காஷ்மீர் – இன்று, நேற்று, நாளை!

கடந்த ஒரு வாரமாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வரும் விஷயம் காஷ்மீருக்கு இந்திய அரசு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்ட விவகாரம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷயத்தை வரலாறே தெரியாமல் தான் இங்குள்ள பலரும் அரசின் முடிவை ஆதரித்தும் எதிர்த்தும் வருகிறார்கள். இவ்விவகாரத்தில் அரசின் முடிவு சரியா தவறா என்பதைத் தாண்டி இந்த முடிவை இந்திய அரசு அமுல்படுத்திய விதத்திலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், ஒரு வழியாக 70 ஆண்டுகள் கழித்து காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரு முடிவுகட்டப்பட்டதாக பலரும் காரணமே தெரியாமல் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு செய்தது தான் சரியென நம்பி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறேன். உண்மையில் காஷ்மீரில் என்ன தான் பிரச்சனை என்று அங்கலாய்த்து வருபவர் பலர்.

 இந்தியாவிற்கு ஆங்கிலேயர்கள் படையெடுத்து வருவதற்கு முன் இப்போதுள்ளதைப் போல் இந்தியா என்றொரு தேசம் இருக்கவில்லை. இப்போதுள்ள பாகிஸ்தான், வங்கதேசம், இந்தியா ஆகிய நிலப்பரப்பில் பெரும்பான்மையான பகுதிகளை ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் பாண்டிச்சேரி போன்ற சில பகுதிகள் ஃபிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிலும், சில பகுதிகள் போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டிலும், மைசூர் போன்ற பல்வேறு சிற்றரசுகளும் இருந்து வந்தன. 1947இல் ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசங்களை சுதந்திரமாக விட்டுவிட்டு வெளியேற முடிவெடுத்தபோது தற்போதுள்ள பாகிஸ்தான் நிலப்பரப்பைச் சார்ந்தவர்கள் தங்களுக்கென தனி நாடு வேண்டும் என்று கோரிக்கை வைத்து பாகிஸ்தான் என்ற நாடு உருவானது. பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடாக தன்னை முடிசூட்டிக் கொண்டபோது இங்குள்ள இஸ்லாமியர்களும் பாகிஸ்தானுக்கே சென்றுவிட வேண்டும் என்ற கருத்து எழுந்தது. கனிசமான இஸ்லாமியர்கள் அவ்வாறு பாகிஸ்தானை தங்கள் தாய்நாடாக தேர்நதெடுத்து இங்கிருந்து அங்கே குடிபெயர்ந்தும் சென்றனர். ஆனால் பெரும்பான்மை இந்திய முஸ்லிம்கள் இந்தியா தான் தங்கள் தாய்நாடு என்று கூறி இங்கேயே இருந்துவிட்டனர்.

 ஆங்கிலேயர்கள் வெளியேறிய போதும் இந்தியா, பாகிஸ்தான் தவிர்த்து எண்ணற்ற சிற்றரசுகளும் சில ஃபிரெஞ்சு காலனிகளும், போர்ச்சுகீசிய காலனிகளும் இருந்த நிலையில் சிறிய நாடுகளை இந்தியாவுடன் இணைப்பதில் நேரு, படேல் போன்றோர் முணைந்து பல்வேறு சிற்றரசுகளை இந்தியாவுடன் இணைத்தனர். அவ்வாறு இணைப்பதில் சில சிற்றரசுகளை ஆண்ட மன்னர்கள் சில நிபந்தனைகளை விதித்து அவற்றுக்கு இந்தியா ஒப்புக்கொண்டால் தான் இந்தியாவுடன் இணைந்துக் கொள்வோம் என்று இந்தியாவின் உத்தரவாதத்துடன் தங்கள் நிலப்பரப்பை இந்தியாவுடன் இணைத்துக் கொண்டனர். இந்திய எல்லையை விரிவுபடுத்த இந்திய அரசு முனைந்ததைப் போல் பாகிஸ்தான் அரசும் தங்கள் நாட்டின் எல்லையை விரிவுபடுத்த முனைந்தனர்.

