக ரஷியாவில் பலர் கைதும் செய்யப்பட்டனர்.

Momo Challenge என்பது ஒரு Facebook பக்கத்திலிருந்து தான் முதன்முதலில், உங்களால் முடிந்தால் இந்த எண்ணுக்கு WhatsAppஇல் செய்தி அனுப்புங்கள் என்றவாறு நமக்கு சவால் விடும்வகையில் பதிவு செய்யப்பட்டது. அந்த எண்ணிற்கு WhatsAppஇல் செய்தி அனுப்புபவருக்கு Momo என்ற கதாபாத்திரம் பேசுவதாக ஆரம்பித்து நம்மைப் பற்றிய தகவல்களைக் கேள்விகள் மூலமாகப் பெற்று, அவ்வப்போது சில படங்களையும் காணொளிகளையும் அனுப்பி, போகப்போக Blue Whale விளையாட்டைப் போன்றே இலக்குகளை வழங்கி, அவற்றை செய்ய மறுத்தால் உங்களுடைய ரகசியப் படங்களை வெளியே கசிந்துவிடுவோம் எனவும் உங்களுடைய cell phone ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும் மிரட்டி, அச்சமூட்டி தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்ய வைக்கிறார்கள். சில நேரம் Momo எண்ணிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பில் யாரோ ஒருவருடைய அழுகுரல் கேட்பதாகவும், தாங்கமுடியா வலியை அனுபவிப்பது போன்ற ஓசைகளும் கேட்பதாகவும் நள்ளிரவில் எழுவது, மாடியிலிருந்து குதிப்பது, இறுதியில் தற்கொலை செய்துக் கொள்வதென மோமோவிடமிருந்து வரும் கட்டளைகள் நீள்வதாகவும் இதுவரை Momo என்ற அந்த எண்ணுடன் தொடர்பு கொண்டோர் விவரிக்கின்றனர்.

அந்த விளையாட்டில் கூறப்படும் விதிகளை மீறினால் அச்சுறுத்தும் வகையிலான படங்களும் காணொளிகளும் அனுப்பப்பட்டு, தங்களின் ரகசியத் தரவுகளை வெளியிட்டுவிடுவதாகவும் மிரட்டப்படுவதும் நடக்கிறது. முதன் முதலில் அர்ஜென்டினாவில் ஓர் 12 வயது சிறுமி தன்னைப் படம்பிடித்துக்கொண்டே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் நடந்து, விசாரணையில் அச்சிறுமி தானாக தற்கொலை செய்யவில்லை என்றும், அவருடைய ஸ்மார்ட்போனில் அவருக்கு WhatsAppஇல் மோமோ என்ற பெயரில் யாரோ தற்கொலைக்குத் தூண்டி இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் மெக்சிகோ, அர்ஜென்டினா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் காட்டுத்தீ போன்று மோமோ குறித்த செய்திகள் பரவி வருகிறது. எனினும் இந்தியாவில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எங்கேயும் மோமோ குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை.

Momo என்பதின் பின்னே இதுவரை மூன்று எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் உள்ள நிலையில் உண்மையில் மோமோ என்பது ஒரு தனி நபராகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. குறுகிய மனப்பான்மையும் வக்கிரபுத்தியும் கொண்டு, தாழ்வு மனப்பான்மை கொண்ட இளைஞர்களை, குறிப்பாக ஏழை சிறுவர்களைக் குறிவைத்து நடக்கும் இத்தகைய வன்முறைகளுக்குப் பின்னாலுள்ளவர்களை புலனாய்வுத்துறை கண்டுபிடிக்க நாட்கள் ஆகலாம். எனினும் யாவரும் பயன்படுத்தும் வகையிலான இணையம் எனும் தளம் (platform) அமைக்கப்பட்டுவிட்டதென்பதால், இந்த தளம் எப்படி கையாளப்படும் என்பதை வரையறுக்கவோ வரைமுறைபடுத்தவோ எவராலும் இயலாது. முன்பு Blue Whale என்னும் செயலியை உருவாக்கியவரைக் கைது செய்து அதன் பின்னணியை முற்றிலுமாக அழித்திருக்கலாம். எனினும், நேற்று Blue Whale, இன்று Momo, நாளை இன்னும் பல ஆபத்தான செயலிகளின் வருகையை நம்மால் தடுக்க முடியாது. இதற்கு என்ன தான் தீர்வு?

அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் நாம் பல்வேறு வகையான சவால்கள் பிரபலமடைந்து வருவதைக் காணலாம். #TidePodChallenge, #IceBucketChallenge, #KikiChallenge என முட்டாள்தனமான செயல்களைக்கூட மக்களைத் தூண்டும் வகையில் செய்தால் கற்பனைக்கெட்டா வகையில் அவை பிரபலமடைந்துவிடுகின்றன. தக்காளியை நம் முகத்தில் பிழிந்துக் கொள்ளச் சொன்னால் முட்டாள்தனம் எனக்கூறி அதைச் செய்ய மறுப்போம். அதுவே நாளை #TomotoSplashChallenge என்று எவரோ செய்த காணொளியை வெளியிட்டுத் தொடங்கி வைத்தால் யாவரும் அந்த முட்டாள்தனத்தையே பெருமையுடன் செய்யக்கூடும். Momo Challenge’ற்கும் அடிப்படை இதுவே. அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து வரும் WhatsApp செய்திகளினால் உங்களை என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணம் உங்களை அந்த நபரிடம் பேச்சு கொடுத்து தான் பார்க்கலாமே என்ற ஆர்வத்தைத் தூண்டும். உங்களை மீறி உங்களை என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணத்தைப் பயன்படுத்தி அவர்கள் உங்களைக் குறிவைத்து உங்கள் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் உங்களைப்பற்றிய தகவல்களைப் பெற்று உங்களை மிரட்டித் தவறான பாதைக்கு இட்டுச்செல்லக்கூடும்.

fantasy-2530602_1920

எந்தவித நேரடியான தொடர்புமின்றி ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டுமளவிற்குச் செய்வது சாத்தியமா என்றால் சாத்தியமே! வாழ்வில் பெரும் துன்பத்தை சந்தித்து, அனைத்தையும் வெறுத்து தன் உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என்றெண்ணி தற்கொலைக்கு முயன்ற ஒருவரை மனோதத்துவ முறையில் உளவியல் அணுகுமுறையின் மூலம் அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து, புத்தம் புதிய வாழ்வைத் துவங்க வைத்தல் எவ்வளவு சாத்தியமோ, அதே அளவிற்கு தாழ்வு மனப்பான்மைக் கொண்ட ஒருவரை மனோதத்துவ முறையில் உளவியல் அணுகுமுறையின் மூலம் வழிகெடுத்துத் தற்கொலை செய்யவைப்பதும் சாத்தியமே!

இவ்வாறான ஆபத்தான சேவைகளை இணையத்தில் வழங்க பல வழிமுறைகள் இருந்தாலும், எளிதில் மக்களின் கவனத்தை ஈர்க்க சமூக வலைதளங்களே மூலதனமாக இயங்குகின்றன. பெரும்பாலும் நாம் WhatsApp செயலியில் நமக்கு வரும் இணைப்புகள் யாவும் தானாகவே பதிவிறக்கம் செய்துக்கொள்ளும் வகையிலான அமைப்பில் தான் பயன்படுத்துகிறோம் (auto-download media). இதனால் நமக்கு வரும் செய்திகளில் எவர் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் அனுப்பவும் அதை நம் ஸ்மார்ட்போன் பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துக் கொள்ளவும் முடிகிறது. நம் ஸ்மார்ட்போனில் நமக்கே தெரியாத மறைமுகமாக இயங்கும் வகையிலான செயலிகளை நமக்கு எவரோ ஒருவர் அனுப்பும்போது அவை தானாகவே தங்களை நிறுவிக்கொண்டு (install) நம் ஸ்மார்ட்போனில் நம்முடைய தகவல்களைத் திருடி மூன்றாம் நபருக்கு அனுப்ப வழிவகுக்கிறது.

Momo போன்ற ஆபத்தான சேவைகளுக்குப் பின்னாலுள்ளவர்கள் தங்களின் சொந்த மொபைல் எண்ணைப் பயன்படுத்துவது அரிது. இது போன்று தங்களின் அடையாளங்களை மறைத்து சீரற்ற (random) எண்களிலிருந்து தொடர்பு கொள்வதற்கு இணையத்தில் பல்வேறு வழிகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு WhatsApp போன்ற சேவைகளில் நாம் இணைய ஏதேனும் ஓர் மொபைல் எண் தேவைப்படுகிறது. எனினும் தங்களின் அடையாளங்களை மறைத்து ஏதேனும் ஓர் சீரற்ற எண்ணிலிருந்து தொடர்புக் கொள்ள Burner போன்ற சேவையை யாவரும் பயன்படுத்தி நொடிப்பொழுதில் புதிதாக ஓர் சீரற்ற தற்காலிக மொபைல் எண்ணை யாவரும் எளிதாகப் பெற முடிகிறது. இதைப்பயன்படுத்தி WhatsApp போன்ற சேவைகளில் கணக்குகளைத் துவக்கி அந்த எண்ணை உடனடியாக அழித்துவிட்டு, WhatsAppஇல் மட்டும் அந்த கணக்கைப் பயன்படுத்தி தங்களின் அடையாளங்களை மறைத்து யாவரையும் தொடர்புக் கொண்டு இவ்வாறான மிரட்டல்களை விடுக்க முடிகிறது.

