உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 9

இன்று நாம் பயன்படுத்தும் இணையத்தில் பல்வேறு சிக்கல்கள் பின்னிப்பிணைந்துள்ளதை நாம் சென்ற பகுதிகளில் பார்த்து வந்தோம். இத்தகைய சிக்கல்களுக்கு முழுமையான தீர்வைக் கொண்டுவருவது கற்பனைக்கெட்டா அளவிற்குக் கடினம் என்ற அளவிற்கு இணையம் வளர்ந்து விட்டது. இணையத்தின் அடிப்படையையே மாற்ற வேண்டிய கட்டாயம் இருப்பினும், மக்களோடு மக்களாக ஒன்றிவிட்ட இணையத்தை எடுத்த எடுப்பிலேயே மாற்றிவிட முடியாது. படிப்படியாக பல்வேறு விழிப்புணர்வுகளையும் மாற்றங்களையும் மக்களிடத்தே கொண்டு சேர்க்க வேண்டியுள்ளது.

மக்கள் அதிமுக்கியமாகத் தெரிந்துக்கொள்ள வேண்டியவை இன்று நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் மென்பொருள்கள் மற்றும் இணைய சேவைகளுள் தனியுரிமையாக்கப்பட்ட மென்பொருட்களுக்கும் (proprietary softwares) கட்டற்ற மென்பொருட்களுக்கும் (free softwares) இடையேயான வேறுபாடுகள் தாம். Proprietary software என்பது ஒரு தனி மனிதனோ, குழுவோ, நிறுவனமோ ஒரு மென்பொருளை உருவாக்கி அதைத் தன்னுடைய பெயரில் தனியுரிமைப்பெற்று அதன் மூல நிரல்களைப் (source codes) பிறர் அணுகா வண்ணம் மூடி வைக்கப்படும் வகையிலான மென்பொருட்களாகும். உதாரணத்திற்கு நாம் பயன்படுத்தும் விண்டோஸ் இயங்குதளம் (operating system) ஓர் proprietary software ஆகும். இதன் மூல நிரலை நம்மால் பார்க்கவோ, திரைக்குப்பின்னே என்ன நடக்கிறது என்பதைக் கண்டறியவோ, நாம் விரும்பிய மாற்றத்தைச் செய்துக்கொள்ளவோ முடியாது. அவர்கள் எப்படி அளிக்கிறார்களோ அதை அப்படியே தான் பயன்படுத்தியாக வேண்டும். விண்டோஸ் இயங்குதளத்தில் மாறுதல் செய்ய சில மென்பொருட்கள் இருக்கிறது என்றாலும் அவை சட்டப்பூர்வமானதல்ல. அவற்றில் நாம் என்ன மாறுதல்கள் செய்தாலும் அவை சட்டப்படி குற்றமாகும்.

மேலும், மூல நிரலை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் எந்தவொரு மென்பொருளும் நமக்கேத் தெரியாமல் நம்முடைய தகவல்களைத் திருடவோ, தான் விரும்பியவற்றைப் பயன்படுத்துவோரின் அனுமதியோ கவனமோ இன்றி, திரைக்குப்பின்னே என்ன வேண்டுமானாலும் செய்து இயங்கவோ ஆற்றல் பெற்றது. உதாரணத்திற்கு WhatsApp செயலியை எடுத்துக்கொள்வோம். நம்முடைய ஸ்மார்ட்போனில் இருக்கும் நம்முடைய தரவுகளை அணுகுவதற்கான அனைத்து அனுமதிகளையும் பெற்று இயங்கும் WhatsApp, நம் கண்ணிலிருந்து மறைத்து, திரைக்குப் பின்னே, கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய தரவுகளை நம் அனுமதியின்றியும் நம் கவனத்திலிருந்து மறைத்தும் நம் ஸ்மார்ட்போனுடைய இணைய இணைப்பைப் பயன்படுத்தியே WhatsApp நிறுவனத்தின் செர்வர்களுக்கு நம்முடைய ஒவ்வொரு புகைப்படமாக, ஒவ்வொரு காணொளியாக என்று நம் தகவல்களைத் திருட முடியும். அதற்கான வழிமுறைகளை WhatsApp செயலியின் ப்ரோக்ராம்கள் தன்னிடத்தே கொண்டிருந்தாலும் நமக்கு அவை தெரிய வாய்ப்பில்லை. இன்றில்லையென்றாலும் எப்பொழுது வேண்டுமானாலும் அப்படியானதொரு ஆபத்தான செயல்களை அவர்கள் எந்நேரம் வேண்டுமானாலும் ஒரு சிறிய அப்டேட் மூலம் தாங்கள் விரும்பியவற்றைச் செய்யும் ஆற்றலையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். காரணம் அந்த செயலியின் மூல நிரலில் எவ்வாறான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை நம் கண்ணிலிருந்து மறைத்தே இயக்கும் வகையிலான proprietary softwareஆக இருப்பது தான்.