இவ்வாறு பல பிரதேசங்கள் தங்களை இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணைத்துக் கொண்ட நிலையில் இந்தியா, பாகிஸ்தான் என எந்த நாட்டுடனும் இணைய விரும்பவில்லை, நாங்கள் சுதந்திர நாடாக இருந்துக் கொள்கிறோம் என்று காஷ்மீர் நாட்டை ஆண்ட ஹரிசிங் என்ற அரசர் அறிவித்தார். காஷ்மீர் முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட நாடு எனினும் ஹரிசிங் என்ற இந்து அரசர் தலைமையில் அம்மக்களும் சுதந்திரத்தையே விரும்பினர்.

இதனிடையே இயற்கை வளம் மிக்க காஷ்மீர் நிலப்பரப்பை தங்கள் நாட்டுடன் எப்படியாவது இணைத்துவிட இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் காஷ்மீருடன் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். எனினும் காஷ்மீரை இந்தியாவுடன் சேர்ப்பதில் வன்முறையை கையாள மாட்டோம் என்பதில் நேரு உறுதியாக இருந்தார். அச்சமயத்தில் காஷ்மீர் நாட்டிற்குள் ஊடுருவி கொஞ்சம் கொஞ்சமாக காஷ்மீரை ஆக்கிரமிக்கத் துவங்கியது பாகிஸ்தான். தனி நாடெனினும் தங்களுக்கென ராணுவம் ஏதுமின்றி இருந்த காஷ்மீர் அரசு பாகிஸ்தானைத் தடுத்து நிறுத்த இந்தியாவின் உதவியை நாடியது.

அப்போது இந்தியா உங்களுக்கு நாங்கள் உதவுகிறோம், ஆனால் நீங்கள் இந்தியாவுடன் இணைந்துக் கொள்ளுங்கள் என நிர்பந்தித்ததும் இந்தியாவுடன் சில நிபந்தனைகளுடன் காஷ்மீர் இணைந்துக்கொள்ள சம்மதித்தது. அந்த நிபந்தனைகளே தங்கள் நாட்டின் மொழி, பண்பாடு, கலாச்சாரம், நிலம், அவர்கள் அனுபவித்து வரும் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பன. முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட ஒரு நாடு, பாகிஸ்தானுடன் இணையாமல் இந்தியாவுடன் இணைந்துக்கொள்ள சம்மதித்ததும் காஷ்மீரின் கோரிக்கைகளை ஏற்று இந்தியா காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி காஷ்மீரை இந்தியாவின் ஒரு மாநிலமாக இந்தியா ஏற்றுக்கொண்டது. அப்போது காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தின் மூலம் பாதுகாப்பு, நிதி, உள்துறை, தேர்தல் ஆணையம் முதலிய முக்கியத் துறைகள் தவிர்த்து இன்னபிற துறைகளில் இந்தியா கொண்டுவரும் சட்டதிட்டங்கள் யாவும் காஷ்மீர் சட்டமன்றம் அங்கீகரித்தாலொழிய காஷ்மீருக்கு பொருந்தாது. இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் காஷ்மீர் சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டால் காஷ்மீரில் அந்த சட்டங்கள் அமலுக்கு வராது. மேலும் அண்டை மாநில மக்கள் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது.

 காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதற்கு முன்பே பாகிஸ்தான் காஷ்மீரின் சில பகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிக்குள்ளாகி பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. இதைத் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pakistan occupied Kashmir – PoK) என நாம் கூறுகிறோம். ஆனால் அப்பகுதிகள் தங்களுக்கு சொந்தமானவை என பாகிஸ்தான் கூறி வருகிறது. இந்த நிலத்தகராறு தான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் காலம் காலமாக நிலவிவரும் பிரச்சனை.

 காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியதும், காஷ்மீரின் சில பகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்குள்ளாகி பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருப்பதுமே தான் நேருவின் வரலாற்றுப் பிழையாக பிம்பப்படுத்தி அதை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். உண்மையில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக ஆனதற்கு முழுக்காரணம் நேரு தான் என்பதை இன்றைய அரசியல்வாதிகள் மூடிமறைத்து வருகின்றனர்.