இணையத்தில் இவ்வாறு பல சேவைகள் இருக்கின்றன. தற்காலிக மொபைல் எண் தொடங்குவது போலவே உங்களுடைய மொபைல் எண்ணிலிருந்து உங்களுக்கே தொலைபேசி அழைப்பு விடுக்கவும் முடியும்! உதாரணத்திற்கு உங்களுடைய தொலைபேசி எண் 9876543210 என்று வைத்துக்கொள்வோம். உங்களுடைய அலைபேசியை ஒரே ஒரு நிமிடம் என்னிடம் தந்தால், இணையத்திலிருக்கும் சில சேவைகளில் உங்கள் மொபைல் எண்ணை அளித்து அதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஒருமுறைக்கடவுச்சொல்லை (OTP) மட்டும் உங்கள் அலைபேசியிலிருந்து எடுத்து அங்கீகரித்து (authorize) விட்டால் என்னால் உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி எவருக்கு வேண்டுமானாலும் தொலைபேசி அழைப்பை விடுக்க முடியும். உங்கள் அலைபேசிக்கே உங்கள் எண்ணிலிருந்து அழைக்க முடியும். பாதுகாப்புக் கருதி அவ்வாறான சேவைகளின் விவரங்களை இங்கே நான் வழங்கவில்லை. ஆனால் சற்றே சிந்தித்துப் பாருங்கள், சாதாரணமாக இணையத்தில் கிடைக்கும் சேவைகளாலேயே நொடிப்பொழுதில் இவ்வாறு செய்ய முடிகிறதென்றால், உண்மையான இணையத்தில் பதுங்கி இருக்கும் Blue Whale, Momo போன்ற சேவைகளின் பின்னாலுள்ளவர்களால் என்ன செய்ய முடியும்?

இதற்கெல்லாம் மூலம், நாம் பயன்படுத்தும் சேவைகளுக்குத் தேவைக்கதிகமான அனுமதிகளையும் அதிகாரங்களையும் நாம் வழங்கிப் பழகிவிட்டோம் என்பது தான். பெரும்பாலும் நம் ஸ்மார்ட்போனில் நாம் பதிவிறக்கம் செய்யும் செயலிகளுக்கு நம் ஸ்மார்ட்போனின் கேமரா, கேல்லரியைப் பயன்படுத்தும் அனுமதியும் அதிகாரமும் இயல்பாகவே (by default) வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக விளையாட்டு வகையான செயலிகளுக்கு எதற்காக நம் கேமராவும், கேல்லரியும் பயன்பட வேண்டும்? இதையெல்லாம் நாம் எண்ணிப்பார்க்காமல், நம்மிடம் கேட்கப்படும் அனைத்து அனுமதிகளையும் உடனுக்குடன் வழங்கி , அந்த செயலியை நிறுவி பயன்படுத்தினால் போதும் என்ற பழக்கம் தான் மிகவும் ஆபத்தான செயல்பாடு என்பதை நாம் யாவரும் உணர மறுக்கிறோம்.