நாம் பயன்படுத்தும் பெரும்பாலான மென்பொருட்கள் Proprietary software தாம். அவை உண்மையில் என்ன செய்கின்றன என்பதை நம்மால் பார்க்க முடியாது. நம் தகவல்களைத் திருடினாலும் வெளியே தெரியாது. நமக்கே தெரியாமல் நம் கேமராவைப் பயன்படுத்தி நம் அந்தரங்கத்தை நொடிக்கு நொடி படம்பிடித்தாலும் கூட நமக்கு அவை தெரிய வாய்ப்பே இல்லை என்ற போது அவற்றை நாம் எப்படி நம்பிப் பயன்படுத்துகிறோம்? இதன் பின்னாலுள்ள அபாயத்தை நாம் ஏன் உணர மறுக்கிறோம்? தனிப்பட்ட ஒரு செயலிக்கே இவ்வளவு ஆற்றல் இருக்கிறதென்றால் நம்முடைய ஸ்மார்ட்போன்களிலும் கணிப்பொறிகளிலும் நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் இயங்குதளங்கலான Google Android, iOS, Microsoft Windows ஆகிய மென்பொருட்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களான பெருநிறுவனங்களுக்கும் நம் தரவுகளின் மீதும் நம் மீதும் எவ்வளவு அதிகாரம் இருக்க முடியும்? உள்ளே என்ன நடக்கிறது என்றே மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு சாதனத்தை நாம் வாங்கி நம் வீட்டிற்குள் வைப்போமா என்ன? அவை நம் வீட்டைக் கொளுத்துமா, நம் வீட்டைப் படம்பிடித்து யாருக்கோ அனுப்புமா என்று எந்தவித செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மையின்றி இருக்கும் ஓர் சாதனத்தை நாம் எப்படி நம்புவோம்?

Proprietary software’க்கான மாற்றுத்தீர்வாக இரண்டு வகையான மென்பொருள் வகைகள் இருக்கின்றன. அவை opensource softwares (வெளிப்படை மூலநிரல் மென்பொருட்கள்) மற்றும் free softwares (கட்டற்ற மென்பொருட்கள்) ஆகும். opensource software என்ற வகையிலான மென்பொருட்கள் அவற்றை உருவாக்கியவர்களால் அவற்றினுடைய மூல நிரல்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டிருக்கும். அதன் மூலம், அவ்வாறான மென்பொருட்களின் செயல்பாடுகளை நாம் தெளிவாக பகுத்தாராய முடியும். அவற்றில் ஏதேனும் பிழை இருந்தால் சுட்டிக்காட்ட முடியும். Proprietary softwareகளில் இவ்வாறு நாம் அவற்றின் செயல்பாடுகளை அறியமுடியாது. அண்மையில் விண்டோஸ் இயங்குதளத்தில் ஓர் பாதுகாப்புப் பிழையைக் கண்டறிந்து அதைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் விண்டோஸ் தளத்தில் இயங்கும் கணிப்பொறிகளை முடக்கி இவ்வளவு பிட்காயிங்கள் செலுத்தினால் தான் தங்கள் கணினிகள் சரியாகும் என்று மிரட்டினார்கள். இதற்குக்காரணம் அந்த இயங்குதளத்தின் மூல நிரல் மறைத்து வைத்தலே ஆகும். ஒரு வேலை அவை திறந்த வெளியில் இருந்திருந்தால் அவற்றை உலகிலுள்ள பல்வேறு கணினி ஆர்வலர்களும் பகுப்பாய்ந்து அவற்றிலிருக்கும் குறைபாடுகள், பிழைகள் ஆகியவற்றைக் கண்டறிந்திருப்பார்கள். தனியொரு சமூக விரோத கூட்டம் நம் மென்பொருளிலுள்ள பிழையைக்கண்டரிந்து ரகசியமா அந்த ஓட்டையைத் தவறாகப் பயன்படுத்துவதற்குப் பதில் பல்வேறு நிபுணர்கள் கண்டறியும்போது நிச்சயம் அது நமக்குத் தெரிந்து அந்த ஓட்டையை அடைப்பதற்கான வழிமுறையைப் பின்பற்ற முடியும். அதன் மூலம் அந்நிறுவனம் அத்தகைய குறைபாடுகளை நீக்கியிருக்க முடியும்.