 அன்றைய சூழலில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது போலவே பல்வேறு சூழல்களில் இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு வெவ்வேறு காரணங்களுக்காக சில சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அஸ்ஸாம், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், சிக்கிம், திரிபுரா, உத்தராகந்த் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து தற்போது அமுலில் உள்ளது. இவற்றுள் சில மாநிலங்களில் காஷ்மீரில் இருந்தது போலவே வெளிமாநில பக்கம் அம்மாநிலங்களில் நிலம் வாங்க தடை உள்ளது. மேலும் மத்திய நிதி ஒதுக்கீட்டில் இம்மாநிலங்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும், வரி விகிப்பதில் சலுகை கொடுக்கப்படும். இத்தகைய நிலையில் ஆந்திரப் பிரதேசம், பீகார், கோவா, ஒடிஷா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டி கோரிக்கைகள் விடுத்து வருகின்றன.

 இந்நிலையில் காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்தை பறிப்பதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் இருக்கின்றன. நாடு முழுவதும் அமலாக்கப்படும் சட்டங்கள் காஷ்மீருக்கு மட்டும் பொருந்தாது என்பதாலும், அதுவும் அம்மாநிலம் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை வகிக்கும் மாநிலம் என்பதாலும், பாகிஸ்தானை வைத்து அரசியல் செய்யமுடியும் என்பதாலும் காலம் காலமாக பிற மாநிலங்களின் கண்ணை உறுத்தி வந்தது.

பாகிஸ்தானிலிருந்து ஊடுருவும் தீவிரவாதம், தனி நாடு கோரிக்கை ஆகிய காரணங்களால் ஆரம்பம் முதலே ராணுவ அடக்குமுறைகளை சந்தித்து வந்த காஷ்மீரிகளினிடையே இந்தியா மீதான வெறுப்பு வளர்த்துக் கொண்டே வந்தது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 மற்றும் 35A ஆகிய இந்திய அரசியல் சட்டப்பிரிவுகள் நீக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்த பாஜக தற்போது தான் சொன்னதை செய்திருக்கிறது.

பாஜக கூட்டணியில் காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்த மெஹ்பூபா முஃப்தி கடந்த 2018ஆம் ஜூன் மாதம் பதவி விலகியதைத் தொடர்ந்து இன்றுவரை பல்வேறு காரணங்களைக் கூறி அங்கு தேர்தல் நடத்துவதைத் தவிர்த்து வந்த அரசு 2019 இந்திய பொதுத் தேர்தல் நடக்கும்போதாவது காஷ்மீர் சட்டமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பாராளுமன்ற தொகுதிகளில் மட்டும் காஷ்மீரில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீர் சட்டமன்றத்திற்கு தற்போது தேர்தல் நடத்த முடியாது என்று அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

கடந்த மாத இறுதியில் வருடாவருடம் நடைபெறும் இந்துக்களுக்களின் புனித யாத்திரையான அமர்நாத் யாத்திரை தீவிரவாதத் தாக்குதல் நடக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி தடை செய்யப்பட்டது. ஆனால் புல்வாமா, பதன்கோட் மற்றும் இரண்டு வருடங்களுக்கு முன் இதே அமர்நாத் புனித யாத்திரை நடந்த போது நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல்களின் விசாரணை விவரங்கள் குறித்து எந்த விவரமும் அரசின் தரப்பு வாய்திறக்க மறுத்து வருகிறது. மேலும் அத்தாக்குதல்களுக்கு காரணமாய் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பேற்று எந்த அமைச்சரும் அதிகாரியும் பதவி விலகவுமில்லை. இந்நிலையில் இதே அமர்நாத் யாத்திரையை காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டிருந்தால் இந்துக்களுக்கு எதிரான அரசாக பிம்பப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க வக்கற்ற அரசாக காங்கிரஸை பாஜக கடுமையாக சாடி அரசியல் செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அமர்நாத் யாத்திரைக்கு வெளிமாநிலங்களிலிருந்து வந்திருந்த யாத்திரிகர்களை அவசர அவசரமாக சொந்த ஊர்களுக்கு அரசு வெளியேற்றியது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் விடுதியில் தங்கிப் பயின்ற மாணவர்களை அவசர அவசரமாக எந்தக் காரணமும் கூறாமல் சொந்த ஊர் திரும்பச்செய்தது. ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் ஒரு வாரமாக காஷ்மீர் முழுவதும் குவிக்கப்பட்டனர். ஆகஸ்ட் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு காஷ்மீர் முழுவதும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. செல்போன், இண்டர்நெட், எஸ்எம்எஸ், ப்ராட்பேண்டு, தொலைக்காட்சி இணைப்புகள் அனைத்தும் முடக்கப்பட்டன. ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முஃப்தி ஆகிய மூன்று முன்னாள் காஷ்மீர் முதலமைச்சர்கள் வீட்டுக்காவலில் சிறைபிடிக்கப்பட்டனர். ஊடகங்களுக்கு காஷ்மீர் முழுவதும் தடை விதிக்கப்பட்டது. அங்கே என்ன நடக்கிறது என்றே வெளியே தெரியாத வகையில் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