இந்தியாவில் இதுவரை Momo தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ நிகழ்வுகளும் பதிவு செய்யப்படவில்லை. எனினும் சமூக வலைதளங்களில் Momo பெயரைப்பயன்படுத்தி பலர் (குறிப்பாக Meme creators) Momo விடமிருந்து செய்திகள் வந்ததாக வதந்திகள் பரப்புகின்றனர். Momo போன்ற ஆபத்தான விஷயங்களை இணையத்தில் தவிர்ப்பதற்கு சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டி இருக்கிறது. அடையாளம் தெரியாத, நமக்கு அறிமுகமில்லாதவர்களிடமிருந்து ஏதேனும் செய்திகள்/அழைப்புகள் வந்தால், அவை தேவையற்றவை என்று நாம் உணரும் பட்சத்தில் அவர்களுடன் பேச்சைத் தொடர்ந்துப் பார்க்கலாம் என்று எண்ணாமல் உடனடியாக அவர்களை block செய்வதே சிறந்தது. எக்காரணம் கொண்டும், அறிமுகமில்லாதவர்களிடமிருந்து இணைப்பாக வரும் செயலிகளை நம் ஸ்மார்ட்போனில் நிறுவாமல் (install) இருக்க வேண்டும். மேலும் நமக்கு வரும் ஒருமுறைக்கடவுச்சொற்களையும் நம்முடைய படங்கள், காணொளிகள் போன்ற நம்முடைய தரவுகளைப் பகிர்வதையும் அறவே தவிர்க்க வேண்டும். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சேவையும் நம்மிடமிருந்து என்னென்ன அனுமதிகளையும் அதிகாரங்களையும் பெற்றிருக்கின்றன என்பதையும் கவனித்து, தேவையற்ற அனுமதிகளை வழங்காமலும், தேவையற்ற செயலிகளை நீக்கியும் நம் பாதுகாப்பை அவ்வப்போது உறுதி செய்துக்கொள்ள வேண்டும். ஒரு சாதாரண விளையாட்டை வெளியிட்டு அதன் மூலமாகவே அவ்விளையாட்டை விளையாடும் அனைவரின் கேமரா மூலம் அனைவரையும் ரகசியமாக கண்காணிக்கவும் முடியும் என்பதை நாம் உணர வேண்டும். நாளை நம்முடைய ரகசியப் படங்களும் காணொளிகளும் நமக்கே அனுப்பப்பட்டு, அவற்றை பொதுவெளியில் வெளியிட்டுவிடுவோம் என்றுக் கூறி நம்மையே மிரட்டி சமூக விரோதிகள் தங்களுக்கு வேண்டிய சமூக விரோத செயல்களைச் செய்ய நம்மையே ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடும் என்ற அளவிற்கு நம்முடைய ஸ்மார்ட்போன்கள் ஆபத்தானது என்பதையும், அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் அனைவரும் உணர்வதும், பிறருக்கு கற்பித்தலும் அவசியம்.

Momo, Blue Whale போன்ற சேவைகள் குறிப்பாக சிறுவர்களைத் தான் குறிவைத்து வெளியிடப்படுகின்றன. நம் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டியதும் அவசியம். குழந்தையின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களைப் பெற்றோர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் குழந்தைகளின் மனநிலையை தெரிந்துக் கொள்வதும் அவசியம். குழந்தைகள் காரணமின்றி உடம்பில் கிழித்துக்கொள்வதும் குறியீடுகளை ஏற்படுத்துவதும் சாதாரணமாகக் கருதவேண்டியவை அல்ல. குழந்தைகள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதை விட பெற்றோருடன் அதிக நேரத்தை செலவு செய்வதை உறுதி செய்தாலே பெரும்பான்மை சிக்கல்கள் தீர்ந்துவிடும். அவற்றை மீறி வரும் சிக்கல்களையும் குழந்தைகள் பெற்றோருடன் பகிர்ந்து முடிவெடுத்தல் – Momo, Blue Whale போன்ற ஆபத்துகளிலிருந்து எதிர்கால சமுதாயத்தைக்காக்க உதவும்.

ஒவ்வொரு சிக்கல்களும் அவை நேர்ந்த பிறகு இதுப்போல நாம் பல தீர்வுகளைக் கூற முடியும். எனினும் இணையத்தில் இவ்வாறான எண்ணற்ற சிக்கல்கள் இருக்கின்றன, பிற்காலத்தில் மேலும் எக்கச்சக்கமான புதிய சிக்கல்களும் வர இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் என்ன தீர்வு? இணையத்தின் அடிப்படையே இங்கு தவறாக இருப்பதை நாம் சென்ற பகுதியில் விவாதித்திருக்கிறோம். இந்நிலையில், இணையத்தினால் ஏற்படுகிற இவ்வாறான சிக்கல்கள் வராமல் தடுக்க இணைய பயன்பாட்டில் அடிப்படையே மாற வேண்டி இருக்கிறது. கட்டற்ற மென்பொருட்களின் அவசியத்தை மக்கள் உணர வேண்டி இருக்கிறது. பேசுவோம் வருகின்ற பகுதிகளில்…

 

இக்கட்டுரைக் குறித்த உங்கள் கருத்துக்களைக் கீழே பதிவிடவும். மேலும் இக்கட்டுரையை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து உதவிடவும். நன்றி.

முகப்புப்படம்: indianexpress.com

இக்கட்டுரைத்தொடரின் முந்தைய/அடுத்த பகுதிகளைப் படிக்க:

உன்னைப் பணயம் கொள்ளும் இணையம்!

For the English version of this ‘உன்னைப் பணயம் கொள்ளும் இணையம்’ article series, click here:

Internet: A Boon of Banes!

 

What do you feel about this?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s