எனினும் opensource softwareகளிலும் பல்வேறு அபத்தங்கள் இருக்கின்றன. Opensource softwareகளின் மூல நிரல் பொதுவெளியில் வெளியிடப்பட்டிருந்தாலும் அதை நாம் எடுத்து நம்முடைய தேவைக்கேற்ப மாறுதல் செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவை எத்தகைய உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தே opensource software மற்றும் free softwareக்கான வேற்றுமை நிலவுகிறது. Free software என்ற பெயரிலுள்ள ‘free’ என்பது ‘இலவசம்’ என்ற அர்த்தத்தைக் குறிக்காது. இலவசமாகக் கிடைக்கும் மென்பொருளுக்கு ‘freeware’ என்று பெயர். ‘Free software’இல் இடம் பெற்றுள்ள ‘free’ என்பது சுதந்திரத்தைக் (freedom) குறிக்கிறது.

பயன்பாட்டாளர்களுக்கு அனைத்து விதமான சுதந்திரத்தை வழங்கி கட்டற்று விளங்கும் மென்பொருளே free software எனப்படுகிறது. Free software வழங்கும் சில சுதந்திரங்களுள் சில:

  • அந்த மென்பொருளை எப்படி வேண்டுமானாலும், எந்த தேவைக்கு வேண்டுமானாலும் இயக்கிக்கொள்ளும் சுதந்திரம்,
  • அந்த மென்பொருள் எப்படி இயங்குகிறது என்பதைப் பகுப்பாய்வு செய்யவும், தேவைக்கேற்ப அதன் செயல்பாட்டில் மாறுதல் செய்து பயன்படுத்துவதற்குமான சுதந்திரம்,
  • விருப்பத்திற்கேற்ப அந்த மென்பொருளையோ, அல்லது நாம் மாற்றியமைத்த மென்பொருளையோ நம் நண்பர்களுக்கும், பொதுவெளியிலும் வெளியிடுவதற்குமான சுதந்திரம்,
  • நாம் மாற்றியமைத்த மென்பொருளை எத்தனை முறை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பகிர்ந்துக் கொள்ளும் சுதந்திரம்.
  • (அந்த மென்பொருளின் மூல நிரலை அடைவது இவற்றிற்கான இன்றியமையாதன).

எல்லா free softwareகளும் open source softwareகள் தாம், ஆனால் எல்லா open source softwareகளும் free softwareகளல்ல. Free software அல்லது கட்டற்ற மென்பொருளின் அடிப்படையே சமூக நலன் தாம். நாம் ஒரு பொருளை வாங்கினால் அதை நம் தேவைக்கேற்ப நாம் மாறுதல் செய்வதும் நாம் விரும்பியவாறு அதை நாம் விரும்பியவருக்கு வழங்குவதும் நம் உரிமை. அதுவே நான் ஒரு மென்பொருளில் செய்தால் அது பெரும்பாலும் சட்ட விரோதமாக இருக்கிறது. இதற்குக்காரணம் ஒன்றே – லாப நோக்குடன் இயங்கும் பெருநிறுவனங்களின் பணத்தாசையில் தனியுரிமைக் கொள்கையைப் பின்பற்றுவது தான்.

