ஒரு விரல் புரட்சி!

இந்திய தேர்தல் முறையில் நாம் பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுக்காமல் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு உறுப்பினரைத் தான் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் அனுப்புகிறோம் என்றாலும் நாம் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள் நம் அரசியலமைப்பின்படி தன்னிச்சையாக எந்த மாற்றத்தையும் கொண்டுவந்து விட முடியாது.

சுயேட்சையாக நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அனைத்து தொகுதிகளிலும் சுயேட்சைகளைத் தேர்ந்தெடுப்பதும், தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர்கள் முறையாகக் கூடி அரசு எந்திரத்தை நிர்வகிப்பதும் நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று.

இங்கே தான் அரசியல் கட்சிகள் அவசியமாகின்றன. ஒவ்வொரு தொகுதிக்கும் நாம் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தாலும் நாடாளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ ஏதேனும் வாக்கெடுப்பு நடக்கும்போது சுயேட்சையாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைத் தவிர்த்து எந்தவொரு உறுப்பினரும் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுத்துவிட முடியாது.

நம் நாட்டில் அரசாங்கம் மட்டுமே சட்டத்திற்குட்பட்டு நிர்வகிக்கப்படவில்லை. அரசியல் கட்சிகளின் நிர்வாகத்திற்குமே பல்வேறு சட்ட வரைமுறைகள் வகுக்கப்பட்டு அதன்படி தான் அங்கீகரிக்கப்பட்ட அத்துணை அரசியல் கட்சிகளும் நிர்வகிக்கப்படுகின்றன.

அதன்படி ஒரு கட்சி நம் நாட்டில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில், கட்சியின் கொள்கை வரையறை, இந்திய அரசியலமைப்பு (Constitution of India) விதிகளைப் போன்று அக்கட்சியின் அரசியலமைப்பு விதிகள் (Constitution of the party) தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விதிகளின் படியே அக்கட்சியின் உறுப்பினர்கள், தலைவர் மற்றும் இதர பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பொறுப்பாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஒரு கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு அடுத்ததாக முக்கிய பொறுப்பாக பார்க்கப்படுவது கட்சியின் கொரடா (whip). கொரடா என்பவரே ஒரு கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை ஒருங்கிணைத்து எந்தவொரு உறுப்பினரும் கட்சியின் கொள்கை முடிவுகளை மீறி நடந்திராமல் அனைத்து உறுப்பினர்களையும் ஓரணியில் வழிநடத்தும் பொறுப்பை பெற்றிருப்பார்.

கட்சித் தலைமைக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான பாலமாக கொரடா செயல்படுவார். நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் எந்தவொரு விவாதமோ வாக்கெடுப்போ நடைபெறும்போது எந்தவொரு உறுப்பினரும் கட்சியின் கொள்கை முடிவுகளுக்கெதிராக வாக்களித்துவிடாமல் தடுக்கும் பொறுப்பைப் பெற்றிருக்கும் கொரடா என்பவர் தன் கட்சியின் கொள்கைக்கெதிராக எவர் நடந்துக் கொண்டாலும் அவரின் உறுப்பினர் பதவியை நீக்கும்படி சபாநாயகருக்கு பரிந்துரை செய்வார்.

அதன்படி ஒரு கட்சித்தலைமையின் முடிவுகளை மீறி நடக்கும் சட்டமன்ற உறுப்பினர்/நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை கட்சியின் கொரடா மூலமாக கட்சித்தலைமை நீக்க முடியும். கடைசியாக தமிழ்நாட்டில் 18 எம்எல்ஏக்களின் பதவிகள் இதே நடைமுறையின் படி தான் நீக்கம் செய்யப்பட்டது.

எனவே என்ன தான் நாம் நம் தொகுதிக்கென உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுத்து அனுப்பினாலும் அவர்கள் எப்படி செயல்படுவார்கள், எந்தெந்த சட்டங்கள், மசோதாக்களுக்கு ஆதரவளித்தும் எதிர்த்தும் வாதிடுவார்கள், வாக்களிப்பார்கள் என்பதைத் தீர்மானிப்பது கட்சிகள் தாம்.

எனவே உள்ளாட்சித் தேர்தலைத் தவிர்த்து, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வேட்பாளர் யார், அவர் நல்லவரா/கெட்டவரா, என்ன படித்திருக்கிறார், என்ன தொழில் செய்கிறார், என்ன சாதி/மதம் என எந்த அடிப்படையில் நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாலும் பெரிய மாற்றமிருக்கப்போவதில்லை என்பதே நிதர்சனம்.