அந்நிலையில் திங்கட்கிழமை ஆகஸ்ட் 5ஆம் தேதி அவசரமாகக்கூடிய பாராளுமன்றத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியல் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35A ஆகிய சட்டப்பிரிவுகள் நீக்கப்படுவதாகவும், காஷ்மீர் மாநிலத்தை 1. லடாக், 2. ஜம்மு & காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு அவசர சட்டத்திருத்தங்களை எவ்வித விவாதமுமின்றி தாக்கல் செய்தார்.

திடீரென தமிழகம் முழுவதும் ராணுவத்தை குவித்து, தீவிரவாதத் தாக்குதல் நடக்கப்போவதாகப் பொய் சொல்லி, இண்டர்நெட், செல்போன், லேண்ட்லைண், எஸ்எம்எஸ், தொலைக்காட்சி இணைப்புகள் அனைத்தும் எந்தக் காரணமும் சொல்லப்படாமல் துண்டிக்கப்பட்டு, தமிழக முன்னாள்/இந்நாள் முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா வீட்டுக்காவலில் சிறைபிடிக்கப்பட்டு, தமிழக அரசு கலைக்கப்படுவதாக தமிழகம் தவிர்த்து இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டு, வெளியே என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தமிழர்கள் இருட்டடிப்பில் வைக்கப்பட்டு தமிழகத்தில் இந்தி தான் ஆட்சி மொழி என்றும் தமிழில் இனி யாரும் பேசக்கூடாது என்றோ, தமிழகம் இரண்டு மூன்று மாநிலங்களாகவோ யூனியன் பிரதேசங்களாகவோ தமிழகம் பிரிக்கப்படுகிறது என்றோ தமிழக அரசிடமோ அல்லது அரசியல்வாதிகள், தமிழக கட்சிகள் என யாரிடமும் எதுவும் கருத்து கேட்காமல், யாரிடமும் காரணம் சொல்லாமல் டெல்லியிலிருந்து தமிழகத்தின் தலையெழுத்தை விரும்பிய வகையில் ஒரே நாளில் மாற்றினால் நமக்கு எப்படி இருக்கும்?

நினைத்துப் பார்க்கவே கடினமாக இருந்தாலும் காஷ்மீரில் நடந்தது, நடந்துக் கொண்டிருப்பது இது தான். தங்கள் உரிமை நிலைநாட்டப்படும் என்ற உத்தரவாதத்தில் இந்தியாவுடன் இணைந்தவர்களின் அனைத்து உரிமைகளும் இன்று பறிக்கப்பட்டுள்ளன. எவ்வித தொலைத்தொடர்புமின்றி இன்றுவரை அம்மாநில மக்கள் தவிக்கும் நிலையில் ஜம்மு & காஷ்மீரில் அமைதி நிலவுவதாகவும், இனி அங்குச் சென்று இந்தி, தமிழ், தெலுங்கு சினிமா படப்பிடிப்பு நடத்தலாம் என்றும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடந்த 8ஆம் தேதி உரை நிகழ்த்தினார். மேலும் காஷ்மீரிகளுக்கு பக்ரீத் வாழ்த்துக்களையும் மோடி கூறினார். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் பேச்சு காஷ்மீர் மக்களால் பார்க்கவோ, கேட்கவோ, படிக்கவோ முடியாது!