இன்று நாம் அனுபவிக்கும் அறிவாற்றல் யாவும் லட்சக்கணக்கான வருடங்களாக மனித இனம் சந்தித்த பல்வேறு அனுபவங்களின் தொகுப்பே ஆகும். கல்லை உரசினால் நெருப்பு உண்டாகும் என்ற அனுபவம் பகிரப்பட்டதால் தான் அதை வைத்து பிற கண்டுபிடிப்புகள் நடந்தது. நான் தான் இதைக்கண்டுபிடித்தேன் என்றுக் கூறி ஒவ்வொரு கண்டுபிடிப்பும் அவற்றின் கண்டுபிடிப்பாளரால் அக்கண்டுபிடிப்பைப் பிற யாவரும் பயன்படுத்துதலைத் தடை செய்து வைத்திருந்தால் மனித சமுதாயம் இன்றும் மின்சாரத்தைக் கூட கண்டுபிடித்திருக்க முடியாது. அறிவு என்பது ஒரு ஓட்டம் தாம். அவற்றைச் செயற்கைத் தடை ஏற்படுத்தி முடக்கி வைப்பது சற்றும் சரியாகாது. மேலும், அவ்வாறு முடக்கி வைப்பது படைப்பாற்றலை முடக்குவதே அன்றி வேறில்லை. புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் யாவும் இத்தகைய செயற்கைத்தடையினால் நிறுத்திவைக்கப்படுவது சரியன்று.

தனியொரு மனிதனாகவோ தனியொரு நிறுவனமாகவோ ஓர் மென்பொருளை உருவாக்கி அதன் கட்டுப்பாட்டை தன்னிடத்தே முடக்கி வைப்பதன் மூலம் வளரும் தொழில்நுட்பத்தை விட, தொழில்நுட்பத்தைத் தங்குதடையன்றி கட்டற்று வழங்குதலும் எவர் வேண்டுமானாலும் மாறுதல் செய்து வெளியிடலாம் என்பதும் தொழில்நுட்ப வளர்ச்சியை மென்மேலும் பன்மடங்கு வளர்க்கும். இங்கே எவர் வேண்டுமானாலும் என்ன மாறுதல் வேண்டுமானாலும் செய்து வெளியிடலாம் என்பது ஒவ்வொருவரும் ஒரு மாதிரியான தனித்தனி மென்பொருளை வெளியிட்டு லாபம் பார்க்கும் பாதையாகத் தோன்றலாம். உண்மையில் அது சமூகத்தின் பல்வேறு மக்களும் சேர்ந்து ஆளுக்கொரு பகுதியாகத் தங்களின் பங்களிப்பின் மூலம் ஓர் மாபெரும் உருவாக்கத்தை நிகழ்த்துவதற்கான பாதையே ஆகும். மேலும் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பம் ஓர் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலே இயங்குவதையும் இதன் மூலம் தடுக்க முடியும்.

பேசுவதற்கு நன்றாய் இருக்கிறது, எனினும் இத்தகைய ஒருங்கிணைந்த உருவாக்கல் சாத்தியமா என்ற கேள்விகள் எழலாம். ஆனால் எண்ணற்ற கட்டற்ற மென்பொருட்கள் ஏற்கெனவே நம்மைச்சுற்றி நிறைய இருக்கின்றன. நாமும் அவற்றைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவை கட்டற்ற மென்பொருள்கள் என்பதே தெரியாமல் நாம் பயன்படுத்துகிறோம். கட்டற்ற மென்பொருட்களுள் மாபெரும் உருவாக்கம் அறிவுக்களஞ்சியமான விக்கிப்பீடியா! விக்கிப்பீடியா முழுக்க முழுக்க லட்சக்கணக்கான மக்களால் தினந்தோறும் மேம்படுத்தப்படும் ஓர் மாபெரும் பொக்கிஷமாகும். எந்தவொரு தனிநபரையோ நிறுவனத்தையோ சாராமல் அறிவாற்றல் எங்கும் முடங்கிவிடக்கூடாது என்பதற்காகவே உருவாக்கப்பட்டது தான் விக்கிப்பீடியா. விக்கிப்பீடியாவிற்கு முன் அப்படியானதொரு அறிவுக்களஞ்சியமாக இருந்தது Encyclopedia Britannica. அதுவும் மிகவும் விலை அதிகம். விலை அதிகம் என்பது மட்டுமல்ல, எல்லோராலும் மாற்றவோ பங்களிக்கவோ முடியாது. தனியொரு நிறுவனத்தை சார்ந்து அறிவாற்றல் பொதிந்து முடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையாகவே இருந்தது. ஆனால் அனைவருக்கும் அனைத்தும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட விக்கிப்பீடியா முழுக்க முழுக்க கட்டற்ற மென்பொருள் கொள்கையைச் சார்ந்து உருவாக்கப்பட்டது.