எனவே நாம் பார்க்க வேண்டியதெல்லாம் நாம் வாக்களிக்கப்போகும் கட்சியின் கொள்கை என்ன, வரலாறு என்ன, நம்பகத்தன்மை என்ன, எந்தக் கட்சி ஓரளவேனும் மக்களுக்கு நலத்திட்டங்களைக் கொண்டு வரும் என்பதைத்தான்.

மேலும் தற்போதைய சூழலில் நாம் வாக்களிக்கப்போகும் கட்சியின் வெற்றி வாய்ப்பையும் நாம் பார்த்தே வாக்களிக்க வேண்டியுள்ளதை பெரும்பாலானோர் உணர்ந்திருக்கவில்லை.

நல்லவராகத் தெரிகிறார், ஆனால் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று நன்றாகத் தெரியும் சூழலில் வெற்றி பெற வாய்ப்பிருக்கும் முதல் இரண்டு கட்சிகளுக்குள் எவர் சிறந்தவரென முடிவெடுத்து அவருக்கு வாக்களிப்பதே சிறந்தது. இதற்குக் காரணம் நம் அரசியலைப்பிலுள்ள பெரும்பிழை. இங்கே ஒரு வேட்பாளர் வெறும் 20% வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற முடியும். 20% வாக்குகளை மட்டுமே பெற்று மற்ற அனைத்து வேட்பாளர்களும் அதைவிட சற்று குறைவான வாக்குகளை பெறும் சூழலில் 80% வாக்குகள் அவர் வேண்டாம் என்று நிராகரித்து பதிந்திருந்தாலும் 80% வாக்காளர்களின் குரல் நசுக்கப்பட்டு வெறும் 20% வாக்குகளை பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படும் சூழல் தான் இங்கே.

இத்தகைய அரசியலமைப்பு சற்றே பிழையானது தான். அது ஏன், அதற்கு தீர்வு என்ன என்பதைப்பற்றி நான் தனியாக எழுதிய கட்டுரை இங்கே…

இந்திய அரசியலமைப்பில் உள்ள பெரும்பிழை!

இத்தகைய சூழலில் முதலிடத்தைப் பிடிக்க சற்று வாய்ப்பு குறைவாக இருக்கும் ஒரு கட்சி (இரண்டாவதாக வர வாய்ப்பிருக்கும் கட்சி) தன்னுடைய சொந்த பணத்தில் ஏற்பாடு செய்து சில சுயேட்சை வேட்பாளர்களையோ அல்லது மாற்றத்தை ஏற்படுத்துகிறோம், ஊழலை ஒழிப்போம், தமிழர் உணர்வு, என புதிய தலைவர்களை மறைமுகமாக ஏற்பாடு செய்து அவர்கள் எந்தக் கூட்டணியிலும் சேராமல் தாங்கள் வெற்றி பெற வாய்ப்பில்லையென்றாலும் தங்களை மாற்றாக முன்னிறுத்தி தேர்தலில் நிற்க வைக்கக்கூடும்.

அவ்வாறு புதிதாக முளைக்கும் கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு மிகக்குறைவு என்றாலும், ஏற்கெனவே உள்ள கட்சிகளெல்லாம் வீண், புதிதாக எவராவது வரட்டுமே என்ற மக்களின் இயற்கையான எதிர்ப்பார்ப்புகளை அறுவடை செய்து ஒரு மாற்றாக தங்களை முன்னிறுத்தி கணிசமான வாக்குகள் பெற்று தோல்வியுறுவார்கள்.

அவர்கள் தோல்வியடைவார்கள் என்பது அவர்களுக்கு வாக்களிக்கும் மக்களுக்கும் தெரிந்தே இருக்கும். மேலும் அந்த சிறிய கட்சிகளுமே அவர்கள் வெற்றிபெற முடியாது என்று தெரிந்தே தான் போட்டியிடுவார்கள். இவ்வாறு செலவு செய்து, தேர்தலில் தோல்வியடைவோம் என்று தெரிந்தும் எந்தக் கூட்டணியிலும் சேராமல், அனைத்துக் கட்சிகளுக்குமே தங்களை எதிரிகளாக முன்னிறுத்தி போட்டியிட்டு தோற்கும் கட்சிகளின் பயன் என்ன?!

இங்கே மூன்றாவது அணி என்பதே முதல் இரண்டு அணிகளின் அரசியல் சமன்பாடுகளை மாற்றியமைக்கவேயன்றி வெற்றி பெற அல்ல எனும்போது நான்காம், ஐந்தாம், ஆறாம் அணிகள் தோல்வியை உறுதி செய்துவிட்டு அரசியல் விளையாட்டை ஆடும் ஆட்டத்தின் பின்னாலுள்ள அரசியல் என்ன?!