70 ஆண்டுகளாக வளர்ச்சியின்றி தவிக்கும் ஜம்மு & காஷ்மீர் இனி பெரும் வளர்ச்சியடையும் என்று உத்தரவாதம் தருகிறோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். ஆனால் அனைத்து மனித வளக்குறியீடுகள், பொருளாதாரக் குறியீடுகளிலும் பெரும்பான்மையான இந்தி பேசும் மாநிலங்களை விட காஷ்மீர் மாநிலம் சிறந்து விளங்குவதாகவே புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஆதாரம்: Data doesn’t support Amit Shah’s claim that Article 370 deprived J&K of development

இந்தியாவின் பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவரும் நிலையிலும், இந்தியப் பொருளாதாரம் உலகின் பெரிய பொருளாதாரங்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்திலிருந்து ஏழாம் இடத்திற்கு தள்ளப்பட்டதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையிலும் மக்களை முழுமையாக திசைத்திருப்பும் வேலையாக மட்டுமே அரசின் இந்த நடவடிக்கை இருக்கிறது.

p07k2pwt.jpg
ஆதாரம்: பிபிசி

மேலும் காஷ்மீரிகள் இந்நடவடிக்கையை வரவேற்பதாகவும் கொண்டாடுவதாகவும் பிம்பத்தை ஏற்படுத்த முயலும் அரசு, ஏன் இன்னமும் காஷ்மீரில் தொலைத்தொடர்புகளை முடக்கியே வைத்துள்ளது என்பதற்கு உடனடியாக பதில் சொல்லியாக வேண்டும். அடக்குமுறைகளுக்கு ஆதாரமாக காஷ்மீரிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளின் இணையதளங்களில் கடைசியாக செய்தி வெளிவந்த தினத்தை வைத்துத் தெரிந்துக்கொள்ளலாம். ஆகஸ்டு 4-5ஆம் தேதிக்குப் பிறகு காஷ்மீரின் எந்த செய்தித்தளங்களிலும் எந்த செய்தியும் இல்லை.

ஆதாரம்: Kashmir news websites not updating amid internet shutdown

எமர்ஜென்ஸியையும் தாண்டி ஒன்றே கால் கோடி மனிதர்களைக் கொண்ட ஒரு பெரும் சிறைச்சாலையாகவே காஷ்மீர் நிலவுகிறது. இந்நிலையில் காஷ்மீரில் வெடித்துள்ள போராட்டங்கள், அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களையும் அம்பலப்படுத்தி காணொளி வெளியிட்டுள்ளது பிபிசி செய்தி நிறுவனம்.

 

ஓரளவிற்கேனும் அமைதியாக நிலவிய காஷ்மீர் சூழலை இந்நடவடிக்கை மேலும் மோசமாக்கியுள்ளதே தவிர சற்றும் காஷ்மீர் பிரச்சினை தீர்வை நோக்கி நகரவில்லை. காஷ்மீர் பிரச்சினை தீர வேண்டுமெனில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் மீட்கப்பட வேண்டுமே தவிர காஷ்மீர் மக்களின் உரிமை பறிக்கப்படக் கூடாது. இது பிரிவினையை உருவாக்குமே தவிர சற்றும் அமைதியை உருவாக்காது. இது இந்தியாவுடன் ஒன்றி வாழவேண்டும் என்று நினைக்கும் காஷ்மீரிகள் மத்தியிலும் கூட கிளரச்சியை ஏற்படுத்தும் நடவடிக்கையே அன்றி வேறில்லை. காஷ்மீர் என்பது வெறும் புவியியல் சார்ந்த, வளம்மிக்க நிலமாகவே மட்டும் பார்ப்பது சர்வாதிகார ஃபாசிச பார்வை மட்டுமே. அம்மக்கள் தான் காஷ்மீர். அம்மக்களையே சிறைப்படுத்தி அம்மக்களின் உணர்வுகளை நசுக்கி, உரிமைகளைப் பறித்து, படைகள் சூழ சுற்றிவளைத்து இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது சர்வாதிகாரமன்றி மக்களாட்சி இல்லவேயில்லை. இந்த வரலாற்றுப்பிழை என்றும் இந்தியாவின் மீது படிந்த கறையாக நிரந்தரமாக நிலைத்திருக்கும்.