மற்றுமொரு கட்டற்ற மென்பொருளுக்கான சான்று மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் உலாவி. கூகுள் குரோம் உலாவியும் இணையத்தை உலாவத் தான் பயன்படுகிறது, மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் உலாவியும் இணையத்தை உலாவத் தான் பயன்படுகிறது. இவற்றில் என்ன இருக்கிறது, எது பயன்படுத்த வசதியாக இருக்கிறதோ அதைத் தான் பயன்படுத்த முடியும் எனலாம். எனினும் இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது. கூகுள் குரோம் உலாவி ஓர் proprietary software. அதன் திரைக்குப் பின்னே என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது. நம் தகவல்களைத் திருடினாலும் நமக்குத் தெரியாது. நாம் இணையத்தில் உலாவும் தளங்கள், ஒவ்வொரு தளத்திலும் நாம் பயன்படுத்தும் கடவுச்சொற்கள், நம் வங்கி விவரங்கள், கிரெடிட்/டெபிட் அட்டை விவரங்கள் என நாம் இணையத்தில் அளிக்கும் அனைத்து விவரங்களையும் நமக்கேத் தெரியாமல் சேகரிக்கவும் கூட முடியும். ஆனால் மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் ஓர் free and opensource software. எண்ணற்ற தனி நபர்களின் பங்களிப்பின் கூட்டு முயற்சியினால் இணையத்தைக் காக்கவேண்டும் என்ற நோக்கிலே உருவாக்கப்பட்டதொரு உலாவி.

இதைப் போலவே ஒவ்வொரு தேவைக்கும் நமக்கு எண்ணற்ற மாற்றுத் தேர்வுகள் இருக்கின்றன.
Google Chrome’க்கு பதில் Mozilla Firefox;
Facebook, Twitter’க்கு பதில் Mastadon;
Windows’க்கு பதில் Linux distro’க்கள்;
Photoshop’க்கு பதில் GIMP, Inkscape;
Windows Media Player, MX Player’க்கு பதில் VLC Media Player;
Google Maps’க்கு பதில் Open Street Map;
Microsoft Office’க்கு பதில் Libre Office;
AutoCAD’க்கு பதில் FreeCAD, LibreCAD;
என இப்பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும். கட்டற்ற சுதந்திரத்தையும் வெளிப்படைத்தன்மையையும் வழங்குகின்ற வகையில் ஆயிரக்கணக்கான மென்பொருட்கள் இருக்கின்றன. அதன் பட்டியலைப் பார்க்க: List of free and open source softwares

எனினும் நாம் மாறுதல்களை பெரிதும் விரும்புவதில்லை. Terms and conditions என்று எதைக் கேட்டாலும் ஒப்புக்கொண்டுவிட்டே பயன்படுத்த பழகிவிட்டோம். அதன் பின்னாலுள்ள ஆபத்துக்களை அறியோம்!