இங்கே தான் இந்திய அரசியலமைப்பிலுள்ள பெரும்பிழை பணபலம் பெற்ற பெரிய கட்சிகளால் துல்லியமாக காய் நகர்த்தப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது.

வெற்றி பெற வாய்ப்பிருக்கும் முதல் இரண்டு கட்சிகளுக்குள்ளான போட்டியில் முதலிடத்தை பிடிக்கப்போகும் கட்சியை விட வாக்குகள் அதிகமாக பெற முடியாத நிலையில் இருக்கும் இரண்டாவது கட்சி, முதலிடத்தைப் பிடிக்கப்போகும் கட்சியின் வாக்குகளைப்பிரித்து தங்களை விட‌க் குறைவாகப் பெற வைத்துவிட்டால் 20% வாக்குகளை பெற்றுக்கூட வெற்றி பெற முடியும்!

கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கே முளைத்த அனைத்து சிறு கட்சிகளையும் நான் இவ்வாறான காரணிகளாகவே நான் கருதுகிறேன். காரணம், நடைபெறப் போவது அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்நாடு எவ்வாறு மாற்றம் காணப்போகிறது என்பதைத் தீர்மானிக்கப் போகும் நாடாளுமன்றத் தேர்தல். இங்கே தோல்வியுறப் போகும் சிறிய கட்சிகளுக்கு வாக்களிப்பதும், எந்தக் கட்சி இந்நாட்டை நாசம் செய்துவிடும் என்றெண்ணி அக்கட்சிக்கு நீங்கள் வாக்களிக்கக்கூடாது என்று முடிவெடுத்தீர்களோ அக்கட்சிக்கே நேரடியாக வாக்களிப்பதும் ஒன்றே!

சிறிய கட்சிகள் தாண்டி நோட்டாவைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களும் இத்தகைய சூழலியல் கோட்பாடுகளை உணர்ந்து நல்லவர் கெட்டவர் என்பதற்கப்பாற்பட்டு, தெரிந்தவர் தெரியாதவர் என்பதைத் தாண்டி அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்த தேசத்தின் பாதை எவர் வழி நடத்தினால் சரியாக இருக்கும் என்பதை மட்டும் சிந்தித்து உங்கள் வாக்கை செலுத்துங்கள். காரணம் நடைபெறப் போவது உள்ளாட்சித் தேர்தலோ தமிழக சட்டமன்றத் தேர்தலோ அல்ல! நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டில் தர்க்கங்களை உணர்ந்து அதற்கேற்றாற்போல் வாக்களிப்பதே பயன் தர வல்லது!

ஒரு ஹாஸ்டல்ல 100 பேர் இருந்தாங்க. அந்த ஹாஸ்டல் கேன்டீனில் தினமும் உப்புமாவா போட்டுகிட்டிருந்தாங்க. மாணவர்களில் பலருக்கும் செம கடுப்பு. ஒருநாள் அவங்கல்லாம் சேர்ந்து வார்டன்கிட்டே போய் மெனு மாத்தணும்னு சொன்னாங்க.

அதே ஹாஸ்டல்ல 20 பேர் உப்புமா பிரியர்கள். மெனுவை மாத்தறது அவங்களுக்குப் புடிக்கலே.

வார்டன் பாத்தாரு. மல்டிபிள் சாய்ஸ் மாதிரி ஒரு லிஸ்ட் குடுத்து, அதில் விருப்பமானதை தேர்வு செய்யச் சொன்னார். அதில் உப்புமாவும் இருந்துச்சு.

உப்புமா பிரியர்கள் 20 பேரும் உப்புமாவை செலக்ட் செஞ்சாங்க.

உப்புமா புடிக்காத பசங்க, தோசை, சப்பாத்தி, பிரெட்-பட்டர், பிரெட் ஆம்லெட், பொங்கல், இட்லி-வடைன்னு ஆளாளுக்கு அவங்களுக்குப் பிடிச்சதை டிக் பண்ணிக் குடுத்தாங்க. ஒவ்வொரு ஐட்டத்துக்கும் 10-15 ஆதரவுதான் கிடைச்சுது.

ஸோ… மறுபடி உப்புமாவே தலைவிதியா ஆயிடுச்சு.

உப்புமா ஆப்டர்ஆல் உணவுதான். முழுங்கிடலாம். ஆனா சில கட்சிகள் அப்படியில்லை. ஒரு முறை நீங்கள் தவறு செய்தால் ஐந்து ஆண்டுகள் இந்நாடு அதற்கான பலனை அனுபவித்தாக வேண்டும்!

முகப்புப் படம்: newindianexpress.com

What do you feel about this?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s