மேலும் ஒரு தேசம், ஒரே சட்டம் தான் என்று கூறுபவர்களின் அடிப்படையே தவறு. இந்தியா என்ற தேசம் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, ஒரே இனம், ஒரே உணர்வுகள் கொண்ட தேசமன்று. பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், பண்பாடுகள், எண்ணற்ற தேசிய இனங்களின் கூட்டு தான் இந்திய ஒன்றியம். இங்கே ஒரு இடத்திலிருந்து முடிவெடுக்கப்படும் யாவும் அனைவரையும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே பிழையானது. உண்மையில் காஷ்மீருக்கு மட்டுமின்றி ஒவ்வொரு இந்திய மாநிலத்திற்கும் தேவை சிறப்பு அந்தஸ்து. ஒவ்வொரு மாநில மக்களும் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் அரசு மத்திய அரசின் சில சட்டதிட்டங்களை தங்களுக்கு வேண்டாமென முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றினால் அச்சட்டங்கள் அம்மாநிலத்திற்கு பொருந்தக்கூடாது. அது தான் உண்மையான கூட்டாட்சித்துவம். பாதுகாப்பு, நிதி, விண்வெளி ஆராய்ச்சி போன்ற சில துறைகளை தவிர்த்து இன்னபிற அனைத்து துறைகளும் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதே நியாயம். மாறாக அனைத்து அதிகாரமும் ஓரிடத்தில் மத்தியில் குவிந்தால் அது ஃபாசிசத்திலேயே முடிவடையும்.

காஷ்மீரிகளைக் கேட்காமல் மற்ற அனைத்து இந்திய மாநிலங்களின் அனைத்து எம்பிக்கள் ஆதரவுடனே இச்சட்டத்தைக் கொண்டு வந்திருந்தாலும் அது ஃபாசிசமே. ஒரு பிரச்சினையில் நேரடியாக, சம்மந்தப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தான் அதன் முழு பரிமாணம் புரியும். பாதுகாப்பாக இங்கே அமர்ந்துக் கொண்டு நம் இஷ்டத்திற்கு முழங்குபவர்களுக்கு கள நிலவரம், யதார்த்தம், வாழ்க்கை புரியாது. அந்த மக்களோடு மக்களாக ஒரு ஆறு மாதம் வாழ்ந்து, அவர்களின் வரலாறு, வாழ்க்கை முறை, எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள், அவர்களின் அச்சங்கள், கோபங்களை உள்வாங்கினால் ஓரளவு புரியலாம். ஒரு இனத்தின் பிரச்சினைகளை வெளியே இருந்து முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாது. ஈழ மக்கள், சேரியில் வாழும் தலித்துகள் போன்றவர்களின் பிரச்சினைகளுக்கும் இது பொருந்தும். வெளியே இருப்பவர்களினால் முழுமையாக புரிந்துக்கொள்ள முடியாது.

நமக்கு புரியாவிட்டாலும், எதையும் புரிந்துக்கொள்ளாமல், எந்த வரலாறும் தெரியாமல் அரசின் நடவடிக்கையை வரவேற்பது உங்கள் மூளை மழுங்கடிக்கப்பட்டதன் சாட்சி மட்டுமே. இவை அனைத்தும் கடந்து லோக் சபாவிலும் ராஜ்ய சபாவிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால் போதும், டெல்லியிலிருந்து உங்களின் எந்த உரிமையை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பறித்து, என்ன வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம் என்றெண்ணி ஆட்சி நடத்தும் அரசை எதிர்த்து நீங்கள் கேள்வி கேட்கவில்லையெனில் நாளை உங்களைக் குறிவைக்கும்போது எதிர்த்து குரல் கொடுக்க இங்கே எவரும் இருக்க மாட்டார்கள்.

முகப்புப்படம்: foreignpolicy.com

What do you feel about this?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s