இவ்வாறான கட்டற்ற மென்பொருட்களிலுள்ள முக்கியமான நன்மை – நமக்குப் பிடிக்கவில்லை என்றால் அவற்றில் மாறுதல் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம், புதிதாக ஓர் வசதி வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு கணிப்பொறி சார்ந்த ஆழ்ந்த அறிவு வேண்டுமென்பதில்லை. நம் பரிந்துரையை வழங்கலாம். அதை எங்கோ ஒரு மூலையிலுள்ள கணிப்பொறி ஆர்வம் கொண்டவர்கள் உருவாக்கி அதை அந்த மைய மென்பொருளுடன் இணைக்க பரிந்துரைத்து குறிப்பிட்ட அளவு மக்கள் ஏற்றுக்கொண்டால் மைய மென்பொருளின் மூலத்திலேயே அந்த மாற்றம் சேர்த்து வெளியிடப்படும். ஆனால் அதை விட சிறந்த வழி, கட்டற்ற மென்பொருட்களை நாம் ஆதரித்துப் பயன்படுத்தத் தொடங்கினாலே போதுமானது. நம் நண்பர்கள் அதிகம் பேர் பயன்படுத்தும் ஓர் சேவை தீயது என்று தெரிந்தால், தீயதென்றாலும் பரவாயில்லை, என் நண்பர்கள் அதைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்று நாமும் அதைப் பயன்படுத்தத் தொடங்குவோமா, இல்லை யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் நன்மையான சேவையையே பயன்படுத்துவேன் என்றுக் கூறி அதைப் பயன்படுத்தத் தொடங்கி நம் நண்பர்களிடமும் எடுத்துக்கூறுவோமா?

Proprietary softwareகள் யாவும் லாப நோக்குடன் பெருநிறுவனங்களால் பெரும் பொருட்செலவுடன் உருவாக்கப்படுகிறது. ஆனால் கட்டற்ற மென்பொருட்கள் உலகெங்குமுள்ள ஆயிரக்கணக்கான மென்பொருள் ஆர்வலர்களால் லாப நோக்கமின்றி சமூக மேம்பாட்டை வலியுறுத்தும் விதமாக உருவாக்கப்படுகின்றன. நாம் அவற்றிற்கு ஆதரவை வழங்கினாலே போதும், மிகச்சிறந்த கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் வளர்ச்சி பெரும்.

தமிழ்நாட்டில் முதன்மையாக கட்டற்ற மென்பொருட்களை உருவாக்குதல், அவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நடுநிலைமைக் கொண்ட இணையத்திற்காக (net neutrality) போராடுதல், தனியுரிமைக்காக (privacy rights) குரல் கொடுத்தல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் முதன்மையான இயக்கம் ‘தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை’ (Free Software Foundation Tamil Nadu – FSFTN). அந்த அமைப்பு பல்வேறு கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் என ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை சார்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை எழும்பூரில் மென்பொருள் சுதந்திர தின கொண்டாட்டம் என ஒரு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருக்கிறது. கட்டற்ற மென்பொருட்கள், தனியுரிமைப் பாதுகாப்புக்கான மென்பொருள் கருவிகள், தமிழ் கணிமை, செயற்கை நுண்ணறிவு, ஆண்ட்ராய்டுக்கான மாற்று, கட்டற்ற மென்பொருள் கொள்கையில் உருவாக்கப்பட்ட விளையாட்டுகள் என பல்வேறு அரங்கங்களும் இந்த கருத்தரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ‘உன்னைப் பணயம் கொள்ளும் இணையம்’ தொடரில் நாம் பேசிவரும் தகவல்களை மேலும் பலரோடு கலந்துரையாடவும், இன்னும் பல அறிய தகவல்களைப் பெறவும் இந்த கருத்தரங்கில் கலந்துக் கொண்டுப் பயனடையவும். இந்த கருத்தரங்கு குறித்த மேலும் விவரங்களுக்கு: facebook.com/fsftn என்ற பக்கத்தைத் தொடரவும். நன்றி.

photo6120728533589403714

இக்கட்டுரைக் குறித்த உங்கள் கருத்துக்களைக் கீழே பதிவிடவும். மேலும் இக்கட்டுரையை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து உதவிடவும். நன்றி.

முகப்புப்படம்: pixabay.com

இக்கட்டுரைத்தொடரின் முந்தைய/அடுத்த பகுதிகளைப் படிக்க:

உன்னைப் பணயம் கொள்ளும் இணையம்!

For the English version of this ‘உன்னைப் பணயம் கொள்ளும் இணையம்’ article series, click here:

Internet: A Boon of Banes!

 

What do you feel about this?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s